திருமண வரம் அருளும் சொர்ணபுரீஸ்வரர்


திருமண வரம் அருளும் சொர்ணபுரீஸ்வரர்
x
தினத்தந்தி 3 Oct 2017 10:21 AM GMT (Updated: 3 Oct 2017 10:21 AM GMT)

கயற்கண்ணியின் மன உறுதியைக் கண்ட சிவபெருமான் மனம் கசிந்தார். அவரின் பார்வை அவளை நோக்கித் திரும்பியது. அவளை மணந்து கொள்ள முடிவு செய்தார்.

5-10-2017 பவுர்ணமி

இறைவனையே தன் கணவனாக நினைத்து வளர்ந்தாள் ஒரு மங்கை. தான் நினைத்தபடியே அவரையே மணந்து கொண்டாள்.

ஆம். இந்த அதிசயம் நடந்த தலம் தான் ஆற்றூர். இங்கு உள்ளது, சொர்ணபுரீஸ்வரர் ஆலயம். இங்கு அருள்பாலிக்கும் இறைவன் பெயர் சொர்ணபுரீஸ்வரர். மந்தாரவனேஸ்வரர் என்பது இறைவனின் இன்னொரு பெயர்.

தல வரலாறு

ஆற்றூரில் வசித்து வந்த ஒரு சிவ பக்தரின் மகளாகப் பிறந்தவள் கயற்கண்ணி. அவள் தன் பெற்றோரால் மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டாள்.

அவள் திருமண வயதை எட்டியதும், அவளுக்குத் திருமணம் செய்வதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர் பெற்றோர். ஆனால், அவளோ ‘மந்தாரவனத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானை நான் மனதார நேசிக்கிறேன். அவரைத் தான் மணந்து கொள்வேன்’ என உறுதியாகக் கூறிவிட்டாள். பெற்றவர் களுக்கு அவளின் நிலைமை கண்டு அழுவதா? அல்லது சிரிப்பதா? என்று புரியவில்லை. ‘மானிட பெண் ஒருத்தி, எப்படி இறைவனை மணந்து கொள்ள முடியும்? அது சாத்தியமா?’ என்று மகளை கேட்டதும், அவளின் முடிவை மாற்றிக்கொள்ளும்படி வற்புறுத்தினர்.

ஆனால், கயற்கண்ணியோ தன் முடிவிலிருந்து பின் வாங்குவதாக இல்லை. சிவபெருமானையே சதா சர்வகாலமும் எண்ணி பூஜித்து வந்தாள். அவரின் நினைவிலேயே நாட்களைக் கடத்தினாள்.

கயற்கண்ணியின் மன உறுதியைக் கண்ட சிவபெருமான் மனம் கசிந்தார். அவரின் பார்வை அவளை நோக்கித் திரும்பியது. அவளை மணந்து கொள்ள முடிவு செய்தார்.

ஆற்றூரில் மந்தாரவனத்தில் எழுந்தருளியுள்ள மந்தாரவனேசுவரர் என அழைக்கப்படும் சிவ பெருமான் ஒரு பிரமசாரியின் வேடம் பூண்டு, தேவர்கள் புடைசூழ, தை மாதத்தில் ஒரு வெள்ளியன்று ஆற்றூரில் எழுந்தருளி கயற்கண்ணியை மணந்தார்.

கயற்கண்ணியின் பெற்றோர் தங்கள் மகள் ஒரு தெய்வமகள் என்று உணர்ந்து, மணமக்களை ஆசீர்வாதம் செய்தனர். சிவபெருமான் கயற்கண்ணியுடன் திருக்கோவிலுக்கு எழுந்தருளினார். வடக்குப் பிரகாரத்தில் எழுந்தருளியுள்ள அன்னை அபயாம்பிகை என்ற அஞ்சனாட்சி அம்மனை வணங்கி அருள் பெற்றாள் கயற்கண்ணி. அன்று முதல் அன்னை அஞ்சனாட்சி அம்மைக்குரிய சிறப்புகள் அனைத்தும் கயற்கண்ணி அம்மைக்கும் நடைபெறத் தொடங்கின.

ஆலய அமைப்பு

தற்போது ஆற்றூர் என அழைக்கப்படும் இத்தலத்தின் பழைய பெயர் ‘மந்தாரவனம்’ என்பதாகும். இங்குள்ள அருள்மிகு சொர்ணபுரீஸ்வரர் ஆலயம் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. ஆலயத்தின் எதிரே திருக்குளம் உள்ளது. இந்தக் குளம் கயிலாய தீர்த்தம் எனவும், மண்டூக தீர்த்தம் எனவும் அழைக்கப்படுகிறது.

கோவிலின் உள்ளே நுழைந்ததும் நந்தியும், பலிபீடமும் காணப்படுகின்றன. அடுத்து உள்ளது மகா மண்டபம். இந்த மண்டபத்தின் வலப்புறம் அன்னை கயற்கண்ணி தென் முகம் நோக்கி அருள்பாலிக்கிறாள். அடுத்துள்ள அர்த்த மண்டபத்தின் நுழைவு வாசலில் இரண்டு துவாரபாலகர்கள் கம்பீரமாகக் காவல் காக்கின்றனர். அடுத்துள்ள கருவறையில் இறைவன் சொர்ணபுரீஸ்வரர் சிவலிங்கத் திருமேனியில் கிழக்கு திசை நோக்கி அருள் புரிகிறார். தேவக்கோட்டத்தில் தென் திசையில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தியும், மேற்கில் மகாவிஷ்ணுவும் வடக்கில் அஷ்டபுஜ துர்க்கையும் அருள்பாலிக்கின்றனர்.

