உண்ணுங்கள் தூய்மையானவற்றை!


உண்ணுங்கள் தூய்மையானவற்றை!
x
தினத்தந்தி 26 Sep 2017 12:00 AM GMT (Updated: 25 Sep 2017 10:57 AM GMT)

ஸுப்யானுஸ் ஸவ்ரி என்ற அறிஞரிடம் ஒருவர் கேட்டார்: ‘‘அறிஞரே! கூட்டுத் தொழுகையின்போது முதல் வரிசையில் வலப்பக்கமாக நின்று தொழுவது சிறந்ததா? அல்லது இடப்பக்கமாக நின்று தொழுவதா..?’’

ஸுப்யானுஸ் ஸவ்ரி என்ற அறிஞரிடம் ஒருவர் கேட்டார்: ‘‘அறிஞரே! கூட்டுத் தொழுகையின்போது முதல் வரிசையில் வலப்பக்கமாக நின்று தொழுவது சிறந்ததா? அல்லது இடப்பக்கமாக நின்று தொழுவதா..?’’

அறிஞர் கூறினார்: ‘‘நீ உண்ணும்ரொட்டித் துண்டு ஆகுமான வழிமுறையின் மூலம் (ஹலால்) கிடைத்ததா? அல்லது தவறான வழிமுறையின் மூலம் (ஹராம்) கிடைத்ததா? என்பதில் கவனம் செலுத்து. அவ்வாறெனில் வரிசையில் எங்கு நின்று தொழுதாலும் பிரச்சினை இல்லை. சிலபோது எங்கு தொழவேண்டும் என்பதில் மிகவும் கவனமாக இருப்பாய். ஆனால் அந்த வணக்கம் ஏற்றுக்கொள்ளப்படுவதற்குக்

காரணமாக அமையும் உணவு குறித்து கவனம் செலுத்தியிருக்க மாட்டாய்’’.

எவ்வளவு பெரிய உண்மையை அந்த அறிஞர் கூறியிருக்கின்றார் பாருங்கள்.

தொழுகைபோன்ற வணக்கத்தில் ஈடுபடும் ஒருவர் அதன் நிபந்தனைகளை அடிபிசகாமல் கடைப்பிடிக்க வேண்டும் என்பதில் கவனம் செலுத்துகின்றார். நல்ல வி‌ஷயம்தான். அதேவேளை அந்த வணக்கம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டுமெனில் உண்ணும் உணவும் நல்ல வழிமுறையினூடாக (ஹலால்) வந்திருக்க வேண்டும் என்பதில் எத்தனை பேர் கவனம்

செலுத்துகின்றோம்?

அடுத்தவர் பொருளை அபகரித்துத் தின்றுவிட்டு முதல் வரிசையில் நின்று தொழுவதால் என்ன பயன்? அனுமதிக்கப்பட்ட உணவை உண்டபின் செய்யும் வணக்கங்களை மட்டுமே இறைவன் ஏற்றுக்கொள்வான் என்ற அடிப்படை அறிவை மனதில் இருத்த வேண்டாமா? அவ்வளவு ஏன் .. தவறான முறையில் ஈட்டிய உணவை உண்டபின் செய்யும் பிரார்த்தனைகளைக்கூட இறைவன் ஏற்றுக்கொள்வதில்லை.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘அல்லாஹ் தூய்மையானவன். தூய்மையானவற்றைத் தவிர வேறெதையும் அவன் ஏற்றுக்கொள்வதில்லை’’. (முஸ்லிம்)

வெகு சிரமங்களுக்கு மத்தியில் நீண்ட பயணத்தில் ஈடுபட்டிருக்கும் ஒருவரைக் குறித்து இறைத்

தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: ‘‘அவருடைய தலை முடி கலைந்துள்ளது. உடலில் புழுதி படிந்துள்ளது. வானை நோக்கி கரங்களை ஏந்தியவாறு, ‘என் இறைவா..! என்

இறைவா..!’’ என்று இறைஞ்சுகின்றார். (ஆயினும் அவரது பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது) இறைவன் எப்படிஅந்தப் பிரார்த்தனையை ஏற்றுக்கொள்வான்? அவனது உணவு ஹராம். அவனது பானம் ஹராம். அவனது உடை ஹராம். ஹராமிலேயே வளர்ந்திருக்கின்றான். பின் எப்படி அவனது பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும்?’’ (புகாரி)

கவனத்தில்கொள்ள வேண்டிய முக்கிய வி‌ஷயம் இதுதான். விழுந்து விழுந்து சிலர் தொழுகின்றார்கள். ஆயினும் தங்களது உணவும், உடையும் ஆகுமான வழிமுறைகளின் மூலம் வந்ததுதானா? என்று யோசிப்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் இருப்பதில்லை.

ஓய்வு ஒளிச்சல் இன்றி பணியாளர்களிடம் வேலை வாங்கியபின் எவ்வித நியாயமும் இன்றி பணியாளர்

களுக்கு சம்பளம் கொடுக்காமல் இருப்பவர், பள்ளிவாசலில் தொழுவதால் என்ன பயன்?

பணிப்பெண்களிடம் நாள் முழுக்க வீட்டு வேலை வாங்கிவிட்டு, சம்பளத் தேதி வந்துவிட்டால் ‘பின்னர் ஆகட்டும், அப்புறம் பார்க்கலாம்’ என்று கூறுபவர் எந்த தைரியத்தில் இறைவனின் சன்னிதியில் பிரார்த்தனைக்காக இருகரம் ஏந்துகின்றாரோ தெரியவில்லை. அதிகாரிகளை லஞ்சம் கொடுத்து ஏமாற்றுவது போன்று ஆண்டவனின் உண்டியலில் எதையாவது போட்டுவிட்டால் ஆகவேண்டியதை அந்த ஆண்டவன் பார்த்துக்கொள்வான் என்று நினைத்துக்கொள்கின்றனரோ?

