தம்பதியர் பிணக்கு தீர்க்கும் பெருமாள்


தம்பதியர் பிணக்கு தீர்க்கும் பெருமாள்
x
தினத்தந்தி 26 Sep 2017 1:30 AM GMT (Updated: 25 Sep 2017 10:52 AM GMT)

திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் நாராயண பெருமாள், தனது துணைவியார் லட்சுமி தேவியை தனது மடியில் அமர்த்தி ஒரு கரத்தால் தாயாரின் இடையை அணைத்தபடி சேவை சாதிக்கும் அழகை கண் குளிர காண வேண்டாமா?

திருப்பாற்கடலில் பள்ளிகொண்டிருக்கும் நாராயண பெருமாள், தனது துணைவியார் லட்சுமி தேவியை தனது மடியில் அமர்த்தி ஒரு கரத்தால் தாயாரின் இடையை அணைத்தபடி சேவை சாதிக்கும் அழகை கண் குளிர காண வேண்டாமா?

வாருங்கள் இடையாற்று மங்கலத்திற்கு..

இந்தத் திருத்தலத்தில்தான் உள்ளது லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோவில்.

ஆலய அமைப்பு

ஆலயம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. முகப்பைத் தாண்டி உள்ளே நுழைந்ததும் அழகான சிறப்பு மண்டபம். அதை அடுத்து மகாமண்டபம். இந்த மண்டபத்தின் நடுவே கருடாழ்வாரின் தனி மண்டபம் உள்ளது. கருடாழ்வார், நாராயணப் பெருமாளைப் பார்த்தப்படி நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார். மண்டபத்தின் வலது புறம் ஆஞ்சநேயரின் சன்னிதி உள்ளது.

அடுத்துள்ள அர்த்த மண்டப நுழைவாசலின் இருபுறமும் துவாரபாலகர்களின் சுதை வடிவ திருமேனி அலங்கரிக்க அர்த்த மண்டபத்தில் பெருமாளின் உற்சவத் திருமேனி உள்ளது.

உற்சவர் இங்கு ஸ்ரீ வரத ராஜப் பெருமாள் என்ற திருநாமத்துடன் ஸ்ரீதேவி பூதேவியுடன் சேவை சாதிக்கிறார். அடுத்துள்ள கருவறையில் பெருமாள் ஸ்ரீ லட்சுமி நாராயணன் என்ற திருநாமத்துடன் கீழ்திசை நோக்கி அருள்பாலித்து வருகிறார்.

கணவன்– மனைவி  ஒற்றுமை

தாயாரை மடியில் இருத்திய நிலையில் சேவை சாதிக்கும் மூலவரை ஆராதிப்பதால், கணவன் – மனைவி ஒற்றுமை ஓங்கும் எனவும், மன வேறுபாடு காரணமாக பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர் என்கின்றனர் பக்தர்கள்.

தம்பதிகள் மனம் ஒத்து மகிழ்வோடு இல்லறம் நடத்த, இத்தல பெருமாள் அருள்புரியக் கூடியவர் என்பதும் பக்தர்களின் நம்பிக்கையே! குறிப்பாக திருவோண நட்சத்திரங்களில் பெருமாளையும், தாயாரையும் ஆராதனை அபிஷேகம் செய்து வணங்குவது கூடுதல் சிறப்பு தரும் செயலாகும்.

உற்சவர் வரதராஜப் பெருமாள் அனைத்து வரங்களையும் தரக்கூடியவர். வைகுண்ட ஏகாதசி, கோகுலாஷ்டமி, புரட்டாசி சனிக்கிழமைகள் ஆகிய நாட்களில் பெருமாளுக்கும் தாயாருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. வைகுண்ட ஏகாதசி அன்று பெருமாளும் தாயாரும் வீதியுலா வருவதுண்டு.

