ஊஞ்சலில் வந்தமர்ந்த தந்தி மாரியம்மன்


ஊஞ்சலில் வந்தமர்ந்த தந்தி மாரியம்மன்
x
தினத்தந்தி 31 Oct 2017 8:03 AM GMT (Updated: 31 Oct 2017 8:03 AM GMT)

குன்னூரின் பஸ் நிலையத்தில் இருந்து அரைகிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேல் கடைவீதியில் தந்தி மாரியம்மன் கோவில் கொண்டு உள்ளார்.

ராசக்தி என்பது பரபிரம்மம் ஆகும். அதாவது பரந்து விரிந்த பார் உலகையும் ஆட்சி செய்பவள் என்று பொருள். எந்த ஒரு செயலையும் செய்வதற்கு ஒரு சக்தி தேவை. அந்த சக்தியாக அன்னை விளங்குகிறாள். ஒரு தாய் தன் குழந்தையை எப்படி பராமரிக்கிறாளோ அப்படி தன்னை தரிசிக்க வரும் பக்தர்களின் இன்னல்களை தீர்த்து அவர்களுக்கு வேண்டிய வரங்களை வழங்கி துயர் துடைக்கும் அன்னையாக தந்தி மாரியம்மன் விளங்கி வருகிறார். இவர் நீலகிரி மாவட்டம், குன்னூரில் எழுந்தருளி உள்ளார். குன்னூரின் பஸ் நிலையத்தில் இருந்து அரைகிலோ மீட்டர் தொலைவில் உள்ள மேல் கடைவீதியில் தந்தி மாரியம்மன் கோவில் கொண்டு உள்ளார். இந்த கோவில் சிறியதாக இருந்தாலும் அதில் வீற்றிருக்கும் தந்தி மாரியம்மனின் அருள் மிகவும் சக்தி வாய்ந்ததாகும். இதற்கு கோவிலில் 40 நாட்கள் கொண்டாடப்படும் தேர்த்திருவிழாவே சான்று. இந்துக்கள் மட்டுமின்றி இந்த கோவில் திருவிழாவை கிறிஸ்தவர்களும், முஸ்லிம்களும் கொண்டாடுகிறார்கள். ஒரு சமய ஒற்றுமை திருவிழாவாக இப்பகுதி மக்கள் இந்த கோவில் திருவிழாவை பல ஆண்டுகளாக நடத்தி வருவது குன்னூர் நகருக்கு பெருமை சேர்க்கிறது.

ஆலய வரலாறு

இன்று குன்னூரில் மலை சரிவுகளில் தீப்பெட்டிகளை அடுக்கி வைத்தாற்போல கட்டிடங்கள். ‘குளு, குளு‘ காலநிலை நிலவுவதால் நகரை பெரும்பாலான தனியார் தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள், ஓட்டல்கள், வணிக நிறுவனங்கள் ஆக்கிரமித்து கொண்டன. தற்போது கோவில் இருப்பது கூட இந்த கட்டிடங்களுக்கு மத்தியில் தேடி தான் பார்க்க வேண்டிய நிலை உள்ளது.

ஆனால் முன்பு இப்பகுதி சிறிய ஊராக காட்சியளித்தது. சுற்றிலும் பசுமை சூழ்ந்த வனப்பகுதிகள். இதனால் ஆங்கிலேயர்கள் காலத்தை சேர்ந்த அதிகாரிகளின் குதிரைகளும், சாரட் வண்டிகளும் தங்கும் இடமாக தான் இந்த பகுதி விளங்கி வந்தது. அதை பராமரிக்கும் பணியிலும், கண்காணிக்கும் பணியிலும் காவலர்கள் ஈடுபட்டு வந்தனர். அவர்களும் குதிரைகள் தங்கும் இடத்தில் தங்கி இருந்தனர். அப்போது எல்லாம் மாலை 5 மணி ஆகி விட்டாலே இருட்ட தொடங்கி விடும். குதிரைகளையும், சாரட் வண்டிகளையும் கண்காணிக்க பெரிய தேக்கு மரத்தில் ஏணியை வைத்து ஏறி அதன் மீது உள்ள லாந்தர் விளக்கில் தீபம் ஏற்றப்படும். அதில் எரியும் வெளிச்சம் அந்த பகுதி முழுவதும் பிரகாசிக்கும். இதை தொடர்ந்து இரவு முழுவதும் குளிரில் நடுங்கியபடியே குதிரைகளையும், சாரட் வண்டிகளையும் கண்காணிப்பார்கள்.

