இஸ்லாத்தின் சிறப்புகளை சொல்வோம்... இணைந்து வாழ்வோம்...


இஸ்லாத்தின் சிறப்புகளை சொல்வோம்... இணைந்து வாழ்வோம்...
x
தினத்தந்தி 29 Sep 2017 12:30 AM GMT (Updated: 28 Sep 2017 10:14 AM GMT)

மனிதர்களின் இந்த உலக வாழ்க்கை நிரந்தரமற்றது. ‘அல்லாஹ் ஒருவனே இறைவன்’ என்று ‘ஈமான்’ கொண்ட ஒருவரின் வெற்றி மறுமையில் தான் நிச்சயம் செய்யப்படும்.

னிதர்களின் இந்த உலக வாழ்க்கை நிரந்தரமற்றது. ‘அல்லாஹ் ஒருவனே இறைவன்’ என்று ‘ஈமான்’ கொண்ட ஒருவரின் வெற்றி மறுமையில் தான் நிச்சயம் செய்யப்படும். இந்த உலகை விளைநிலமாக பயன்படுத்தி, அதில் விளைவிக்கின்ற நன்மைகளின் பொருட்டால் மட்டுமே மறுமையின் வெற்றியை ஒருவரால் பெற்றுக்கொள்ள முடியும்.

தீமைகளைத் தடுப்பதிலும், நன்மையைச் செய்ய  ஆர்வமூட்டுவதிலும் ஒருவருக்கொருவர் உபதேசம் செய் கிறவர்கள் நிச்சயமாக வெற்றி அடைந்து விட்டார்கள். அதற்கான சிறந்த வழிமுறையாக அல்லாஹ் தன் அருள்மறையிலே இவ்வாறு குறிப்பிடுகின்றான்:

மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கின்றான். ஆனால் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டும், நற் செயல்கள் புரிந்து கொண்டும் மேலும் ஒருவருக்கொரு வர் சத்தியத்தை எடுத்துரைத்தும் பொறுமையைக் கடைப்பிடிக்குமாறு அறிவுரைக் கூறிக் கொண்டும் இருந்தார்களோ அவர்களைத் தவிர! (திருக்குர்ஆன்: 103:3)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கும் கூட அல்லாஹ் இந்த கட்டளையத் தான் சொன்னான். ‘வஹி’ மூலம் சொல்லப்பட்ட நல்ல வி‌ஷயங்களை மக்களிடம் எடுத்துரைக்க வேண்டும். அவர்கள் செய்யும் தீமைகளைத் தடுக்க வேண்டும் என்றே நபிகளாருக்கு இறைவன் கட்டளையிட்டான்.

இதையடுத்து நபிகளார் அன்றைய அரபு மக்களிடம் தனது ஏக இறைக்கொள்கையை எடுத்துக்கூறினார்கள். ‘நீங்கள் வணங்கும் உருவங்களுக்கு எந்தவித ஆற்றலும் இல்லை. அவைகள் மனிதனால் படைக்கப்பட்டவை. சக்தியற்ற அதனை விடுத்து எல்லா சக்திகளும் ஒருங்கே கொண்ட ஏக இறைவன் அல்லாஹ் ஒருவனையே நீங்கள் வணங்க வேண்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் அறிவுரை கூறினார்கள். ஆனால் அந்த மக்கள் அதை ஏற்கவில்லை. நபிகளாரை துன்புறுத்தினார்கள்.  

இதனால் கலங்கிய நபிகளாரிடம் அல்லாஹ் ஆறுதல் கூறுகையில் ‘நபியே! நீங்கள் கவலை கொள்ள வேண்டாம். எனது கட்டளைகளை எடுத்தியம்புவதே உங்களின் கடமை. அந்த மக்களில் யாரை, எப்போது எப்படி நேர்வழிப்படுத்த வேண்டும் என்பது என் கைவசம் உள்ளது’ என்றான்.

அதோடு இன்னும் சேர்த்து சொல்கிறான், ‘‘இந்த கட்டளையை நீங்கள் நிறைவேற்றும் போது சந்திக்கின்ற துன்பங்களையும், தொல்லைகளையும் பொறுமையோடு சகித்து கொள்ளுங்கள். அல்லாஹ் முடிவான வெற்றியை உங்களுக்கே அளிப்பான்’’.

எனவே சோதனைகள் பல வந்தாலும் நபிகளார் எதற்கும் கவலைப்படாமல் இறைவன் கட்டளையை தொடர்ந்து நிறைவேற்றினார்கள்.

