எழுத்தறிவிக்கும் எழுத்தறிநாதர்


எழுத்தறிவிக்கும்  எழுத்தறிநாதர்
x
தினத்தந்தி 26 Sep 2017 1:30 AM GMT (Updated: 25 Sep 2017 11:42 AM GMT)

நமக்கெல்லாம் தமிழ் இலக்கணத்தை வடித்துக் கொடுத்தவர் குறுமுனி அகத்தியர்.

மக்கெல்லாம் தமிழ் இலக்கணத்தை வடித்துக் கொடுத்தவர் குறுமுனி அகத்தியர். அந்த அகத்தியருக்கு தமிழ் இலக்கணத்தை எடுத்துரைத்தவர் திருஇன்னம்பரில் எழுந்தருளி இருக்கும் ஈசன். இங்குள்ள ஈசனின் திருநாமம் ஐராவதேஸ்வரர் என்பதாகும். அகத்தியருக்கு தமிழ் இலக்கணத்தை போதித்ததால், ‘எழுத்தறிநாதர்’ என்று அழைக்கப்படுகிறார். வடமொழியில் அட்சரபுரீஸ்வரர். ‘அட்சரம்’ என்றால் ‘எழுத்து’ என்று பெயர்.

ஒரு முறை துர்வாச முனிவரின் சாபத்திற்கு ஆளானது, இந்திரனின் வெள்ளை யானையான ஐராவதம். சாபம் பெற்ற ஐராவதம் இத்தல ஈசனை வழிபட்டு சாப விமோசனம் பெற்றது. அதனால் இத்தல இறைவனுக்கு ஐராவதேஸ்வரர் என்று பெயர்.

‘இனன்’ என்றால் சூரியன் என்று பொருள். சூரியன் இத்தல ஈசனை நம்பி வழிபட்ட ஊர் என்பதால் இனன்நம்பூர் என்று பெயர் பெற்றது. காலப்போக்கில் இதுவே மருவி ‘இன்னம்பூர்’ என்றாகியிருக்கிறது. இத்தலத்தில் சூரியன் ஒவ்வொரு ஆண்டும் ஆவணி 31–ந் தேதி, புராட்டாசி 12–ந் தேதி மற்றும் பங்குனி மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில், எழுத்தறிநாதரின் மீது தன்னுடைய சூரிய கதிர்களை வீசி வழிபடுகிறான். இந்த நாட்களில் ஆலயத்தில் சூரிய பூஜை, திருவிழா போல் கொண்டாடப்படுகிறது.

ஆலய அமைப்பு

இந்த ஆலயத்தில் மூலவர் எழுத்தறிநாதர், மிகப்பெரிய வடிவில் கம்பீரமாக, கிழக்கு நோக்கி லிங்க வடிவில் சுயம்பு மூர்த்தியாக ருத்திராட்சப் பந்தலின் கீழ் அருள்புரிகிறார். கருவறை கோஷ்டத்தில் பிட்சாடனர், தட்சிணாமூர்த்தி, அர்த்தநாரீஸ்வரர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர். முருகப்பெருமான், தட்சிண கயிலாய லிங்கம், காசி விஸ்வநாதர், விசாலாட்சி, மகாலட்சுமி, சண்டேஸ்வரர் ஆகியோர் தனிச் சன்னிதியில் வீற்றிருந்து அருள்கிறார்கள்.

இத்தல எழுத்தறிநாதரை வழிபட்டு, 27 நெய் தீபங்கள் ஏற்றினால் கல்வியில் சிறந்து விளங்கலாம் என்கிறார்கள். ஆதி காலத்தில் அகத்தியருக்கு எழுத்தறிவித்தவர் இத்தல இறைவன் என்பதால், கல்வியில் சிறந்து விளங்க இத்தல இறைவனை வழிபட்டால் சிறப்பான வெற்றியைப் பெறலாம் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. ஈசனின் கருவறை விமானம் கஜபிருஷ்ட வடிவில் இருக்கிறது. விமானத்தின் கிழக்குப் புறம் ஈசன், அம்பாள், சுதன்மன் மற்றும் சோழ மன்னனின் சுதைச் சிற்பங்களும் உள்ளன.