ஊஞ்சல் ஆடிய சிறுமி

இந்த நிலையில் ஒருநாள் காவலாளி ஒருவர் இரவு லாயத்தில் இருந்து வெளியே வந்தார். அப்போது எதேச்சையாக தேக்குமர லாந்தர் விளக்கை பார்த்தார். அதில் ஒரு சிறுமி கயிறு கட்டிய ஊஞ்சலில் அமர்ந்து ஆடி கொண்டு இருந்தாள். அவள் பட்டொளி வீசும் உடைகளை உடுத்தியும், ஜொலிக்கும் நகைகளையும் அணிந்து இருந்தாள். மறுநாள் இதை காவலர் தனது நண்பர்களிடமும், உறவினர்களிடமும் தெரிவித்தார். அவர்கள், அந்த காவலர் கூறியதை நம்பாமல் கேலி செய்தனர். அன்று இரவும் அந்த காவலர் தேக்குமர லாந்தர் விளக்கை பார்த்த போது ஊஞ்சலில் சிறுமி ஆடிய காட்சியை பார்த்து அதிர்ந்து போனார். அருகில் சென்று பார்த்தார். அந்த காட்சி மறைந்திருந்தது. தொலைவில் நின்று பார்த்த போது மீண்டும் ஊஞ்சலில் சிறுமி ஆடிய காட்சி தோன்றியது.

இதை கண்டு பயந்து போன காவலர் மறுநாள் ஊர் பெரியவர்களிடம் தான் இரவு கண்ட காட்சியை கூறி இருக்கிறார். காவலர் சொல்வதில் நம்பிக்கை இல்லாத ஊர்பெரியவர்கள் அன்று இரவு குதிரை லாயத்தில் தங்கினார்கள். சூரியன் மறைந்து இரவு வந்தது. தேக்குமரத்தில் உள்ள லாந்தர் விளக்கில் தீபம் ஏற்றப்பட்டது. தீப ஒளியில் குதிரை லாயங்களும், காவலர்கள் தங்கி இருந்த குடியிருப்புகளும் பிரகாசிக்க தொடங்கின. சிறிது நேரம் கழித்து.. அந்த காவலர் குதிரை லாயத்தில் இருந்து வெளியே வந்து பார்த்தார். அப்போது முன்பு பார்த்தது போலவே தேக்குமர லாந்தரில் பட்டொளி வீசும் நகைகள் சூழ சிறுமி ஊஞ்சலில் ஆடி கொண்டு இருந்தாள். இதை பார்த்து காவலர் மட்டுமில்ல.. அதை பார்க்க வந்த ஊர்பெரியவர்களும் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் காட்டுத்தீ போல் பரவியது.

இந்த நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒரு பெரியவரின் கனவில் பெண் ஒருவர் தோன்றி, நான் தான் மாரியம்மன். இப்பகுதியில் உள்ள லாந்தர் விளக்கு பகுதியில் தோன்றி உள்ளேன். என்னை வழிபடுங்கள் என்று கூறி மறைந்தார். இந்த கனவை அந்த பெரியவர் ஊர் மக்களிடம் தெரிவித்தார்.

இதை கேட்டு அதிசயித்த ஊர்மக்கள் பொழுது புலர்ந்ததும் சிறுமி காட்சி தந்த இடத்திற்கு சென்று பார்த்தனர். அங்கே ஒரு சுயம்பு இருப்பதை கண்டனர். அகிலத்தை ரட்சிக்கும் அன்னையே இங்கு மாரியம்மனாக சுயம்புவாக எழுந்தருளி இருப்பதாக கருதிய ஊர்மக்கள் ஒன்று சேர்ந்து அன்னை மாரியம்மனுக்கு சிறிய தகரத்தால் ஆன கோவில் கட்டி வழிபட்டனர். ஆங்கிலேயர்கள் இந்த கோவில் அருகே தந்தி கம்பத்தை நட்டனர். அன்று முதல் தந்தி மாரியம்மன் என்று அழைக்கப்பட்டார்.

கோவில் புனரமைப்பு

இந்த கோவிலை புனரமைக்கும் பணியில் பல்வேறு சமூகத்தாரும் ஈடுபட்டனர். 1945-ம் ஆண்டு இந்த கோவிலின் சன்னிதிகள் இரும்பு கம்பிகளை கொண்டு விஸ்தரிக்கப்பட்டு அம்மனின் உற்சவ விக்கிரகம் வைக்கப்பட்டது. ஊர் மக்கள் ஒன்று சேர்ந்து 1966-ம் ஆண்டு தகரத்தால் ஆன கோவிலை மாற்றி விமானம் அமைத்து புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்தினர். அதன்பிறகு கோவில் முன்பு மண்டபம் அமைக்கப்பட்டன. கடந்த 1991-ம் ஆண்டு மீண்டும் கோவில் புனரமைக்கப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டன. கடந்த 2008-ம் ஆண்டு தந்தி மாரியம்மன் சேவா சங்கம், குன்னூர் நகர மக்கள் சார்பில் சிற்ப சாஸ்திரப்படி கருவறை, அர்த்த மண்டபம், 3 நிலை விமானமும், மகா மண்டபமும் நிர்மானிக்கப்பட்டன.

