ஆன்மிகம்

அற்புதங்களை அருளும் ருத்ராட்ச மணிகள் + "||" + Rudraksha beads to give miracles

அற்புதங்களை அருளும் ருத்ராட்ச மணிகள்

அற்புதங்களை அருளும் ருத்ராட்ச மணிகள்
சிவபெருமான் தனது ‘ஸம்ஹார’ காரியத்தை ஆற்றும்போது, அவரது கண்களிலிருந்து வெளிப்பட்ட நீரில் இருந்து ‘ருத்ராட்சம்’ உருவானதாக ‘பிருஹத் ஜாபாலோநிஷதம்’ கூறுகிறது.
சிவபெருமான் தனது ‘ஸம்ஹார’ காரியத்தை ஆற்றும்போது, அவரது கண்களிலிருந்து வெளிப்பட்ட நீரில் இருந்து ‘ருத்ராட்சம்’ உருவானதாக ‘பிருஹத் ஜாபாலோநிஷதம்’ கூறுகிறது. சூரிய அம்சம் பெற்ற வலது கண்ணிலிருந்து வெளிப்பட்ட கண்ணீரில் பன்னிரண்டு ருத்ராட்ச மரங்களும், சந்திர அம்சம் பெற்ற இடது கண்ணிலிருந்து வெளிப்பட்ட கண்ணீரில் பதினாறு ருத்ராட்ச மரங்களும், அக்னி அம்சம் பெற்ற நெற்றி கண்ணிலிருந்து விழுந்த கண்ணீரில் பத்து ருத்ராட்ச மரங்களும் தோன்றின. இடது கண் நீரில் தோன்றிய ருத்ராட்சம் வெண்மை நிறத்துடனும், வலது கண் நீரில் தோன்றிய ருத்ராட்சம் பழுப்பு நிறத்துடனும், நெற்றி கண்ணிலிருந்து தோன்றிய ருத்ராட்சம் கருப்பு நிறத்துடனும் இருப்பதாக ஐதீகம். தாவர வகைகளில் குறிப்பிடத்தக்க அளவுக்கு மின்சார சக்தி இருப்பதாக கண்டறியப்பட்டது, ருத்ராட்ச மணிகளில்தான் என்பது கவனிக்கத்தக்கது.

அதிர்வுகளை அறியலாம்

ருத்ராட்சத்தின் மேலாக குறுக்குவாக்கில் கோடுகளும், அதன் நடுவில் இயற்கையாகவே அமைந்த துளையும் இருக்கும். அதன் மேல் இருக்கும் கோடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப அதன் தெய்வாம்சம் சிறப்பாக வெளிப்படுவதாக கண்டறிந்துள்ளார்கள். ஒரு பொருளில் உள்ள மங்கலகரமான அதிர்வுகளை, ருத்ராட்சம் மூலமாக எளிதாகக் கண்டறிய இயலும். அதாவது 27, 54 அல்லது 108 எண்ணிக்கைகள் கொண்ட ருத்ராட்ச மாலையை, குறிப்பிட்ட பொருளுக்கு மேலாக பிடித்தால் அது வலப்புறமாக அதாவது கடிகாரமுள் சுழலும் திசையில் சுழன்றால், அப்பொருளானது நல்ல அதிர்வுகளைப் பெற்றிருப்பதாகக் கருதலாம். அதற்கு மாறாக இடப்புறமாக, அதாவது கடிகாரச் சுற்றுக்கு எதிர்ப்புறமாகச் சுற்றினால், அந்த பொருளில் நல்ல அதிர்வுகள் இல்லை என்றும் தெரிந்து கொள்ளலாம்.

இன்றைய காலகட்டத்தில், ருத்ராட்ச மணிகளை அணிவது, ஆன்மிக காரணங்களுக்காக என்று இல்லாமல், உடல் நலம் சார்ந்தும் இருக்கிறது. அவற்றில் இருக்கும் காந்த அலை இயக்கமானது அணிந்திருப்பவரின் உடல் இயக்கத்தோடு ஒன்றுபட்டு செயல்படக்கூடியது. ருத்ராட்ச மாலையை 3 முதல் 6 மாதங்கள் அணிந்திருந்தால் உடலுக்கு பொருந்தக்கூடிய ஈர்ப்பு மண்டலம் கொண்டதாகவும், உடலின் அதிர்வெண்களுக்கு தக்கவாறும் மாறி விடும்.

