நற்செய்தி சிந்தனை : நிலையான வாழ்வு
மத்தேயு என்ற நற்செய்தியாளர் எழுதிய நற்செய்தியைப் பற்றி ஒரு கணம் சிந்திப்போம். செயல்பட முயற்சிப்போம். இதோ அந்த நற்செய்தியின் வாசகம்.
அக்காலத்தில் செல்வம் பெற்றிருந்த இளைஞர் ஒருவர், இயேசு பெருமானிடம் வந்தார். அவரிடம் நேரிடையாகவே, கீழ்க்கண்ட கேள்வியைத் தொடுக்கிறார்.
“போதகரே! நிலையான வாழ்வைப் பெறுவதற்கு, என்ன நன்மையை நான் செய்ய வேண்டும்?” என்று கேட்டார்.
இயேசு பெருமான் அவரிடம், “நன்மை செய்வதைப் பற்றி என்னை ஏன் கேட்கிறீர்? நீர் நிலையான வாழ்வை அடைய விரும்பினால், ‘கட்டளைகளைக் கடைப்பிடித்து ஒழுகும்’ என்று கூறினார்”.
அந்த இளைஞர் அவரிடம், ‘எவற்றை?’ என்று கேட்டார்.
இயேசு மறுமொழியாக அவரிடம், “கொலை செய்யாதே! விபசாரம் செய்யாதே! களவு செய்யாதே! பொய்ச்சான்று சொல்லாதே! பெற்றோரை மதித்து நடந்து கொள். மேலும் உன் மீது நீர் அன்பு கூர்வது போல, உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக!” என்று கூறினார்.
அந்த இளைஞர் அவரிடம், “இவை அனைத்தையும் நான் கடைப்பிடித்து வந்திருக்கிறேன். இன்னும் என்னிடம் என்ன குறை இருக்கிறது?” என்று கேட்டார்.
அதற்கு இயேசு பெருமான், “நிறையுள்ளவராக விரும்பினால், நீர் போய் உம்முடைய உடைமைகளை விற்று, ஏழைகளுக்குக் கொடும். அப்பொழுது விண்ணுலகில் நீர் செல்வராக இருப்பீர். பிறகு வந்து என்னைப் பின்பற்றும்” என்றார்.
அவர் சொன்னதைக் கேட்ட அந்த இளைஞர், மிகவும் வருத்தத்தோடு, அவ்விடம் விட்டு அகன்று சென்று விட்டார்.
ஏனென்றால், அவருக்கு ஏராளமான ‘சொத்துகள்’ இருந்தன.
இந்த நற்செய்தியைப் படிக்கும் நாம் ஒரு கணம் சிந்திக்க வேண்டும்.
இயேசு பெருமானிடம் வந்த இளைஞர், அவரிடம் முதலில் தொடுக்கும் வினாவைக் கவனிப்போம்.
நிலையான வாழ்வைப் பெறுவதற்கு என்ன நன்மையைச் செய்ய வேண்டும்? என்று கேட்கிறார்.
இவ்வுலகம் நிலையில்லாதது என்பதை உணர்ந்ததனால், இக்கேள்வியைக் கேட்டாரா? அல்லது இருக்கும் நிலையிலேயே இருந்து கொண்டு, நிலையான வாழ்வைப் பெறத் துடிக்கிறாரா? என்ற சந்தேகம், நம்மிடையே வலம் வருகிறது. எப்படியிருந்தாலும் நிலையான வாழ்வு ஒன்று வேண்டும் என்பதை அனைவருமே விரும்பத்தான் செய்கின்றனர்.
அப்படிப்பட்ட நிலையான வாழ்வை, நன்மை செய்தால் அடைய முடியும் என்பதை உணர்ந்த அந்த இளைஞன், நிலையான வாழ்வை, எளிதில் பெற்று விட வழியிருக்கிறது என்பதை எண்ணி இப்படி ஒரு கேள்வியைத் தொடுத்தாரா?
உடனே இயேசு பெருமான் மறுமொழியாக, நன்மை செய்வதைப் பற்றி என்னிடம் ஏன் கேட்கிறாய்? கட்டளைகளைக் கடைப்பிடித்து நடந்தால், நிலையான வாழ்வைப் பெறலாம் என்று வழி காட்டு கிறார்.
கட்டளைகளை அறிந்திராத இளைஞர், ‘எவற்றை’ என்ற கேள்வியைத் தொடுக்கிறார்.
‘கொலை, களவு, விபசாரம், பொய்ச்சான்று போன்றவற்றைச் செய்யாதே - இதுவே கட்டளை’ என்பதை எடுத்துரைக்கிறார், இயேசு பெருமான்.
இவை அனைத்தையும் கடைப்பிடித்து விட்டதாக இளைஞர் பதில் கூறுகிறார். அதோடு விட்டு விடாத அந்த இளைஞர், ‘இன்னும் என்னிடம் வேறு என்ன குறை இருக்கிறது’ என்றும் வினாவைத் தொடர்கிறார்.