‘பூனையைக் கட்டிப்போட்டு உணவளிக்காமல் அதற்கு அநீதி இழைத்தமைக்காக ஒரு பெண்ணுக்கு இறைவன் நரகத்தைக் கொடுத்தான்’ என்ற செய்தி நாம் அறிந்ததுதானே. ஒரு மிருகத்துக்கு அநீதி இழைக்கும்போதே நரகம் எனில் மனிதனுக்கு அநீதி இழைப்பவருக்கு என்ன தண்டனை என்பதை எண்ணிப்பார்க்கவே மனம் அஞ்சுகிறது.

ஸஅத் பின் அபீ வகாஸ் (ரலி) அவர்கள் ஒருமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் இவ்வாறு விண்ணப்பித்தார்: ‘‘இறைத்தூதரே! எனது பிரார்த்தனைகள் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்பதற்காக பிரார்த்தனை செய்யுங்கள்’’.

‘இறைவா! ஸஅதுடைய பிரார்த்

தனையை நீ அங்கீகரிப்பாயாக!’ என்று நபிகளாரும் பிரார்த்தனை செய்திருக்க முடியும். ஆயினும் தோழர்களுக்கு இந்த சந்தர்ப்பத்தில் ஒரு பாடத்தைக் கற்றுக்கொடுக்க முயன்றார்கள்.

ஆம். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘‘ஸஅதே! தூய்மையானவற்றை மட்டும் உண்ணுங்கள்! உங்கள் பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்படும்’’.

பிரார்த்தனை ஏற்றுக்கொள்ளப்

படாமல் இருக்கின்றது என்றால் பிரார்த்தனையில் கோளாறு கிடையாது. மாறாக பிரார்த்தனை செய்யும் நபரிடத்தில்தான் கோளாறு. ஒரு சில வேளைகளில் மனம் இதனை ஏற்றுக்கொள்வதில்லை.

நபிகளாரின் இந்த உபதேசத்திற்குப்பின் ஸஅத் (ரலி) அவர்கள் எந்த அளவுக்கு உணவில் தூய்மையானவற்றைக் கடைப்பிடித்தார் என்றால், அதற்குப் பின் அவர் ஹலாலான உணவை மட்டுமே உண்டு வந்தார். அவர் வீட்டில் ஆடு ஒன்று இருந்தது. அந்த ஆட்டின் பாலைத்தான் வீட்டில் உள்ளவர்கள் அருந்துவர். ஒருநாள் அந்த ஆடு அண்டை வீட்டுக்காரரின் நிலத்தில் அனுமதியின்றி நுழைந்து அங்கிருந்த புற்களை மேய்ந்துவிட்டது. இதை அறிந்த ஸஅத் (ரலி) அன்றுமுதல் ஆடு இறக்கும்வரை அதிலிருந்து கறக்கும் பாலை அருந்துவதை நிறுத்திவிட்டார். காரணம் அனுமதியின்றி நுழைந்து மேய்ந்த புல்லின் தாக்கம் அந்த ஆட்டின் பாலில் வெளிப்பட்டுவிடுமோ, அது அனுமதியில்லாத உணவாக மாறிவிடுமோ என்ற பயம்தான்.

உணவின் வி‌ஷயத்தில் நமது முன்னோர்கள் எந்த அளவு தூரம் கவனம் செலுத்தி வந்தார்கள் என்றால், நேரடியாகத் தமக்குத் தொடர்பு இல்லாதவையாக இருந்தாலும்கூட அதையும் தவிர்த்துக்கொண்டனர்.

அபூபக்கர் (ரலி) அவர்களுக்கு அடிமை ஒருவன் இருந்தான். அவன் அடிமை என்ற முறையில் தன் எசமானாகிய அபூபக்கர் (ரலி) அவர்களுக்குத் தனது சம்பாத்தியத்தில் நிர்ணயிக்கப்பட்ட தொகையைச் செலுத்திவந்தான். அபூபக்கர் (ரலி) அவர்கள் அவன் செலுத்தும் தொகையிலிருந்து உண்டுவந்தார்கள். ஒருநாள் அவன் ஏதோ ஒரு பொருளைக் கொண்டு வந்தான். அதிலிருந்து அபூபக்கர் (ரலி) அவர்கள் சிறிது உண்டார்கள். அப்போது அந்த அடிமை, ‘‘இது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?’’ என்று கேட்டான். அபூபக்கர் (ரலி) அவர்கள், ‘‘என்ன இது?’’ என்று கேட்டார்கள்.

அவன், ‘‘நான் அறியாமைக் காலத்தில் ஒரு மனிதருக்குக் குறி சொல்லி வந்தேன். எனக்கு நன்றாகக் குறி சொல்லத் தெரியாது. ஆயினும் குறி சொல்லத் தெரிந்தவன் போல் நடித்து அவரை நான் ஏமாற்றிவிட்டேன். அவர் அதற்காக எனக்குக் கூலி கொடுத்தார். நீங்கள் உண்டது (குறி சொன்னதற்காக) எனக்குக் கூலியாகக் கிடைத்த அந்தப் பொருளிலிருந்துதான்’’ என்று சொன்னான்.

உடனே அபூபக்கர் (ரலி) அவர்கள் கையை வாய்க்குள் நுழைத்து தம் வயிற்றிலிருந்த அனைத்தையும் வாந்தி எடுத்துவிட்டார்கள். (புகாரி).

பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுவதற்கான முதல் அடையாளம் உணவு தூய்மையாக இருத்தல்.

மவுலவி நூஹ் மஹ்ழரி, குளச்சல்.

Next Story