அதனால் ருத்ராட்சத்தை இன்னொருவரிடம் கொடுப்பதோ, மற்றவருடையதை பெறுவதோ கூடாது. நமது பாரம்பரியத்தில் மற்றவர் கைகளில் இருந்து உப்பு, எள், எண்ணெய் போன்றவற்றை இன்னொருவர் வாங்கிக் கொள்ள மறுத்து விடுவதை நாம் கவனித்திருக்கலாம். அதற்கு, சில பொருட்களுக்கு அதை தொடும் நபரது உடல் அதிர்வுகளைக் கிரகித்துக் கொள்ளும் ஆற்றல் இருப்பதே காரணம்.

ருத்ராட்சங்களின் முகங்கள்

சிவச் சின்னமாக ருத்ராட்சம் கருதப்பட்டாலும், உலகெங்கும் பரவலான பயன்பாட்டில் இருந்து வருகிறது. அதிலும் ‘ருத்ராட்ச தெரபி’ என்ற மாற்று வைத்திய முறையானது வட மாநிலங்கள் மற்றும் மேலை நாடுகளில் மிகவும் பிரசித்தமாக இருக்கிறது. அத்தகைய ருத்ராட்ச மணிகளில் இயற்கையாகவே அமைந்திருக்கும் முகங்கள் பற்றியும், அவற்றை அணிவதால் கிடைக்கும் பயன்கள் பற்றியும் இங்கே காணலாம்.

1. ஒரு முக ருத்ராட்சம் ‘சிவ’ என்று சொல்லப்படும். அதை அணிவதால் ‘பிரம்மஹத்தி தோஷம்’ விலகுவதோடு, மோட்ச பிராப்தியும் கிட்டுவதாக ஐதீகம்.

2. இரண்டு முக ருத்ராட்சம் ‘தேவ தேவ’ என்று சொல்லப்படும். அர்த்தநாரீஸ்வர அம்சமாக இருக்கும் இவ்வகை மணிகள், சகல பாவங்களையும் நீக்குபவை. முக்கியமாக பிற உயிர்களைக் கொன்ற பாவங்களை விலக்குவதோடு, சொர்க்கப் பிராப்தியையும் தருவதாக நம்பிக்கை உண்டு.

3. மூன்று முக ருத்ராட்சம் ‘அனல’ என்று அறியப்பெறும். அது அக்னி தேவனை குறிப்பதாகும். பூர்வ கர்ம பாவங்களைப் போக்குவதோடு, அணிபவர்களுக்கு தைரியமும், சக்தியும் கிடைக்கும். நுட்பமான புத்தியும், ஆரோக்கியமான உடலும் கிடைத்து, மன மகிழ்ச்சி உண்டாகும்.

4. நான்கு முக ருத்ராட்சமானது ‘ப்ரம்மா’ எனப்படும். வேத விற்பன்னர்கள், தர்ம சாஸ்திர நிபுணர்கள், தனவந்தர்கள் ஆகியோர் இதை அணிவதால், அவர்களது பாவங்கள் விலகுவதாக நம்பிக்கை இருக்கிறது. அறம், பொருள், இன்பம் மற்றும் வீடுபேறு ஆகிய நான்கு பெரும்பேறுகளையும் அளிக்கிறது.

5. பஞ்ச முக ருத்ராட்சம் ‘காலாக்னி’ என்று அறியப்பெறும். பரமசிவனது ஐந்து முகங்களான ‘சத்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம்’ ஆகியவற்றை குறிக்கும். இதை அணிபவர்கள் சிவனுக்கு உகந்தவர்களாகவும், ஐஸ்வர்யம், போகங்களைப் பெற்று, தேவர்களால் வணங்கப்படும் நிலையையும் பெறுவர்.