அந்த இளைஞனைப் பற்றி அறிந்தவராக இருந்த காரணத்தினால், இப்படி ஒரு செயலைச் செய்யச்சொல்கிறார்.
இதோ! இயேசு பெருமான் சொன்ன அந்த வார்த்தைகளை நன்கு கவனிப்போம்.
“நிறைவுள்ளவராக விரும்பினால், உம் முடைய உடைமைகளை எல்லாம் விற்று, ஏழை மக்களுக்குக் கொடும். அப்படிச் செய்தால் வான் வீட்டில், நீர் செல்வம் உடையவராக இருப்பீர். பிறகு வந்து என்னைப் பின்பற்றும்” என்று கூறினார்.
இவ்வுலகிலே நிரந்தர வாழ்வைச் சொத்து சுகங்களோடு இணைந்து அனுபவிக்க எண்ணும் இவர் எப்படி இதற்கு ஒப்புக் கொள்வார்?
அதனால் இவ்வார்த்தைகளைக் கேட்ட ‘செல்வந்த இளைஞர்’ அவ்விடத்தை விட்டு அகன்று சென்று விட்டார்.
இந்நற் செய்தியை இக்காலத்திற்கு ஏற்றாற்போல் சிந்தித்துப் பாருங்கள்.
சிலர் வாழையடி வாழையாய்ச் சொத்துகளைச் சேர்ப்பதும், அவற்றைத் தானும், தன் வாரிசுகளுமே அனுபவித்து மகிழ்வதும், நம்மிடையே வாழும் ஏனைய மனிதர்களைப் பற்றிச் சிந்திக்காமல் இருப்பதும் வாடிக்கையாகப் போய் விட்டது.
எந்த மனிதரும் இந்த உலகில் நிரந்தரமாக வாழ்ந்து விடப்போவதில்லை. இந்நிலையை உணர்ந்தும், ஏன் இந்த நிலை? ‘தான்’ ‘தனக்கு’ என்று வாழ்வதால் என்ன பயன்? சமுதாயத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டுமல்லவா?
அதனால்தான் இயேசு பிரான், இவ்வார்த்தைகளைக் கூறுகிறார், “அழியாத சொத்தை நீ அனுபவிக்க வேண்டுமா? அழியும் சொத்துக்கு ஆசைப்படாதே! அழியாத அந்தச் சொத்தைத் தேடு. அதற்கு நீ செய்ய வேண்டியது என்ன? உன் மீது நீ அன்பு கூர்வது போல, உனக்கு அடுத்து இருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக” என்று கூறுகிறார்.
இவ்வாசகத்தில் இருந்து நாம் உணர்வது என்ன? நீ உன் மீது அன்பைப் பொழிவது போல, உனக்கு அடுத்திருக்கும் அனைவர் மீதும் அன்பைப் பொழி. அவ்விதம் பொழிந்தால், உனக்கு, ‘தான்’, ‘தனக்கு’ என்ற சுயநல எண்ணம் வர வாய்ப்பில்லை. தான், தனக்கு என்பதெல்லாம், சுயநலம் என்ற எண்ணத்தைப் பலப்படுத்துகிறது.
நிலையான வாழ்வும், நிலைத்த செல்வமும் இங்கு கிடையாது. இச்செல்வங்கள் அழியக்கூடியவை. கள்வர்கள் அபகரித்துக் கொள்வர் என்பதையெல்லாம், பல இடங்களில், பல சந்தர்ப்பங்களில், நற்செய்தி வாயிலாக, இயேசு பெருமான் எடுத்துரைக்கிறார்.
சில கட்டளைகளை கடைப்பிடிப்பதால் மட்டும், நிரந்தர வாழ்வை அடைந்து விட முடியாது.
உனக்கு இருக்கும் சொத்து சுகங்கள் எல்லாம் உன்னுடையது அல்ல என்பதை முதலில் உணர வேண்டும். அவ்விதம் உணர்ந்தால், ‘வெறுமையை’ உணர்ந்தவனாக வெளியே வர முடியும். அவ்விதம் வெறுமையை உணர்ந்து விட்டால், உன்னை அறியாமலேயே, ‘பிறர் சிநேகம்’ அதாவது ‘பிறர் மேல் அன்பு’ என்பது இயல்பாக வந்து விடும்.
பிறகு வாழ்க்கைப் பயணம் எளிதாகி விடும். நிரந்தர வாழ்வை நோக்கிப் பயணம் தொடர்ந்து விடும். இந்த நற்செய்தியைப் படிப்போர் முதலில் எண்ணுங்கள். பிறகு நல்வழியில் செயல்படுங்கள். மனித சமுதாயத்தில் நேர்மைத் தங்கங்களாக ஒளி வீசுங்கள். அன்பு விசாலமானது. அதுவே உயிரைப் பலப்படுத்தக் கூடியது என்பதை உணருங்கள்.
Related Tags :
Next Story