நின்ற திருக்கோலம்

இந்த திருத்தலத்தில் தந்தி மாரியம்மன் நின்ற திருக்கோலத்தில் கிழக்கு நோக்கி அருட்காட்சி தருகிறார். அன்னைக்கு நான்கு திருக்கரங்கள். வலது இரு திருக்கரங்களில் சூலம், கத்தியையும், இடது இரு திருக்கரங்களில் அங்குசம், குங்கும சிமிழும் ஏந்தி இருக்கிறார். ஆயிரம் கண் உடையவள் என்று பக்தர்கள் போற்றும் அன்னையானவள் இங்கு தன்னை தரிசிப்பவர்களுக்கு பல்வேறு வரங்களை வழங்குகிறார். இங்கு பூ உத்தரவு கேட்கின்றனர். வெள்ளை பூ வந்தால் காரியம் தாமதம் என்றும், சிவப்பு பூ வந்தால் காரியம் நிறைவேறும் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர். இங்குள்ள அர்ச்சகர்கள் முதலில் அர்த்த மண்டபத்தில் இருக்கும் அனுக்ஞை விநாயகரிடம் முதலில் அனுமதி பெற்ற பிறகே தந்தி மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்கிறார்கள்.

இந்த கோவிலில் ஏப்ரல் மாதம் நடைபெறும் தேர்த்திருவிழா 40 நாட்கள் நடைபெறும். அப்போது குண்டம் இறங்குதல் நிகழ்ச்சியும் நடைபெறும். 28 அடி நீளம் 9 அடி அகல குண்டத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் இறங்கி நேர்த்திக் கடன் செலுத்துவார்கள்.

இந்த கோவிலில் தினமும் காலை 7.30 மணி முதல் பகல் 12.30 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் தந்தி மாரியம்மனை தரிசிக்கலாம். தினமும் ஒரு கால பூஜை நடக்கிறது. வெள்ளிக்கிழமை மற்றும் திருவிழா நாட்களில் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன.

அமைவிடம்

மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு செல்லும் வழியில் 35 கிலோ மீட்டர் தொலைவில் குன்னூர் உள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து அடிக்கடி பஸ் வசதி உள்ளது. ஊட்டி மலை ரெயிலிலும் குன்னூர் சென்று அடையலாம்.

- குருவன்கோட்டை ஸ்ரீமன். 

கருவறையில் பலவகை மண்

யானை தந்தத்தால் எடுக்கப்பட்ட மண், மசினகுடியில் இருந்து காளை கொம்பால் எடுக்கப்பட்ட மண், கேரள எல்லையில் இருந்து ஏர்க்கலப்பையால் எடுக்கப்பட்ட மண், பாட்டவயலில் இருந்து எடுக்கப்பட்ட மண், மாயாற்று பகுதியில் இருந்து நண்டின் இருப்பிட மண், பொக்காபுரத்தில் நாகபுற்று மண், மனித கால்சுவடு படாத ஆற்று மண் ஆகியவை எடுத்து வரப்பட்டு கருவறையின் பீடத்துக்குள் வைக்கப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

திருஷ்டி கழிக்கும் வழிமுறை

‘கல்லடிப்பட்டாலும் கண்ணடி படக்கூடாது’ என்பார்கள். கண் திருஷ்டி பட்டாலே படமெடுத்து ஆடும் பாம்பு கூட செத்துவிடும் என்றும் கூறுவார்கள். ஆனால் நம் வளர்ச்சியை கண்டு பொறாமைப்படுபவர்கள். நமக்கு திருஷ்டி ஏற்பட்டு விட்டதாக கருதுபவர்கள் இந்த கோவிலுக்கு வந்து திருஷ்டி கழிக்கின்றனர். அவர்கள் முகத்துக்கு வேப்பிலை கொத்தை அர்ச்சகர்கள் வீசி மந்திரம் சொல்கிறார்கள். இப்படி கூறினால் திருஷ்டி கழிவதாக அவர்கள் நம்புகின்றனர். இந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் திருஷ்டி கழிப்பதற்காகவே கோவிலுக்கு வந்து செல்கின்றனர். 

Next Story