6. ஆறுமுக ருத்ராட்சம் ‘கார்த்திகேய’ என்று கூறப்படும். வலது கையில் இதை அணிவதால் பாவங்கள் நீங்கும். சகல நற்பண்புகளும், அழகும், தைரியமும் கிடைப்பதோடு, அன்னை பராசக்தி அருளால் வாக்கு வன்மையும் ஏற்படும். ஆறுமுக ருத்ராட்சம், சுப்ரமணியனின் அம்சமாய் அமைந்து கர்ப்ப தோஷங்களை நீக்குகிறது.

7. ஏழு முகம் கொண்ட ருத்ராட்சம் ‘அனந்த’ என்று சொல்லப்படும். மகாலட்சுமியை குறிக்கும் இவ்வகை மணிகளை அணிபவர்களுக்கு விஷ பயங்கள் இருக்காது. பூலோக சுகங்களை தரக்கூடியதாக கருதப்படும் இவை, அனந்த, கார்க்கோடகன், பவுண்டரீகன், சுரேஷன், தட்சகன், விசோல்பன், சங்கசூடன் ஆகிய ஏழு வகை நாக பயங்களை போக்க வல்லது.

8. எட்டு முகம் கெண்ட ருத்ராட்சமானது ‘வினாயக’ எனப்படும். இதை அணிபவர் மேதா விலாசம் எனப்படும் அறிவுத்திறத்தோடு விளங்குவார்கள். இவ்வகை ருத்ராட்ச மணிகள் விநாயகரின் ரூபமாகவும், அஷ்ட வசுக்களின் தத்துவத்துடனும் இருப்பதால், சகல வெற்றிகளையும் தரும். முக்கியமாக இந்த மணிகளை மிக கவனத்துடன்தான் பயன்படுத்த வேண்டும். அனைவருக்கும் பொருந்தக்கூடியதாக இவை இருக்காது என்பதை கவனத்தில் கொள்ளவேண்டும்.

9. ஒன்பது முக ருத்ராட்சம் ‘பைரவ’ என்று சொல்லப்படும். துர்க்கா தேவியின் அம்சமாக உள்ள இவற்றை அணிபவர், சகல பாவங்களும் நீங்கி, இந்திரனுக்கு நிகராக வணங்கப்படுவார். மேலும் இவை பைரவியின் ஸ்வரூபமாகவும், நவசக்திகளின் அம்சமாகவும் ‘கபில ருத்ராட்சம்’ என்ற நிலையில் அணிபவர்களுக்கு சக்தியும், மதிப்பும் உண்டாக்கும்.

10. பத்துமுக ருத்ராட்சம் ‘தசமுக’ என்று அறியப்பெறும். மகாவிஷ்ணுவின் அம்சமாக உள்ள இவற்றை அணிந்தவரையும், அவரது சந்ததியினரையும் காக்கும் தன்மை பெற்றதாகும். சிவபுராணமானது இவ்வகை மணிகளை ‘சாட்சாத் விஷ்ணு ஸ்வரூபம்’ என்றே வர்ணிக்கிறது. சகல விதமான எதிர்மறை சக்திகளிடம் இருந்தும் காப்பாற்றி, மன அமைதியை தரக்கூடியது.

11. பதினோரு முக ருத்ராட்சம் ஆஞ்சநேய அம்சமாக இருப்பதாகும். இது அஸ்வமேத யாகம் செய்த பலனையும், ஆயிரம் பசுக்களை தானம் செய்த பலனையும் தர வல்லதாக கூறப்படுகிறது. மறுபிறவி இல்லாத நிலையை தரக்கூடிய பதினோரு முக ருத்ராட்சமானது, ஏகாதச ருத்திரர்களின் அம்சமாக விளங்குவதாகும். இந்த மணிகளை தலைப்பகுதியில் அணிந்து கொள்வது சிறந்தது. சகல ஐஸ்வர்யங்களையும் தருவதோடு, மோட்சத்தையும் தரக்கூடியது.

