ஆன்மிகம்

பிள்ளைகளின் கடமைகள் + "||" + Children duties

பிள்ளைகளின் கடமைகள்

பிள்ளைகளின் கடமைகள்
பெற்றோரும், பிள்ளைகளும் இன்றைய சமூகத்தில் கீரியும், பாம்பும் போல் இருக்கின்றனர். முதுமை அடைந்த பெற்றோரை புறக்கணிப்பதையே சிலர் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர்.
பெற்றோரும், பிள்ளைகளும் இன்றைய சமூகத்தில் கீரியும், பாம்பும் போல் இருக்கின்றனர். முதுமை அடைந்த பெற்றோரை புறக்கணிப்பதையே சிலர் வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். வயதான பெற்றோருக்கு உண்ண உணவு கொடுக்காமல், உடுத்துவதற்கு உடை கொடுக்காமல் சில பிள்ளைகள் அவர்களை அடித்து விரட்டி விடுகின்றனர்.  

பெற்றோரை எந்த அளவுக்கு கண்ணியப்படுத்தி மரியாதை செய்ய வேண்டும் என்பது குறித்து வல்ல இறைவன் தனது அருள்மறையான திருக்குர்ஆனில் கூறியிருப்பதாவது:

‘‘(நபியே!) உங்களது இறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக்கூடாதென்று (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். உங்களிடம் இருக்கும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோமுதுமையை அடைந்துவிட்ட போதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) ‘சீ’ என்றும் சொல்ல வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறிய போதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுங் கள்’’.

‘‘அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடங்கள்! அன்றி ‘என் இறைவனே! நான் குழந்தையாக இருந்தபொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீதும் அன்பும் அருளும் புரிவாயாக!’ என்றும் நீங்கள் பிரார்த்தியுங்கள்’’. (திருக்குர்ஆன் 17:23,24)

சில பிள்ளைகள் பெற்றோரை மரியாதையாக அழைக்காமல் ‘வா, போ, அவன், இவன்’ என்று அழைக்கின்றனர். இப்படி மரியாதைக் குறைவாக அழைக்கக் கூடாது என்றும் திருக்குர்ஆனின் வசனம் தடை செய்கிறது.  

இறைத்தூதர் நூஹ் இறைவனிடம், ‘‘என் இறைவனே! எனக்கும் என்னுடைய தாய் தந்தைக்கும், நம்பிக்கைக் கொண்டவனாக என்னுடைய வீட்டில் நுழைந்தவனுக்கும், (வீட்டில் நுழையாத மற்ற) நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கும், நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் நீ மன்னித்தருள் புரிவாயாக. இந்த அநியாயக்காரர்களுக்கும் அழிவை தவிர நீ அதிகப்படுத்தாதே (என்றும் பிரார்த்தித்தார்)’’. (திருக்குர்ஆன் 71:28).

இறைத்தூதர் நூஹ் தனது பெற்றோருக்காக பிரார்த்தனை செய்ததை இறைவன் எடுத்துக்காட்டி நீங்களும் உங்கள் பெற்றோருக்காக பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று நமக்கு பாடம் நடத்துகிறான்.

பெற்றோருக்கு பிள்ளைகள் ஏன் நன்மை செய்ய வேண்டும். அதைப் பற்றி இறைவன் திருக்குர்ஆனில் இவ்வாறு தெரிவிக்கின்றான்.

‘‘மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பது மாதங்களாகும். அவன் வாலிபமாகி, நாற்பது வயதை அடைந்ததும்: ‘இறைவனே! நீ என் மீதும், என் பெற்றோர் மீதும் புரிந்த நிமத்துக்காக, (அருள் கொடைகளுக்காக) நன்றி செலுத்தவும், உன்னுடைய திருப்தியை அடையக் கூடிய ஸாலிஹான நல்ல அமல்களைச் செய்யவும் எனக்கு அருள் பாலிப்பாயாக! (இதில் எனக்கு உதவுவதற்காக) என்னுடைய சந்ததியையும் ஸாலிஹானவர்களாக (நல்லது செய்பவர்களாக) சீர்படுத்தியருள்வாயாக! நிச்சயமாக நான் உன்பக்கமே திரும்பு கிறேன்; அன்றியும், நான் முஸ்லிம்களில் நின்றுமுள்ளவனாக (உனக்கு முற்றிலும் வழிப்பட்டவனாக) இருக்கின்றேன்’ என்று கூறுவான்’’. (46:15)

