புரட்டாசி 3–வது சனிக்கிழமையையொட்டி சேலம் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு
சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெருமாள் கோவில்களில் நேற்று புரட்டாசி 3–வது சனிக்கிழமையையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடத்தப்பட்டது.
சேலம்,
பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர். சேலம் அழகிரிநாதர் என்றழைக்கப்படும் கோட்டை பெருமாள் கோவிலில் நேற்று அழகிரிநாதர்–சுந்தரவல்லி தாயாருக்கும் புஷ்ப அலங்காரமும் செய்து பூஜைகள் செய்யப்பட்டது. இதையொட்டி ஆஞ்சநேயர் துளசி மாலை அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
இதேபோல், சேலம் பெரியபுதூரில் உள்ள வெங்கடேஸ்வர ஆஸ்ரமத்தில் மூலவர் பெருமாளுக்கு ராஜ அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. சின்னத்திருப்பதி வெங்கடேச பெருமாள்(மூலவர்) ராஜ அலங்காரத்திலும், உற்சவர் கருடாழ்வார் சிறப்பு அலங்காரத்திலும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சேலம் சின்னக்கடை வீதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில், மூலவருக்கு பல்வேறு பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு தங்க கவசம் சாத்தப்பட்டது. அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலிலும் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பெருமாளை, பக்தர்கள் தரிசனம் செய்து வழிபட்டனர்.
இதேபோல குரங்குச்சாவடி கூசமலை வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு சாமி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். சேலம் ஜாகீர் அம்மாபாளையம் விஜயராகவன்நகரில் உள்ள பக்த வரப்பிரசாத ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
நெத்திமேடு கரியபெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் பெருமாள் தங்க கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். மலைமீது உள்ள கோவிலுக்கு திரளான பக்தர்கள் நடந்து சென்று சாமி தரிசனம் செய்தனர். ஜாகிர்அம்மாபாளையத்தில் உள்ள காவடி பழனியாண்டவர் ஆஸ்ரமத்தில் புரட்டாசி 3–வது சனிக்கிழமையையொட்டி திருப்பதி வெங்கடாசலபதிக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. இதைத்தொடர்ந்து அலமேலு மங்கை தாயாருடன் பெருமாள் அன்னபட்சி வாகனத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
செவ்வாய்பேட்டை பாண்டுரங்கநாதர் கோவில், அயோத்தியாப்பட்டணம் ராமர் கோவில், செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாசலபதி கோவில், உடையாப்பட்டி சென்றாய பெருமாள் கோவில், ஆனந்தா இறக்கம் லட்சுமிநாராயணசாமி கோவில், கடைவீதி வேணுகோபாலசாமி கோவில், நாமமலை பெருமாள் கோவில், பெரமனூர் பெருமாள் கோவில் உள்பட பல்வேறு பெருமாள் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், ஆராதனை மற்றும் அன்னதானம் நடந்தது.
சேலம் அம்மாபேட்டை சிங்கமெத்தை அருகில் உள்ள முராரி வரதைய்யர் தெருவில் ஸ்ரீவெங்கடேஸ்வர சாமி அலங்கார வைபவம் சார்பில் ஏழுமலை வெங்கடேச பெருமாள், ஸ்ரீஅலமேலு மங்கை தாயார் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு திவ்ய தரிசனம் நடந்தது.