திருச்சுற்றில் தெற்கில் அன்னை அபயாம்பிகை தனிக்கோவில் கொண்டு அருள்பாலிக்கிறாள். தவிர, மேற்கில் சொர்ண விநாயகர், நால்வர், வள்ளி, தெய்வானை, முருகன், கஜலட்சுமியும், கிழக்கில் பைரவர், சூரியன், நாகர், சனீஸ்வரன் ஆகியோரும் வீற்றிருக்கின்றனர்.

இங்குள்ள துர்க்கை தனது எட்டு கரங்களில் சங்கு, சக்கரம், வில், கபாலம், டமருதம், கெண்டி இவைகளை தாங்கி அபய, வரத முத்திரைகளுடன் அருளாட்சி செய்கிறாள். செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமை ராகு கால நேரத்தில் துர்க்கைக்கு அர்ச்சனை செய்து, எலும்பிச்சை விளக்கு ஏற்றி வழிபட்டால் கன்னியருக்கு விரைந்து திருமணம் நடந்தேறும் என்கின்றனர் பக்தர்கள்.

திருவிழாக்கள்

இந்த ஆலயத்தில் காலை, உச்சி, சாயரட்சை, அர்த்தசாமம் என நான்கு கால பூஜைகள் சிறப்பாக நடைபெறுகின்றன. சோமவாரங்கள், சித்ரா பவுர்ணமி, தமிழ் வருடப் பிறப்பு, ஆனித் திருமஞ்சனம், நவராத்திரி, பிரதோஷம், சோமவாரம், கார்த்திகை, சிவராத்திரி போன்ற நாட்களில் இறைவனுக்கும், இறைவிகளுக்கும் சிறப்பான பூஜைகளும், ஆராதனைகளும் நடைபெற்று வருகின்றன. திருவாதிரைத் திருநாளில் நடராஜரும், சிவகாமி அம்மனும் வீதி உலா வருவதுண்டு.

பவுர்ணமி பூஜை

இங்கு இறைவனுக்கு நடைபெறும் பவுர்ணமி பூஜை மிகவும் சிறப்பானது. அன்று பல பெற்றோர்கள் தங்கள் மகன் அல்லது மகள் ஜாத கத்தை இறைவன் பாதத்தில் வைத்து, பூஜை செய்து, திரும்ப வாங்கிச் செல்கின்றனர். இவ்வாறு செய்வதால், திருமணத் தடை விலகி விரைவில் திருமணம் நடந்தேறும் என்பது பக்தர் களின் நம்பிக்கை. எனவே பவுர்ணமி நாட்களில் இந்த ஆலயத்தில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழிகிறது.

மகாவிஷ்ணு

அசுரர்களை அழிக்க இத்தலத்து இறைவனை வேண்டி, அதீத பலம் பெற்றார் மகாவிஷ்ணு. இதற்கு சான்று பகிரும் வகையில் இந்த ஆலயத்தின் அருகிலேயே சுகவாசி நாராயண பெருமாள் என்ற பெயரில் தன் பரிவாரங்களுடன் அவர் கோவில் கொண்டுள்ளார். தவிர தேவ கோட்டத்தில் மேல் திசையில் மகாவிஷ்ணு அருள் பாலிக்கிறார். எனவே, இந்த ஆலயத்தில் சிவ-விஷ்ணு பேதம் இல்லை.

இந்த ஆலயம் காலை 9 மணி முதல் பகல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். ஆலயத்தில் தல விருட்சம் மந்தாரை மரம். இந்த ஆலயம் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

நாகை மாவட்டம் பந்தநல்லூர் - மணல்மேடு பேருந்து தடத்தில் உள்ள கடலங்குடி என்ற ஊரிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ஆற்றூர் திருத்தலம்.

-ஜெயவண்ணன்.

முக்தி பெற்ற தவளை

இங்குள்ள திருக்குளத்தில் ஒரு தவளை இருந்தது. ஒரு மகா சிவராத்திரியன்று கன மழை பெய்தது. மழையில் துள்ளித்திரிந்த தவளை அங்கிருந்த நாவல் மரத்தின் அடியில் ஒதுங்கியது. அங்கே இருந்த பாம்பு ஒன்று, அந்தத் தவளையை கவ்விப் பிடித்தது. பாம்பின் வாயில் அகப்பட்டுக் கொண்ட தவளை, ‘நீண்ட நாட்களாக ஈசனின் திருக்குளத்தில் தங்கி இறைவனையே சிந்தனை செய்த எனக்கா இந்த நிலைமை’ என்று வருந்தியது. மேலும் அபயம்பிகை அன்னையை பிரார்த்தனை செய்தது. தவளையின் பிரார்த்தனைக்கு மனம் இளகிய அன்னை பஞ்சாட்சர மந்திரத்தை உபதேசிக்க, தவளை பாம்பின் பிடியிலிருந்து விடுபட்டது. மேலும் அந்த பாம்பையே ஆபரணமாகவும் அணிந்து கொண்டது. பின்னர் வெகு காலம் திருக்குளத்திலேயே வாழ்ந்த அந்தத் தவளை இறுதியில் சிவலோகம் சென்றடைந்ததாக தல வரலாறு கூறுகிறது. இந்த தீர்த்தத்தில் நீராடி இறைவன், இறைவியை வணங்கினால் மண்டூக தோஷம், கால சர்ப்ப தோஷம், ராகு தோஷம் அனைத்தும் விலகும் என்கின்றனர் பக்தர்கள். 

Next Story