இறைத்தூதர் யூசுப் தனது பெற்றோரை நீண்ட காலம் பிரிந்திருந்தார். பின்னர் அவர்களை சந்தித்தபோது தனது சிம்மாசனத்தில் அவர்கள் இருவரையும் அமர வைத்து அழகு பார்த்த செய்தியை ‘தமது பெற்றோரை தமது சிம்மாசனத்தின் மீது அமரச் செய்தார். அவர்கள் அனைவரும் அவருக்கு பணிந்தனர்’ என்று இறைவன் திருக்குர்ஆனில் (12:100) எடுத்துக் காட்டுகிறான்.

இதன் மூலம் பிள்ளைகள் பெற்றோரை உயர்ந்த இடத்தில் அமர வைத்து அழகு பார்க்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பெற்றோரை எந்த அளவுக்கு கண்ணியப்படுத்த வேண்டும் என்பதை திருக்குர்ஆன் இவ்வாறு வலியுறுத்துகிறது:

‘அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக் கூடாது. பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், ஏழைகளுக்கும் நல்லுதவி புரிய வேண்டும்’ (2:83),

‘‘(நபியே! பொருட்களில்) ‘எதைச் செலவு செய்வது? (யாருக்குக் கொடுப்பது?)’ என்று உங்களிடம் கேட்கின்றனர். (அதற்கு) நீங்கள் கூறுங்கள்: (நன்மையைக் கருதி) ‘நீங்கள் எத்தகைய பொருளைச் செலவு செய்தபோதிலும் (அதனைத்) தாய், தந்தை, சுற்றத்தார், அநாதைகள், ஏழைகள், வழிப்போக்கர்கள் ஆகியோருக்குக் கொடுங்கள். இன்னும், நீங்கள் (வேறு) என்ன நன்மையைச் செய்தபோதிலும் அதனையும் நிச்சயமாக அல்லாஹ் அறி(ந்து அதற்குரிய கூலியும் தரு)வான்’’. (2:215).  

‘‘ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து, இறைத்தூதரே! நான் அழகிய நட்பு கொள்வதற்கு மனிதர்களில் அதிக தகுதி வாய்ந்தவர் யார்? என்று கேட்டான். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உனது தாய் என்றார்கள். பின்பு யார்? எனக் கேட்டேன். உனது தாய் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பிறகு யார்? என நான் கேட்டேன். உனது தாய் என்றார்கள். பிறகு யார்? எனக் கேட்டேன். உனது தந்தை என்றார்கள்’’. (அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: புகாரி, முஸ்லிம்)

இன்றைய பிள்ளைகளுக்கு நண்பர்கள் தான் பெரிதாகத் தெரிகிறார்கள். அவர்களுக்கு பிறகு தான் பெற்றோர் என அவர்கள் நினைக்கின்றனர். நட்பு கொள்வதற்கு உலகிலேயே சிறந்தவள் தாய் தான். அவளுக்கு பிறகு தந்தை, இந்த இருவர் போல பிள்ளைகளிடம் அன்பு பாராட்டுபவர்களும், நலன் நாடுபவர்களும் இருக்கவே முடியாது. இதை பிள்ளைகள் உணர்ந்து நடக்க முற்படும் போது அவர்கள் எல்லா நிலையிலும் உயர்ந்தவராகவே இருப்பர்.

ஒரு மனிதனின் இறுதி இலக்கு மறுமையில் சொர்க்கத்தை அடைவதாகவே இருக்கும். இந்த உலகில் ஒருவர் தோற்று விட்டால் அவரை கை தூக்கி விடுவதற்கு சிலர் இருப்பார்கள். சிலர் யாருடைய தயவும் இல்லாமல் தானாகவே கூட எழுந்து விடுவார்கள். அதே சமயம் ஒரு மனிதன் மறுமையில் தோற்று விட்டால் அவனால் அதிலிருந்து மீளவும் முடியாது. கை தூக்கி விடுவதற்கும் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனால் இந்த உலகத்தில் பெற்றோரை நல்ல முறையில் பேணுவதன் மூலம் மறுமையில் வெற்றி பெற முடியும் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.  

இறைவனின் இந்த கட்டளைகளை ஏற்று, பெற்றோருக்கு நன்மை செய்யும் மக்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள்வானாக!

எஸ். அமீர் ஜவஹர், காரைக்கால்.