கருணை பொழியும் ஆதி மூலப் பெருமாள்


கருணை பொழியும் ஆதி மூலப் பெருமாள்
x
தினத்தந்தி 10 Oct 2017 1:45 AM GMT (Updated: 9 Oct 2017 1:14 PM GMT)

சென்னை வடபழனியில் ஆதி மூலப் பெருமாள் கோவில் தெருவில், பிரதான கிழக்கு வாசல் கொண்டு ஸ்ரீ ஆதி மூலப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது.

சென்னை வடபழனியில் ஆதி மூலப் பெருமாள் கோவில் தெருவில், பிரதான கிழக்கு வாசல் கொண்டு ஸ்ரீ ஆதி மூலப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. வட பழனி முருகன் ஆலயம், இவ்வாலய பின்புற வாசல் பகுதியில் உள்ளது. சுமார் 600 வருடம் கடந்த பழமையான ஆலயம் இது.

பிரதான வாசலைக் கடந்து உள்ளே நுழைகையில், பலி பீடத்தைக் காணலாம். அதைக் கடந்து செல்கையில்,  பெரிய திருவடியான கருடாழ்வாரை தரிசனம் செய்யலாம். அடுத்துள்ள கருவறை மண்டப தூண்களில் கிருஷ்ணர், அனுமன், திருமால் போன்ற திருவுருவங்கள் புடைப்புச் சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. மூலவர் சன்னிதி நுழைவு வாசலில் வலது மற்றும் இடது புறங்களில் ஜெயன் மற்றும் விஜயன் ஆகியோர் துவார பாலகர்களாக உள்ளனர்.

கருவறையில் மூலவராக ஆதிமூலப் பெருமாள், ஸ்ரீதேவி– பூதேவி சமேதராய் சதுர் புஜங்களுடன் கிழக்கு நோக்கி காட்சி தருகிறார். புன்னகை தவழும் முகத்துடன் அருள்பாலிக்கும் இத்தல இறைவன், இடது கரத்தில் அஹ்வான முத்திரையுடனும், வலது கரத்தில் அபய ஹஸ்தத்துடனும், மற்ற இரு கரங்களில் சங்கு மற்றும் சக்கரம் ஏந்தி காட்சி தருகிறார். மேலும் ஒரு காலை மடித்து வைத்தபடியும், மற்றொரு காலை தாமரை மலரின் மீது வைத்த படியும் அமர்ந்த கோலத்தில் பேரழகுடன் வீற்றிருக்கிறார். இவர் தேடி வரும் பக்தர்களின் குறைகளை போக்கும் பெருமாளாக, யானையின் துயர் தீர்த்த பெருமாளாக விளங்கு கிறார். உற்சவர் கஜேந்திர வரதராஜப் பெருமாள் ஸ்ரீதேவி– பூதேவி சமேதராய் நான்கு கரங்களுடன் எழுந்தருளியுள்ளார்.

மூலவர் சன்னிதியை விட்டு வெளியே வருகையில், இடதுபுறத்தில் உள்ள சன்னிதியில் வேணுகோபாலன், ஆண்டாள் எழுந்தருளி சேவிக்கும் பக்தர்களுக்கு மன நிம்மதி ஏற்பட செய்கின்றனர். இது தவிர ராமானுஜர் சன்னிதி என்று எழுதப்பட்ட சன்னிதியில் விக்னேஷ்வர், நம்மாழ்வார், கலியன், மணவாள மாமுனிகள் மற்றும் உடையவர் ஆகியோரும் குடிகொண்டுள்ளனர். இந்த சன்னிதிக்கு எதிரில் வரத ஆஞ்சநேயர் வீற்றிருக்கிறார்.

கருவறையை விட்டு வெளியே வருகையில், வெளிப்பிரகாரத்தில் இடது பக்கத்தில் தனிச்சன்னிதியில் தாயார் சேவை சாதிக்கிறார். தாயாரின் திருநாமம் ஆதிலட்சுமி என்பதாகும். அமர்ந்த கோலத்தில் இரு கரங்களில் மலர் ஏந்தியும், மற்ற இரு கரங்களில் அபய, வரத முத்திரையுடனும், புன்சிரிப்புடனும், சாந்த சொரூபினியாக தாயார் அமர்ந்துள்ளார். அபயம் என வருபவர்களுக்கு உடனே ஆனந்தம் அளிப்பவளாகத் திகழ்கிறார்.

ஆலயத்தில் உள்ள அரச மரத்தின் கீழ் கர்ப்பக ஸ்வரூபினி தாயார் நான்கு கரங்களுடன் அமர்ந்த கோலத்தில், இரு கரங்களில் மலர் ஏந்தியும், மற்ற இரு கரங்களில் அபய, வரத முத்திரையுடனும் பக்தர்களுக்கு சேவை சாதிக்கிறார். புன்னகை தவழும் முகத்துடனும், தனது கடைக்கண் பார்வையால் தன்னை நாடி வரும் பக்தர்களின் மனக்குறையை நீக்குபவராகவும் இவர் திகழ்கிறார். கருவுற்ற தாய்மார்களின் கரு காக்கும் தாயாக விளங்கு கிறார். மேலும் சுகப் பிரசவம் வேண்டுவோர் இந்த தாயாரை விடாது வணங்கி சுகப் பிரசவம் அடைகின்றனர். குழந்தை பாக்கியம், சுகப்பிரசவம் கிடைக்கப் பெற்றவர்கள், இந்த தாயாருக்கு நேர்த்திக்கடன் செலுத்தி தங்கள் நன்றிக் கடனை சொல்கின்றனர்.

