ஆன்மிகம்

அமானுஷ்ய ஆன்மிகம் : ஷாமனிஸத்தின் நவீன உருமாற்றம் + "||" + Modern Transformation of Shamenism

அமானுஷ்ய ஆன்மிகம் : ஷாமனிஸத்தின் நவீன உருமாற்றம்

அமானுஷ்ய ஆன்மிகம் : ஷாமனிஸத்தின் நவீன உருமாற்றம்
கால ஓட்டத்தில் சமூகத்தின் தேவைகளும், நிலைகளும் பலவாறு மாறியதால் ஷாமனின் நிலையும், ஷாமனிஸமும் சமூகத்தில் பல மாற்றங்களைக் கண்டது.
ழங்காலத்தில் ஷாமனுடைய நிலை சமூகத்தில் மிக உயர்ந்ததாய் இருந்தது. நோய்களில் இருந்து காப்பது முதல் பல்வேறு பிரச்சினைகளில் இருந்து காப்பது வரை ஷாமனின் தயவு சமூகத்திற்குத் தேவை இருந்தது. அவனுடைய திறன் குறையாமல் அவன் பார்த்துக் கொள்வது சமூகத்திற்கு மிகவும் அவசியமாய் இருந்தது. அவனுடைய திறமைக்குறைவு அல்லது கவனக்குறைவு தங்கள் நன்மைகளைக் குறைக்கலாம் அல்லது தீமைகளைப் பெருக்கலாம் என்கிற எச்சரிக்கை உணர்வு இருந்ததால் ஷாமன் மற்றவர் களைப் போல வேலைகள் செய்யவோ வேட்டைக்குப் போகவோ வேண்டியிருக்கவில்லை. அவனுக்குத் தேவையானதை சமூகமே அவனுக்கு அளித்து வந்தது. ஏழைகள் ஒரு சிறு பங்கையும், செல்வந்தர்கள் பெரும்பங்கையும் அளித்து ஷாமனுடைய அத்தியாவசியத் தேவைகளைக் கவனித்துக் கொண்டார்கள்.

விலங்குகள், தானியங்கள், வேறு அத்தியாவசியத் தேவைப் பொருட்கள் எல்லாம் தந்து ஷாமனுடைய கவனம் முழுவதுமாக சமூக நன்மையிலேயே இருக்கும்படியும், அவன் அத்தியாவசியத் தேவைகளுக்குக் கவனம் செல்லும் அவசியம் இல்லாதபடியும் பார்த்துக் கொண்டார்கள். விதிவிலக்காக வட சைபீரியா போன்ற சில பகுதிகளில் சமூகத்தின் தலைவனாகவே ஷாமன் உருமாறியது உண்டு. 17 மற்றும் 18-ம் நூற்றாண்டு களில் சில பகுதிகளில் ஷாமன் போருக்குத் தலைமை தாங்கிப் போனதும் உண்டு. ஆனால் பொதுவாக சமூக நலத்துக்காக, சமூகத்தின் பாதுகாவலனாகவே ஷாமன் வாழ்ந்தான்.

கால ஓட்டத்தில் சமூகத்தின் தேவைகளும், நிலைகளும் பலவாறு மாறியதால் ஷாமனின் நிலையும், ஷாமனிஸமும் சமூகத்தில் பல மாற்றங்களைக் கண்டது. நவீன நாகரிகம் தொட்டு விடாத பழங்குடி மக்கள் மட்டுமே, பழைய ஷாமனிஸ முறைகளை அப்படியே பின்பற்றி வந்தார்கள். இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞானத்தின் கவனமும் ஷாமனிஸம் பக்கம் வந்ததைக் குறிப்பிட்டிருந்தோம். அது ஷாமனிஸத்தை புதிய பார்வை கொண்டு நவீன மனிதனைப் பார்க்க வைத்தது.

இக்கால அறிஞர்களும், ஆராய்ச்சியாளர்களும் ஷாமனிஸத்தையும் ஷாமனிஸ சடங்குகளையும் அறிவியல் வழிகளில் ஆராய்ந்தார்கள். ஷாமனிஸ அம்சங்களில் எதெல்லாம் அறிவார்ந்ததாக இருக்கிறதோ, எதற்கெல்லாம் வலிமையான காரணத்தைக் கண்டுபிடிக்க முடிகிறதோ அதை எல்லாம் எடுத்துக்கொண்டார்கள். எதன் தேவைகள் எல்லாம் இக்காலத்தில் ஒழிந்து விட்டதோ, எதெல்லாம் இக்கால மனிதனுக்கு அனாவசியமாக மாறி விட்டதோ அதை எல்லாம் விலக்கி வைத்தார்கள். இப்படி காலத்திற்கு ஏற்றது போலவும், நவீன மனிதனின் தேவைக்கு ஏற்றது போலவும் வடிகட்டப்பட்டு நவீன ஷாமனிஸம் (neoshamanism) உருவானது. அப்படி நவீன ஷாமனிஸம் கண்ட சில உருமாற்றங்களையும், உருமாற்றியவர்களையும் இனி பார்ப்போம்.

