ஏழைக்கு இரக்கம் செய்...


ஏழைக்கு  இரக்கம்  செய்...
x
தினத்தந்தி 29 Sep 2017 12:45 AM GMT (Updated: 28 Sep 2017 10:16 AM GMT)

‘ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக் கிறான். அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்’ (நீதி.19:17).

‘ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன் கொடுக்  கிறான். அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்’ (நீதி.19:17).

வானத்தையும் பூமியையும், சகல உலகத்தையும் படைத்த சர்வ வல்லமையுள்ள கர்த்தர் யாரிடமும் கடன் வாங்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் நாம் ஏழைக்குக் கொடுக்கும் பொருளைக் கடனாகக் கொண்டு நமக்கு இரு மடங்கு திருப்பித் தருவார். ஏழையின் கூக்குரலுக்கு நாம் செவியை அடைத்துக் கொண்டால், நாம் சத்தமிட்டுக் கூப்பிடும்போது இறைவன் கேட்கமாட்டார்.

ஏழையாக இருக்கிறான் என்று ஏழையைக் கொள்ளையிடக் கூடாது. சிறுமையானவனை நியாயஸ்தலத்தில் பொய்சாட்சி சொல்லி உபத்திரவப்படுத்தக்கூடாது. தன் கண்களை ஏழைகளுக்கு விலக்குகிறவனுக்கோ தேவ தயவு கிடைப்பது இல்லை. தரித்திரருக்குக் கொடுத்து தாழ்ச்சி அடைந்த சரித்திரமும் இல்லை. ஏழையைப் பரிகாசம் பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான். அவனுடைய நிந்தை அவனை விட்டு நீங்கும்வதும் இல்லை.

ஏழைக்கு இரங்குகிறவன் செழிப்பான். அவனை உயர்ந்த அடைக்கலத்திலே வைக்கிறார். அவன் செய்வதெல்லாம் வாய்க்கும். அவனை தேவ கிருபை சூழ்ந்துகொள்ளும். தேவ சமாதானத்தை பெறுவான். இருதயத்தில் எப்பொழுதும் மகிழ்ச்சி. ஏழைக்குக் கொடுத்ததை ஆண்டவர் அவனுக்கு இரட்டிப்பாக திரும்பக் கொடுக்      கிறார். அவன் தலைமுறை ஆசீர்வாதமாக இருக்கும்.

‘கூப்பிடுகிற எளியவனையும் உதவியற்ற சிறுமையானவனையும் அவர் விடுவிப்பார்’ (சங்.72:12).

அவர் சிறியவனை புழுதியிலிருந்து தூக்கிவிடுகிறார். எளியவனைக் குப்பையிலிருந்து உயர்த்துகிறார். அவனை பிரபுக்களோடும், அதிபதிகளோடும் உட்கார வைக்கிறார். சிறுமையும் எளிமையுமானவர்கள் அவரை துதிக்கின்றார்கள். அவர்களுடைய ரத்தம் அவருடைய பார்வைக்கு அருமையாயிருக்கிறது. எளியவனையும் சிறுமையானவனையும் எடுத்து உயர்ந்த அடைக்கலத்திலே வைத்து அவன் தலைமுறை வம்சங்களை ஆட்டு மந்தையைப் போல் பெருகச்செய்கிறார்.

பலவீனமானவர்களையும் ஏழை எளியவர்களையும் துன்மார்க்கரின் கைக்கு தப்புவிக்கிறார். ஏழைகளைப் பராமரித்து ஆகாரத்தை கொடுத்து திருப்தி ஆக்குகிறார். எளியவனுடைய நியாயத்தை நாம் புரட்டி பேசக்கூடாது. அவனுடைய தேவன் அவனுடன் இருக்கிறார். அவர் எளியவர்களின் விண்ணப்பத்தைக் கேட்டு உடனடி பதில் செய்கிறார்.

‘வாரியிறைத்தான், ஏழைகளுக்குக் கொடுத்தான், அவனுடைய நீதி என்றென்றைக்கும் நிற்கும். அவன் கொம்பு மகிமையாய் உயர்த்தப்படும்’ (சங்.112:9).

