ஆன்மிகம்

ஞானம் தரும் ஞானலிங்கேஸ்வரர் + "||" + Gnanalingeswarar is the wisdom

ஞானம் தரும் ஞானலிங்கேஸ்வரர்

ஞானம் தரும் ஞானலிங்கேஸ்வரர்
சுவிட்சர்லாந்து நாட்டின் பேர்ன் நகரில் அமைந்துள்ள ஞானம்பிகை சமேத ஞானலிங்கேஸ்வரர் திருக்கோவில்.
சுவிட்சர்லாந்து நாட்டின் பெருமை கூறும் சிவாலயம், சுவிஸ் அரசின் அனுமதியில் எட்டு சமயங்களின் வளாகத்தில் அமைந்த முதன்மை ஆலயம், இலங்கை சித்தரிடம் பெற்ற ஸ்படிக லிங்கத் திருமேனி கொண்ட இறைவன் பல அற்புதங்களைக் கொண்டதாக திகழ்கிறது சுவிட்சர்லாந்து நாட்டின் பேர்ன் நகரில் அமைந்துள்ள ஞானம்பிகை சமேத ஞானலிங்கேஸ்வரர் திருக்கோவில்.

தல வரலாறு

எங்கும் நிறைந்தவன் இறைவன் என்பதை நிரூபிக்கத் தோன்றிய ஆலயம் இது. இறைவன் தன் திருவிளையாடலால், இலங்கை நாட்டில் வாழ்ந்து வந்த இளைஞர்கள் பலரை 1980-ம் ஆண்டில் சுவிட்சர்லாந்து நாட்டிற்கு இடம் பெயரச் செய்தான். புதிய பூமியில், பல்லினப் பண்பாட்டு சூழலில் உள்ள சுவிட்சர்லாந்து நாட்டில், வாழ வழி தெரியாமல் நின்றனர் அவர்கள் அனைவரும்.

தாயகத்தைப் பிரிந்து வந்த அவர்களுக்கு தாயாக நின்று அதரவு காட்டினான், இறைவன். அவர்களில் சசிக்குமார், முரளிதரன், சுரேஷ்குமார் மூவரும் குருவாக நின்று சைவநெறிக்கூடம் என்ற அமைப்பை உருவாக்கினர். அதன் உறுப்பினர்களுக்கு இம்மூவரும் ஆன்மிகத் தெளிவைக் காட்டினர். காசியில் உள்ள கேதார்காட் சங்கரலிங்கேஸ்வரர் கோவில் நிறுவனர் அருணாசல சாஸ்திரிகள் மூலம் இவர்களுக்கு தீட்சை கிடைத்தது. கூடவே யோகநிலை சிவனின் திருவடிவமும் கிடைத்தது. அந்த இறைவனை தாங்கள் தங்கியிருந்த சிறிய அறைக்குள் வைத்து பூஜை செய்து வந்தனர்.

இந்நிலையில், பல்வேறு சமயங்களை ஒரே வளாகத்தில் உள்ளடக்கி, ஆன்மிக மையம் ஏற்படுத்த சுவிஸ் நாட்டின் சைவநெறிக்கூடம், கிருஸ்துவம், பவுத்தம், இஸ்லாம், பஹாய் உள்ளிட்ட அமைப்புகள் முடிவு செய்தன. அதன் பயனாக சைவ நெறிக் கூடம் மூலம் இந்து சமயத்தின் சார்பாக சிவாலயம் ஒன்று அமைக்க திருவருள் கூடியது. 2005-ம் ஆண்டு இலங்கையில் இருந்து சித்தர்களால் பூஜிக்கப்பட்டு வந்த ஸ்படிக லிங்கம் கிடைக்கப்பெற்றது. அந்த திருமேனி எவ்வித தடையும் இன்றி சுவிஸ் நாட்டின் முக்கிய நகரான பேர்ன் நகருக்கு எளிதாக வந்து சேர்ந்தது. இந்த ஸ்படிக லிங்கத்தையே பிரதானமாகக் கொண்டு 2007-ம் ஆண்டில், பல்சமய வழிபாட்டு வளாகம் அமைந்தது. 2015-ம் ஆண்டு முதல் சுவிட்சர்லாந்து நாட்டின் பிரதான சிவலாயம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது இந்த ஆலயம்.