மைக்கேல் ஹார்னர் (Michael Harner ) என்ற அறிஞர் 1960-ம் ஆண்டு முதல் 1970-ம் ஆண்டு வரை அமேசான் காடுகளில் இருந்த ஹீவரோ பழங்குடி மக்களின் ஷாமனிஸத்தை மிக ஆழமாக ஆராய்ந்தவர். அவர் 1970-ம் ஆண்டு அமெரிக்கா திரும்பி வந்து சில அமெரிக்க பழங்குடி மக்களின் ஷாமனிஸத்தையும் ஆராய்ந்தார். பின் 1980-ம் ஆண்டு The Way of the Shaman என்ற நூலை வெளியிட்டார். அதில் அவர் அமேசான் காடுகளிலும், மற்ற அமெரிக்கப்பழங்குடி மக்களிடத்தும் தான் கண்ட ஷாமனிஸ வழிமுறைகளையும், தனக்கேற்பட்ட அனுபவங்களையும் எழுதியதோடு அந்த சடங்குகளுக்குப் பின்னணியில் உள்ள அறிவியல் காரணங்களையும் எழுதினார். அந்த நூல் அமெரிக்காவில் மிகவும் பிரபலமாகவே, 1985-ம் ஆண்டு ஷாமனிஸ ஆய்வு நிறுவனம் ஒன்றை நிறுவி, அமெரிக்காவில் பல பகுதிகளிலும் ஷாமனிஸ பயிற்சி வகுப்புகளை நடத்தி வருகிறார். அந்தப் பயிற்சி வகுப்புகளில் ஷாமனிஸ முறைகளைப் பயன்படுத்தி உயர் உணர்வு நிலைகளுக்குச் செல்லும் வழிகளை பயிற்றுவிக்கிறார். அந்தப் பயிற்சிகள் பல பகுதிகளில் இருக்கும் ஷாமனிஸத்தின் அம்சங்கள் கலந்து உருவாக்கப்பட்டவையாக இருக்கின்றன.

மைக்கேல் ஹார்னர் அங்கு படிக்க வருபவர்களுக்கு எப்படி ஷாமனிஸ யாத்திரை உணர்வுரீதியாகச் செல்ல வேண்டும் என்பதையும் தங்களுக்கான விலங்கு சக்திகளையும், ஆவி நிலை ஆசிரியர் களையும் எப்படிக் கண்டு கொள்வது என்பதையும் சொல்லித் தரு கிறார். தங்களையும், மற்றவர்களையும் குணமாக்கும் ஷாமனிஸ முறைகளையும் கூட அவர் கற்றுத் தருகிறார் என்றாலும் பெரும்பாலான மாணவர்கள் தங்களைக் குணப்படுத்திக் கொள்வதிலும் தங்கள் உடல்நலத்தை அபிவிருத்தி செய்வதிலுமே அதிக கவனம் செலுத்துகிறார்கள்.

இன்னொரு ஷாமனிஸ ஆராய்ச்சியாளர் சான்பிரான்சிஸ்கோ மாநில பல்கலைக்கழகத்தில் உளவியல் துறையின் பேராசிரியராக இருந்த ஆல்பர்ட்டோ வில்லோல்டோ (Alberto Villoldo). அவரும் அமேசான் காடுகள் மற்றும் பெரு பாலைவனம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் ஷாமனிஸ மக்களின் சடங்குகளையும், மற்ற அம்சங் களையும் ஆராய்ந்து 1984-ம் ஆண்டு Four Winds Society என்ற ஷாமனிஸ சிகிச்சைமுறைக் கல்வியமைப்பை உருவாக்கினார். இங்கு கற்க வருபவர்களுக்குத் தங்களைக் குணப்படுத்திக் கொள்ள மட்டுமல்லாமல் தங்கள் சக்திகளை பெருக்கிக் கொள்ளவும் ஆல்பர்ட்டோ வில்லோல்டோ கற்றுத்தருகிறார். ஒவ்வொருவரும் தங்கள் சக்திகளின் உச்சத்தை உணர வேண்டும் என்பதும் அதை ஷாமனிஸ முறைகளில் உணர முடியும் என்பதும் அவர் எதிர்பார்ப்பும் நம்பிக்கையுமாக இருக்கிறது. இவரும் ஷாமனிஸம் குறித்த சில பிரபல நூல்களை எழுதியிருக்கிறார்.