இவ்வாலயத்திற்கு ராஜகோபுரம் மற்றும் கருவறை விமானம் கட்டப்படவில்லை. கருவறை வெளிச்சுற்று சுவரில் தசாவதாரம், திருவள்ளுர் வீரராகவப் பெருமாள், ஆண்டாள், சக்கரத்தாழ்வார் ஆகியோரது உருவங்கள் ஓவியமாக நேர்த்தியாக வரையப்பட்டுள்ளது. ஆலய தல விருட்சம் திருவரசு ஆகும். கஜேந்திர மோட்சம் நடைபெற்ற இந்த ஆலயத்தில் பாஞ்சதரத்ரம் என்ற ஆகம முறைப்படி வழிபாடுகள் செய்யப்படுகின்றன.

வரத ஆஞ்சநேயர் சன்னிதியில் பக்தர்கள் தங்கள் கோரிக்கை நிறைவேற வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வடை மாலை சாற்றி  வணங்குகின்றனர். உருவத்தில் மூர்த்தி சிறியதானாலும் கீர்த்தியில் தன்னிகரில்லாதவராக விளங்குகிறார்.

இவ்வாலயத்தில் வாரந்தோறும் புதன்கிழமைகளில் பெருமாளுக்கு திருமஞ்சனமும், வெள்ளி தோறும் தாயாருக்கு திருமஞ்சனமும் நடைபெறுகிறது. பெருமாள் சன்னிதியில் ஹஸ்தம் மற்றும் திருவோணத்தில் உற்சவருக்கு திருமஞ்சனம் நடைபெறுகிறது. ரோகிணி நட்சத்திரத்தில் கண்ணன் திருமஞ்சனமும், திருவாதிரை நட்சத்திரத்தில் ராமானுஜர் திருமஞ்சனமும் நடைபெறு கிறது.

குழந்தைகள் படிப்பறிவு, ஞாபக சக்தி, புத்தி கூர்மை, நல்ல பழக்க வழக்கங்கள் ஏற்பட வியாழக்கிழமைகளில்  ராமானுஜருக்கு ஏலக்காய் மாலை சாத்தி வழிபடுகின்றனர்.

இந்து சமய அறநிலைய கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் இந்த ஆலயம், தினமும் காலை 6.30 மணி முதல் நண்பகல் 11.30 மணி வரையிலும், மாலை 4.30 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கிறது.

–மு.வெ.சம்பத்.

வழக்குகள் முடிவுற..

நிரந்தர உத்தியோகம் கிடைக்க, சத்ரு தொல்லை விலக, மரண பயம் நீங்க, சங்கடங்கள் தீர, கடன் பிரச்சினையில் இருந்து  விடுபட, தீராத வியாதியில் இருந்து நிவாரணம் பெற, வியாபார அபிவிருத்தியடைய பெருமாள் சன்னிதியில் பிரார்த்தனை செய்து பலடைகின்றனர். இத்தலத்தில் இருக்கும் வழக்கறு தும்பிக்கை ஆழ்வார், தீராத வழக்குகளையும் தீர்த்து வைப்பவராக திகழ்கிறார். தம்பதி களுக்குள் உள்ள கருத்து வேறுபாடு நீங்கி அன்னியோன்யம் ஏற்பட தாம்பத்ய சே‌ஷங்கள் (சல்லாப நாகங்களை) வணங்கி பலனடைகின்றனர்.

குழந்தை  வரம்  கிடைக்க..

ரோகிணி நட்சத்திரத்தன்று காலை விரதமிருந்து, வீட்டிலிருந்து தொட்டில் கண்ணன், புஷ்பம், அவல், வெண்ணெய், பழங்கள், தேங்காய், வெற்றிலை, பாக்கு, இரண்டு செவ்வாழை ஆகியவற்றை ஆலயத்திற்கு கொண்டு வர வேண்டும். தொட்டில் கண்ணனை திருக்கோவில் அர்ச்சகரிடம் சமர்ப்பித்து, கண்ணன் திருவடியில் வைத்து பூஜை செய்து பின் அதை மடியில் வாங்கிக் கொண்டு, அரச மரத்தடியில் உள்ள சந்தான கண்ணனை 27 முறை வலம் வந்து, மனமுருகி நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்ய வேண்டும். பிறகு கண்ணனை தொட்டிலில் வைத்துக் கட்டி விட்டு, சந்தான கோபாலனுக்கு பால் பாயசத்தை சமர்ப்பித்து பக்தர்களுக்கு விநியோகித்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது நம்பிக்கை. இந்த பிரார்த்தனையை தொடர்ந்து 12 ரோகிணி நட்சத்திரத்தில் செய்ய வேண்டும்.

திருமணத்தடை நீங்க..

திருமணமாகாதவர்கள், செவ்வாய்க்கிழமைகளில் தொடர்ச்சியாக 16 வாரம் வழிபட வேண்டியது அவசியம். முதல் 3 வாரம் 3 கல்யாண மாலை கொணர்ந்து, 3 மாலையையும் பெருமாளுக்குச் சாத்தி, ஒரு மாலையை பிரசாதமாக பெற்று கழுத்தில் அணிந்து கொண்டு 12 முறை ஆலயத்தை வலம் வர வேண்டும். தாயார் சன்னிதியில் சங்கல்பம் செய்து கொண்டு 12 முறை வலம் வந்து 16 வாரம் விரலி மஞ்சள் கணக்கின்றி மாலையாக தொடுத்து தாயாருக்கு சமர்ப்பித்து அர்ச்சனை செய்ய வேண்டும். 16–வது வாரம், 3 கல்யாண மாலை தாயாருக்கு சமர்ப்பித்து சங்கல்பம் பூர்த்தி செய்ய வேண்டும். திரு மணம் கை கூடியவுடன் தம்பதி சமேதராய் ஆலயம் வந்து, பெருமாள் தாயாரை வணங்க வேண்டும்.

Next Story