ஆலய அமைப்பு

கிழக்கு நோக்கிய வாசல் கொண்டுள்ள இந்தச் சிவாலயம் மூன்று நிலை ராஜகோபுரத்தைக் கொண்டு விளங்குகிறது. கோபுர உச்சியில் திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் என நால்வரின் திருவுருவங்கள் இறைவனை வழிபடும் கோலத்தில் காட்சி தருகின்றன. உள்ளே நுழைந்ததும் நம்மை வரவேற்பவர், மூலவர் ஞானலிங்கேஸ்வரர். பத்து தலை ராவணன் தோள் மீது, அமர்ந்த கோலமாக எம்பெருமான் ஞானலிங்கேஸ்வரர் ஒளிவீசும் தோற்றத்தில் காட்சி தருகிறார். இவரின் லிங்கத் திருமேனியே ஸ்படிக லிங்கம் என்பது தனிச் சிறப்பு. இவரே பல்லாயிரம் ஆண்டுகளாக சித்தர்களால் பூஜிக்கப்பட்டு வந்தவர். இவர் இலங்கை வேந்தன் ராவணனால் பூஜிக்கப்பட்டவர் என்பது சித்தர் வாக்கால் தெரிய வந்துள்ளது.

சுவாமியின் எதிரே எழிலான நந்தி, பலிபீடம், கொடிமரம், அதன் அடியில் இலங்கையின் வடிவமும், அதனுள் சிறிய சிவலிங்கமும் அமைந்துள்ளது. வலச்சுற்றில் விநாயகர், ஐயப்பன், திருமகள்-திருமால், பெருந்தேவன்- பெருந்தேவி (பிரத்தியங்கரா -சரபேசுவரர்), கலைவாணி, வள்ளி-தெய்வானையுடன் முருகப்பெருமான், நாகம் குடையாக நிற்கும் நாகபூஷணியம்மன், உற்சவர் கூடம், பொற்சபை, வசந்த மண்டபம், நவக்கிரக சன்னிதி, பைரவர், அனுமன் சன்னிதி, சனிபகவான் சன்னிதி, அதன் அருகே முருகன் நின்ற கோலத்தில் காட்சி தர, பின்புறம் மகான்களின் நிழற் படங்கள் அணி வகுக்கும் சிவஞான சித்தர் பீடமும் இங்கு உள்ளது.

சுவாமியின் இடது புறம் ஞானம்பிகை அம்மன் சன்னிதி இருக்கிறது. அன்னை ஞானம்பிகை மேல் இரு கரங்களில் பாச, அங்குசம் தாங்கியும், கீழ் இரு கரங்களில் அபய, வரத முத்திரையுடனும் காட்சி தருகிறாள்.

தைப்பொங்கல், தமிழ்ப் புத்தாண்டு, ஆங்கிலப் புத்தாண்டு, விநாயகர் சதுர்த்தி, நவராத்திரி, மகாசிவராத்திரி, கந்தசஷ்டி என அனைத்து விழாக் களும் இந்தத் தலத்தில் வெகு சிறப்பாக நடைபெறுகின்றன. ஆலயத்தின் பிரம்மோற்சவ விழா ஆகஸ்டு மாதம் கொடியேற்றத்துடன் தொடங்கி, 13 நாட்கள் மிக விமரிசையாக நடைபெறுகிறது. இதில் யூரோப் பிளாசாவை சுற்றி வலம் வரும் தேரோட்டம் முக்கியமானது.