இவர்களைப் போலவே Dr. Hank Wesselman, Tom Cowan, போன்ற அறிஞர்களும் ஷாமனிஸ அம்சங்களை உள்ளடக்கிய பயிற்சிகளை அமெரிக்காவில் கற்றுத் தரு கிறார்கள். இவர்களைப் போன்ற ஆராய்ச்சியாளர்கள், பயிற்சியாளர்கள் ஷாமனிஸத்தைச் சொன்ன விதம் இக்கால மனிதனைக் கவருவதாக இருக்கிறது. ஷாமனிஸத்தில் சொல்லப்பட்ட சக்திகள், ஷாமனிஸத்தில் பிரபஞ்ச சக்திகளுடன் மனிதன் ஒருமித்து சக்தி படைத்தவனாய் இருக்க முடிவதாய் சொல்லப்படும் கருத்துகள் எல்லாம் நவீன மனிதனை ஷாமனிஸத்தைப் பிரமிப்போடு பார்க்க வைத்தது. ஒரு மேற்கத்திய இளைஞன் நேபாள நாட்டு ஷாமன் ஒருவனிடம் வியந்து சொன்னான். ‘பிரபஞ்ச சக்தியோடு இணைந்து அமைதியாக வாழ முடிவது எவ்வளவு அழகான வாழ்க்கை’.

அதற்கு அந்த ஷாமன் சொன்னான். ‘என்னுடைய முக்கிய வேலை தீய சக்திகளை அழிப்பது. ஒவ்வொரு முறை சடங்கு மூலமாக நான் இந்த யுத்தத்தில் ஈடுபடுவதற்கு முன்பும் அச்சப்படாமல் என்னால் இருக்க முடியாது. ஏனென்றால் நான் அறிவேன், இந்த சடங்கின் முடிவில் இருவரில் ஒருவர் இறப்பது நிச்சயம்’.

இது ஷாமன் உணரும் நிஜத்திற்கும் வெளிப்பார்வையாளர்களின் ஷாமனிஸம் குறித்த கற்பனைக்கும் இடையே இருக்கும் மிகப்பெரிய வித்தியாசத்தை நமக்கு உணர்த்துகிறது. ஆனாலும் நவீன ஷாமனிஸம் ஆவி சக்திகள், தீய சக்திகள் நம்மை அழிக்க வல்லவை என்று பயப்பட வைக்க முனையவில்லை. மாறாக மனிதன் அவற்றை அழிக்க முடியும் என்கிற அடிப்படையிலேயே தீய சக்திகளை அணுகியது. அவை நம்மில் இருக்கும் பலவீனங்கள், நாமாக வளர்த்துக் கொண்ட தீய விஷயங்கள் என்றும் நாம் சக்தி பெற்றவர்களாக நம்மை ஆக்கிக் கொண்டால் அவற்றை அழித்து விட முடியும் என்ற பக்குவ நிலையிலேயே நவீன ஷாமனிஸம் கற்பிக்கப்படுகிறது.

பழங்கால ஷாமனிஸத்திற்கும், நவீன ஷாமனிஸத்திற்கும் இன்னொரு பெரிய வித்தியாசம் இருக்கின்றது. பழங்கால ஷாமனிஸத்தில் ஷாமனாக ஒருவன் தேர்ந்தெடுக்கப்படுகிறான், அவன் தன்னைச் சார்ந்தவர்களுக்காக அந்தச் சடங்கில் ஈடுபடுகிறான். ஆனால் நவீன ஷாமனிஸத்தில் தன் சொந்தத் தேவைகளுக்காகவும், உயர் உணர்வு நிலை அடைந்து கிடைக்கும் அனுபவத்திற்காகவும் தனி மனிதன் ஈடுபடுகிறான். அதனாலேயே நவீன ஷாமனிஸத்தில் ‘ஷாமன்’ என்கிற சொல் தவிர்க்கப்படுகிறது. அதற்குப் பதிலாக ‘ஷாமனிஸப் பயிற்சியாளர்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. மேலும் நவீன ஷாமனிஸத்தில், பழங்கால ஷாமனிஸத்தின் சாராம்சங்கள் தற்காலத் தேவைகளின்படியும், விஞ்ஞான முறைப்படியும் மாற்றம் செய்து கொண்டே பின்பற்றப்படுகிறது.

ஆனால் இந்த நவீன ஷாமனிஸத்தை பழங்கால ஷாமனிஸ மக்கள் ஏற்றுக் கொள்ள வில்லை. அவர்கள் புத்தகங்கள் மூலமாகவும், பயிற்சி வகுப்புகள் மூலமாகவும் ஷாமனிஸத்தை குறுகிய காலத்தில் யாரும் கற்றுக் கொண்டு விட முடியாது என்கிறார்கள். பணம் வாங்கிக் கொண்டு கற்பிப்பதும், பணம் வாங்கிக் கொண்டு நோய்களை குணப்படுத்துவதும் ஷாமனிஸத்தின் அடிப்படைக் கொள்கைக்கே எதிரானது என்றும் கூறுகிறார்கள். ஆனாலும் நவீன ஷாமனிஸம் மேலை நாடுகளில் பல தரப்பு மனிதர்களையும் கவர்ந்து பிரபலமாகி வருகிறது என்பதே உண்மை.