நீ ஒரு ஏழையை கண்டால் இரக்கம் செய். திக்கற்றவர் வேலை செய்ய முடியாத வயதானவர்களுக்கு பசியை ஆற்று. உன் கையின் கிரியையை ஆண்டவர் ஆசீர்வதிப்பார். உன் சந்தோ‌ஷம் பெரியதாக இருக்கும். ஏழை எளியவர்களுக்குத் தானதர்மம் செய். எளிமையான கூலிக்காரனை ஒடுக்கக்கூடாது. ஏழை வேலை செய்தால் பொழுது போகுமுன்னே அவன் கூலியை கொடுக்கவேண்டும்.

இறைவன் எளியவர்களின் தகப்பன். ஒரு சிறு பட்டணத்தில் கொஞ்சம் மனிதர்கள் குடியிருந்தார்கள். ஒரு பெரிய ராஜா வந்து அந்த பட்டணத்தை சொந்தமாக்கி பெரிய கொத்தளங்களை கட்டினான்.

ஞானமுள்ள ஒரு ஏழை மனிதன் தேவ ஞானத்தினாலே அந்த பட்டணத்தை விடுவித்தான்.

‘நான் சிறுமையும் எளிமையுமானவன் கர்த்தரே என்மேல் நினைவாயிருக்கிறார்’ (சங்.40:17).

சிறுமைப்பட்டவர்களுடைய நம்பிக்கை ஒருபோதும் கெட்டுப் போவதில்லை. அவர் எளிமையுள்ளவனை என்றைக்கும் மறப்பதில்லை. சிறுமைப்பட்டவனையும் எளிமையுள்ளவனையும் அவனிலும் பலவானுடைய கைக்கு தப்புவித்து நியாயஞ்செய்து காப்பார். எளியவர்களை கெடுக்கும்படி தீவினைகளை யோசிக்கக் கூடாது. அவர் எளியவனுடைய சரீரத்தை பொல்லாதவர்களின் கைக்குத் தப்புவிக்கிறார்.

‘திக்கற்ற பிள்ளைகளுக்குச் சகாயர் நீரே’ (சங்.10:14).

திக்கற்ற பிள்ளைகளுக்கு நியாயஞ்செய்கிறார். இறைவனின் கண் அவர்மேல் பதிக்கப்பட்டு இருக்கிறது. திக்கற்ற பிள்ளைகள் கூப்பிட்டவுடன் சர்வ வல்லவர் கேட்டு சகாயம் செய்கிறார். திக்கற்ற பிள்ளைகளுக்கு உன் இருதயத்தை நீ கடினப்படுத்தாமலும் உன் கைகளை மூடாமலும் இரு. நீ விருந்து பண்ணும் போது திக்கற்றவர், ஏழைகள், விதவைகள், ஊனர்கள், ஊமைகள், செவிடர்கள், குருடர்கள், சப்பாணிகள் அழைத்தால் உன் வீட்டின் பொக்கி‌ஷத்தை அருள்நாதர் உயர்த்துவார்.

அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார். பசித்தவர்களுக்கு ஆகாரம் கொடுக்கிறார். பரதேசிகளை காப்பாற்றுகிறார். விதவைகளை ஆதரிக்கிறார். அனாதைகளுக்கு அடைக்கலமாயிருக்கிறார்.

சகேயு என்ற மனிதர் இயேசுவை நோக்கி ஆண்டவரே என் ஆஸ்திகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுக்கிறேன் என்றான். இயேசு அவனை நோக்கி இன்றைக்கு உன் வீட்டிற்கு இரட்சிப்பு என்று சொல்லி சகேயு வீட்டிற்கு சென்று அவனை ஆசீர்வதித்தார்.

ஏழைகளுடைய நியாயத்தை உண்மையாய் விசாரித்து, நீதியாய் நியாயம் தீர்க்கின்ற, ராஜாவின் சிங்காசனம் என்றும் பூமியில் நிலைத்து இருக்கச் செய்கிறார் ஆமென்.

சி. பூமணி, ஆசீர்வாத சுவிசே‌ஷ ஊழியம், சென்னை–50.

Next Story