இங்கு அருள்பாலிக்கும் ஆஞ்சநேயர் கன்னிப் பெண்களின் கண்கண்ட தெய்வம்.  தங்களுக்கு நல்ல கணவர்  அமைய வேண்டும் என்று வேண்டிக்கொள்ளும் கன்னியரின் கவலையை நீக்கி அவர்களுக்கு நல்ல துணைவரை இவர் அமைத்து தருவதாக கன்னிப் பெண்கள் நம்புகின்றனர்.

தங்கள் பிரார்த்தனை நிறைவேறியதும் ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலையும், வடை மாலையும் சாத்தி தங்கள் நன்றிக் கடனை மன நெகிழ்வோடு கணவரோடு வந்து தெரிவித்துக் கொள்கின்றனர், கன்னியராய் இருந்து மனைவி என்ற பதவியில் அமரும் அந்தப் பெண்கள்.

அனுமன் ஜெயந்தி அன்று ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. மேலும், இந்த ஆஞ்சநேயரை மனமுருகி வேண்டினால் சனி தோ‌ஷ நிவர்த்தியும் ஏற்படுவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.

கொள்ளிடம் ஆற்றுக்கும் அய்யன் வாய்க்கால் என அழைக்கப்படும் நதிக்கும் இடையே இந்த தலம் அமைந்துள்ளதால், அதாவது இரு ஆறுகளுக்கும் இடையே அமைந்துள்ளதால் ‘இடையாற்றுமங்கலம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த ஆலயம் சுமார் 800 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்கிறார்கள்.

சந்தான கோபால கிருஷ்ணன்

இங்கு உற்சவர் வரதராஜப் பெருமாளின் அருகே, சுமார் 20 செ.மீ. உயரத்தில் சந்தான கோபால கிருஷ்ணனின் உலோகச் சிலை ஒன்று உள்ளது.

குழந்தை செல்வம் இல்லையே என ஏக்கத்துடன் இந்த ஆலயம் வரும் தம்பதியர் தங்களுடன் ஒரு சிறிய மரத்தொட்டிலை கொண்டு வருகின்றனர். அந்தத் தொட்டிலை இந்த ஆலயத்தில் கயிற்றிலோ அல்லது சேலையிலோ கட்டுகின்றனர். பின்னர் இந்த சந்தான கோபால கிருஷ்ணனை அந்தத் தொட்டியில் இட்டு தொட்டிலை மெல்ல ஆட்டுகின்றனர். சிலர் ரம்மியமாய் பாடுவதும் உண்டு.

பின்னர் மூலவருக்கு அர்ச்சனையோ அபிஷேக ஆராதனையோ செய்து விட்டு நிறைந்த மனதோடு இல்லம் திரும்புகின்றனர்.

இந்த தம்பதியர் மறு ஆண்டு தங்கள் வீட்டில் தொட்டில் கட்டி அதில் தங்கள் குழந்தையை கிடத்தி தாலாட்டு பாடுவது நிச்சயம் என்கின்றனர் பக்தர்கள்.

தங்களது பிரார்த்தனை பலித்ததும் மீண்டும் இந்த ஆலயம் வரும் தம்பதியர் பெருமாளுக்கும் தாயாருக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து தங்களது நன்றிக் கடனை கண்ணீர் மல்க செலுத்தும் காட்சி இங்கு அடிக்கடி காணக் கூடியது.

தினசரி இரண்டு கால பூஜை நடக்கும் இந்த ஆலயம், காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7½ மணி வரையிலும் திறந்திருக்கும்.

மனப்பிணக்கு காரணமாக பிரிந்து வாழும் தம்பதியரை இங்கு சேவை சாதிக்கும் பெருமாள் சேர்த்து வைத்து நிச்சயம் மனம் மகிழச் செய்வார் என்று பக்தர்கள் நம்புவது நிஜமே!

திருச்சி – அன்பில் பேருந்து சாலையில் லால்குடியிலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இடையாற்றுமங்கலம் என்ற இத்தலம்

–ஜெயவண்ணன்.

Next Story