இந்த ஆலயத்தில் உள்ள பைரவரை தேய்பிறை அஷ்டமி நாட்களில் பால், பன்னீர், விபூதி, சந்தனம் மற்றும் பஞ்சாமிர்தம்              போன்றவற்றால் அபிஷேகம் செய்வதுடன், நெய்தீபம், மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் கடன், உடற்பிணிகள் அகலும். ஆலயத்தின் தெற்குச் சுற்றுச்சுவரில் சிலை உருவில் நடராஜர் எழுந்தருளியுள்ளார். மாத திருவாதிரையும், மார்கழி மாத திருவாதிரையும் இந்தக் கோவிலில் வெகுச் சிறப்பாக நடைபெறும். இங்குள்ள நடராஜர் சிலை, கடலில் இருந்து கிடைத்ததாக கூறுகிறார்கள். இவரை மாத திருவாதிரை நாட்களில் அபிஷேகம் செய்து வழிபட்டால், சகல செல்வங்களும், வளங்களும் இல்லத்தில் நிறையும்.

எழுத்தறிநாதரின் வாசல் அருகே நான்கு திருக்கரங்களுடன், தெற்கு நோக் கியபடி சவுந்தரநாயகி என்னும் நித்திய கல்யாணி அம்மன் திருமணக் கோலத்தில் எழுந்தருளியிருக்கிறாள். இந்த அன்னையை செவ்வாய்க்கிழமை ராகு காலத்தில் எலுமிச்சைப் பழ தீபம் ஏற்றி வழிபட்டால், வெகு விரைவில் தடைகள், தோ‌ஷங்கள் விலகி திருமணம் நடைபெறும் என்கிறார்கள். எலுமிச்சைப் பழத்தின் மேற்புறம் சிறு துளையிட்டு, சாற்றை வெளியேற்றிவிட்டு, பின்பு அந்தத் துளை வழியாக சிறிது நெய் விட்டு, துளையில் திரியை நுழைத்து தீபம் ஏற்ற வேண்டும்.

எலுமிச்சைப் பழத்தை இரண்டாக வெட்டுவது கூடாது.

கிழக்கு நோக்கி ஐந்து நிலை ராஜகோபுரம் உள்ளது. ராஜகோபுரத்தின் வலதுபுறம் தெற்கு நோக்கியபடி நான்கு திருக்கரங்களுடன் கையில் ஜெபமாலையை ஏந்தி தவக்கோலத்தில் மற்றொரு அம்பாள் ‘சுகந்த குந்தளாம்பிகை’ அருள்பாலிக்கிறாள். அழகிய மணம் பொருந்திய கூந்தலை கொண்டவள் என்பது இந்த அன்னையின் பெயருக்கான பொருள். ‘பூங்கொம்பு நாயகி’ என்றும் அன்னை அழைக்கப்   படுகிறாள். மகா மண்டபத்தில் நவக்கிரகங்கள் உள்ளன.

புரட்டாசி மாதத்தில் நவராத்திரி 10 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது. கல்வி பயிலத் தொடங்கும் முன்பும், குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கும் முன்பும் இத்தலம் அழைத்து வந்து, பரப்பிய நெல்லில் ‘ஓம் அட்சரபுரீஸ்வராய நம ஹ’ என்று குழந்தைகளின் விரலைப் பிடித்து எழுதவைக்கிறார்கள். இப்படி வித்யாப்பியாசத்தை தொடங்கும் நிகழ்ச்சி இந்த ஆலயத்தில் தினமும் நடைபெறும் நிகழ்வுகளில் ஒன்றாகும். குறிப்பாக சரஸ்வதி பூஜை, விஜயதசமி நாட்களில் குழந்தைகளை கூட்டி வந்து, ஈசனை வழிபட்டு வித்யாப்பியாசத்தை தொடங்குவது அதிக அளவில் நடைபெறுகிறது.

சரஸ்வதி பூஜை, விஜயதசமி நாட்களில் இன்னம்பர் எழுத்தறிநாதரை குடும்பத்துடன் வழிபட்டு, பள்ளிக் கணக்குகளை மட்டுமல்லாமல், நம்முடைய வாழ்க்கை கணக்குகளையும் சரி செய்து கொள்வோம்.

கும்பகோணம்– சுவாமிமலை வழிப்பாதையில் புளியஞ்சேரிக்கு வடக்கே 3 கிலோமீட்டர் தூரத்தில் இன்னம்பர் திருத்தலம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் மிக அருகாமையில் திருப்புறம்பயம் சாட்சிநாதர் ஆலயமும் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து வடமேற்கே 6 கிலோமீட்டர் தூரம் சென்றால் இன்னம்பர் திருத்தலத்தை அடையலாம்.

–சிவ.அ.விஜய்பெரியசுவாமி, கல்பாக்கம்.


Next Story