ஆலயத்தில் சமுதாயப் பணிகள்

தமிழ் மக்களின் நிதியுதவியால், தமிழர்களால் நடத்தப் படும் ஆலயமாக இவ்வாலயம் திகழ்கின்றது. இங்கு சைவ முறைப்படி திருமணம் நடத்தி வைக்கப்படுகின்றன. நாள்தோறும் வந்து செல்லும் மற்ற நாட்டவர்களுக்கும், பல் கலைக்கழக மாணவ- மாணவியர்களுக்கும் சைவத்தின் மேன்மை, இந்து சமயத்தின் சிறப்புகள் போன்றவை அவர்கள் மொழியிலேயே பயிற்றுவிக்கப்படுகிறது.

தமிழ்மொழி வழிபாட்டினை ஊக்கப்படுத்தி, பயிற்சி பெற்ற அர்ச்சகர்களை உருவாக்குகிறார்கள். பெண்களும் முறையான பயிற்சி பெற்ற பின்பு அர்ச்சகர்களாகப் பணிபுரிய அனுமதிக்கப்படுவது இவ்வாலயத்தின் தனிச்சிறப்பு ஆகும்.

இந்த ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தினமும் காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை தொடர்ந்து மூலவர் சிவ பெருமானை தரிசிக்கலாம். பிற தெய்வங்களை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே தரிசிக்க இயலும். பெருந்தேவன்- பெருந்தேவி சன்னிதியை பவுர்ணமி, அமாவாசை நாட்களில் மட்டுமே தரிசிக்கலாம்.

அமைவிடம்

சுவிட்சர்லாந்து நாட்டின் முக்கிய நகரான பேர்ன் நகரின் மையப்பகுதியில் யூரோப் பிளாசா என்ற இடத்தில், ரெயில் நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ளது, இந்தத் திருத்தலம். இங்கு வந்து செல்ல பேருந்து, ரெயில், டிராம் வசதிகள் அதிகம் உள்ளன.

- பனையபுரம் அதியமான் 

யூரோப் பிளாசா - பல்சமய வளாகம்

ஞானலிங்கேசுவரர் ஆலயம் பல் சமய வளாகத்தின் பிரதான ஆலயமாக அமைந்துள்ளது. இந்து, கிறிஸ்துவம், இஸ்லாம், பவுத்தம், அல்வித்தென், யூதம், சீக்கியம், பஹாய் என எட்டு மதங்களுக்கும் தனித்தனி இடம் ஒதுக்கப்பட்டு, சுவிட்சர்லாந்து முக்கிய நகரான பேர்ன் நகரின் மையப் பகுதியில் யூரோப்பிளாசா என்ற பெயரில் அமைந்துள்ளது.

சுவிஸ் நாட்டுக்கு வரும் வெளிநாட்டு அரசுப் பிரதிநிதிகள், பிரமுகர்கள் இந்த வளாகத்திற்குத் தவறாமல் வருகை தந்து வியந்து செல்லும் மையமாக இது திகழ்கின்றது. பல்கலைக்கழக மாணவர்கள் அவ்வப்போது வருகை தந்து இந்து மதத்தினைப் பற்றி அறிந்து செல்கின்றனர்.

இதில் அதிக இடப்பரப்பில் இந்து சமய சிவாலயம் மட்டுமே அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. பல்சமய இல்லத்தின் சார்பாக ‘வணக்கம்’ என்ற சைவ உணவு விடுதியும் நடத்தப்படுகிறது. இதில் வெளிநாட்டினரும் ஆர்வத்துடன் உணவருந்தி செல்கின்றனர். ‘நன்றி’ என்ற வார்த்தை உலக மொழிகள் அனைத்திலும் எழுதி நுழைவு வாசலில் உள்ள பலகையில் பொருத்தப்பட்டுள்ளது.

மதச் சண்டையால் தத்தளித்து வரும் இன்றைய சூழலில், ஒரே வளாகத்தில் எட்டு வகையான மதங்களின் வழிபாட்டுத் தலங்கள் ஒற்றுமையுடன் நடந்து வருவது சுவிஸ் நாட்டின் பெருந்தன்மைக்கும், மதச் சார்பின்மைக்கும் சான்றாக விளங்குகின்றது. சமயத்தை ஏற்போரும், சமயத்தை மறுப்போரும் கூடும் சமூக மையமாகவும் இந்த வளாகம் விளங்குகிறது.