12. பன்னிரண்டு முக ருத்ராட்சத்தை கழுத்தில் அணியலாம். சூரியனின் அம்சமாக உள்ள இவ்வகை மணிகள் இயற்கை சீற்றங்களில் இருந்து பாதுகாப்பு தரக்கூடியது. வறுமை விலகுவதோடு மற்ற உயிர்களை கொன்ற பாவங்கள் விலகும். துவாதச ஆதித்யர்களுக்கு மகிழ்ச்சியை தரக்கூடியதான இவ்வகை ருத்ராட்சம் இருக்கும் இடத்தில் ஞானமும், செல்வமும் பெருகுவதாக ஐதீகம்.

13. பதிமூன்று முக ருத்ராட்சம் ‘ருத்ர’ எனப்படும். இது அணிபவரது விருப்பங்களை நிறைவேற்றுவதோடு, பொருளாதார வளத்தையும் தரக்கூடியது. ஈடுபடும் அனைத்து காரியங்களிலும் வெற்றியை அடையலாம். பதிமூன்று முக ருத்ராட்ச மணியானது சகல ஆசைகளையும் பூர்த்தி செய்து வைப்பதோடு, விஸ்வ தேவர்களுக்கும் பிரியமானதாக கருதப்படுகிறது.

14. பதினான்கு முக ருத்ராட்சம் ‘தேவ மணி’ என்று சொல்லப்படுவதோடு, சிவபெருமானை குறிப்பிடக்கூடியது. தேவர்களால் வணங்கப்படும் நிலையை தருவதோடு, தீய சக்திகளில் இருந்தும் அணிபவரை காக்கக்கூடியது. நவக்கிரகங்களில் சனி பகவானின் தாக்கத்தை குறைக்கும் தன்மை பெற்றது. ‘காந்த ஸ்வரூபம்’ என்று சொல்லப்படும் பதினான்கு முக ருத்ராட்ச மணியை அணிந்தவர்கள், தேவர்களும் வணங்கும் பெருமை பெற்றவர்களாக இருப்பார்கள்.

15. பதினைந்து முகம் கொண்ட ருத்ராட்சமானது சகல பாவங் களையும் நீக்குவதோடு, இந்திரன், பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய இறை சக்திகளின் துணையோடு பூவுலக இன்பங்களையும் அளிப்பதாகும்.

16. பதினாறு முக ருத்ராட்சம் ‘சிவ சாயுஜ்ய’ (சிவ லோக பதவி) பதவியையே தருவதாக சொல்லப்படுகிறது. பதினான்கு, பதினைந்து, பதினாறு முகங்கள் கொண்ட ருத்ராட்ச மணிகள் கிடைப்பது கடினமானது. எவ்வகை ருத்ராட்சமாக இருந்தாலும் அளவில் பெரியதாக இருப்பதுதான் சிறந்தது.

அடுத்தவாரம் :- இறைவனை துதிக்க உதவும் ஜெபமாலைகள்.

ருத்ராட்சம் அணியும் முறை

ருத்ராட்சத்தை பெரியவர்களின் துணையுடன் வாங்கிய பிறகு, சுத்தமான தண்ணீரில் அல்லது எலுமிச்சைப் பழச்சாறு கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். பிறகு சுத்தமான விபூதியில் ஒரு நாள் முழுவதும் போட்டு வைத்து, அடுத்த நாள் சிவாலயத்தில் உள்ள ஈஸ்வரனது பாதங்களில் வைத்து எடுத்து, குரு அல்லது பெரியோர்களின் கரங்களால் அணிந்து கொள்வது முறை. ருத்ராட்ச மணிகள் ‘புருஷ அம்சம்’ கொண்டதாக இருப்பதால் ஆண்கள் மட்டுமே அணியலாம் என்று ஒரு கருத்து உண்டு. ‘ஜாபால உபநிஷதமானது’ - பொதுவான ‘ருத்ராட்ச தாரண விதி’ என்றுதான் குறிப்பிடுகிறது. அதனால் சிவ வழிபாடு செய்யும் அனைவரும் அணியலாம் என்று எடுத்துக் கொள்ளலாம்.