ஒரு முஸ்லிமின் கடமை, தான் மட்டும் ஈமான் கொண்டு ஈடேற்றம் பெற்றுக்கொள்வதோடு நின்று விடுவதில்லை. அவன் அறிந்திருக்கின்ற அல்லாஹ்வைப் பற்றிய அத்தனை உண்மைகளையும், அவன் கட்டளைகளையும் பிறருக்கு எடுத்துச் சொல்லி அவர் களையும் நன்மையின் பக்கம் அழைப்பதே அவனின் முழுமையான வாழ்வின் அடையாளமாக அமையும்.

அரபா மைதானத்திலே, அந்த கடைசி பேருரையிலே அண்ணல் நபிகள் சொன்னார்கள், ‘அல்லாஹ் இன்றோடு இந்த புனித இஸ்லாத்தின் கோட்பாடுகளை முழுமையாக பூர்த்தி செய்து விட்டான். யாரெல்லாம் இந்த செய்தியை செவிமடுத்தார்களோ அவர்கள் பிறருக்கும் இதனை அறிவியுங்கள்’ என்று தன் மீது விதிக்கப்பட்ட கட்டளையை தன் மக்கள் மீது சாட்டி விட்டு சென்று விட்டார்கள்.

அன்றைய கூட்டத்தில் யாரெல்லாம் கலந்து கொண்டார்களோ, எந்த திசையில் நின்றார்களோ அப்படியே அந்த திசையிலேயே பயணத்தை தொடர்ந்து விட்டார்கள். உலகெங்கும் இன்று இஸ்லாம் இந்த அளவு நிலை பெற்றிருக்கிறது என்றால் அன்று அந்த  சஹாபாக்கள் செய்த தியாகம். அவர்கள் இறைவனின் கட்டளையை, நபிகளார் எடுத்து சொன்ன முறையில் நடை   முறைப்படுத்தியதால் இன்று இத்தனை பெரிய வெற்றியைக் கொண்டு இஸ்லாம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

உலகம் முழுவதும் இஸ்லாம் பற்றிய உண்மைக்கு புறம்பான அவதூறுகள் பரப்பப்பட்டாலும், சத்தியத்தை எடுத்துச் சொல்லும் அந்த பக்குவத்தால் அதன் வளர்ச்சியை கட்டுப்படுத்த முடியவில்லை. நன்மைகளை நடைமுறைப்படுத்தி, தீமைகளை தடுத்தாண்டு கொண்டிருக்கும் நல்லவர்கள் இன்னும் நம்மிடையே இருப்பது தான் இதற்கு காரணமாகும்.

மூஸா நபியவர்கள் ஏக இறை கொள்கையை எடுத்தியம்பிய காலகட்டத்தில், ஒரு கூட்டத்தினர் அவர்களுக்கு தொல்லைகள் கொடுத்தனர். அப்போது அவர்களிடையே இருந்த நல்லவர் ஒருவர் அவர்களை நோக்கி, ‘அல்லாஹ் என்னுடைய இறைவன் என்று ஒரு மனிதர் கூறியதற்காக அவரை நீங்கள் கொலை செய்து விடலாமா? அவரோ உங்கள் இறைவனிடமிருந்து பல அத்தாட்சிகளை கொண்டு வந்திருக்கிறார். அவர் பொய் சொல்பவராயிருந்தால் அவர் சொல்லும் பொய்யின் கேடு அவர் மீதே சாரும். அவர் சொல்வது மெய்யாயிருந்து விட்டாலோ அவர் சொல்லும் வேதனைகளில் பல உங்களை வந்து அடைந்து விடுமே’ என்று சொன்னார். (திருக்குர்ஆன் 40:28)  
இன்றைய சூழ்நிலையில் இஸ்லாம் பற்றிய அவதூறுகள் பரப்பப்படுவதற்கு காரணம் இஸ்லாத்தின் உண்மைக் கொள்கைகள், சமத்துவம், சகோதரத்துவம், மனிதாபிமானம் போன்றவற்றை பிறரிடம் சரியான முறையில் எடுத்துச் சொல்லப்படாததால் தான். அதனால் இஸ்லாத்தின் கொள்கைகளை, அதன் சிறப்புகளை அனைவருக்கும் எடுத்துச்சொல்வோம், அனைவரோடும் இணைந்து வாழ்வோம்.

எம். முஹம்மது யூசுப், உடன்குடி.

Next Story