மன அமைதி தரும் மீனாட்சி அம்மன்


மன அமைதி தரும் மீனாட்சி அம்மன்
x
தினத்தந்தி 8 Nov 2017 12:09 PM GMT (Updated: 8 Nov 2017 12:09 PM GMT)

தென் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்ட எல்லையான விளாத்திகுளம் நகரில் குளத்தங்கரை அருகில் அமைந்துள்ளது மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில்.

தென் தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்ட எல்லையான விளாத்திகுளம் நகரில் குளத்தங்கரை அருகில் அமைந்துள்ளது மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில். மிகவும் தொன்மை வாய்ந்த புராண சிறப்பு கொண்ட இந்த திருக்கோவிலில் அருள்பாலிக்கும் இறைவனின் பெயர் சொக்கலிங்க சுவாமி என்பதாகும். அம்பாளின் திருநாமம் மீனாட்சி அம்பாள். ஆலய தீர்த்தம் சிவகங்கை தீர்த்தம், தல விருட்சம் வில்வ மரம்.

மீனைப்போலவே கண் இமை கொட்டாமல் உலகனைத்தையும் தனது கடாட்சத்தினால் காப்பாற்றி வருபவள் மீனாட்சி அன்னை. உலகனைத்துக்கும் அம்மையும், அப்பனுமாக உள்ளவர் ‘மீனாட்சி சுந்தரேசுவரர்’. இவ்விரு சிறப்புகளையும் ஒருங்கே பெற்று மீனாட்சி அம்மன் உடனுறை சந்தரேசுவரர் அமர்ந்து ஆட்சி செய்யும் திருத்தலம் விளாத்திகுளம் ஆகும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இக்கோவில் அமைந்து இருந்தாலும், விருதுநகர் மாவட்ட எல்லையையும், ராமநாதபுரம் மாவட்ட எல்லையையும் ஒட்டி ஆலயம் அமைந்துள்ளது. ஆதிகாலத்தில் திம்மராஜபுரம் என்ற பெயரில் அழைக்கப்பட்டது. விளாமரமும், அத்திமரமும் இணைந்து ஊருக்கு அருகில் உள்ள குளத்தின் கரையில் இருந்ததால் ‘விளா-அத்தி-குளம்’ என்பது மருவி, ‘விளாத்திகுளம்’ என பெயர் பெற்றது.

இவ்வூரில் தேர்ந்த அந்தணர் ஒருவர் இருந்தார். அவர் வாரந்தோறும் கால்நடையாகவே மதுரை சென்று மீனாட்சி அம்மனையும், சொக்கநாத சுவாமியையும் தரிசித்து திரும்புவதை வழக்கமாக கொண்டு இருந்தார். நாளடைவில் ஏற்பட்ட தள்ளாத முதுமை காரணமாக அவரால் மதுரைக்குச் செல்ல இயலவில்லை. இருப்பினும், அன்னை மீது கொண்டு இருந்த தாளா பக்தியினால், அன்னையை காண முடியாத ஏக்கத்தில், அவரது இறையருளை பெற வேண்டி நடந்து செல்ல முடியாவிட்டாலும் தவழ்ந்து, தவழ்ந்தாவது மதுரைக்கு செல்வது என்று எத்தனித்தார்.

பக்தனின் முடிவை அறிந்து மனமிரங்கிய அன்னை மீனாட்சி, ‘திம்மராஜபுரத்தில் விளாமரமும், அத்திமரமும் சேர்ந்த குளக்கரை அருகே தமக்கும், தனது இறைவனாருக்கும் ஆலயம் அமைக்க வேண்டியும், அந்த இடத்தில் அமர்ந்து தான் அருள்பாலிப்பதாகவும், அங்கே தன்னை காண வரலாம்’ என்றும் ஆணையிட்டார். அதன்படி சுமார் 600 ஆண்டுகளுக்கு முன்பாக அந்த வயோதிக அந்தணரால் கட்டப்பட்டதே இந்தத் திருக்கோவில்.

இக்கோவில் கட்டி முடித்து திருக்குட நன்னீராட்டு பெருவிழா (கும்பாபிஷேகம்) நடந்த தினத்தன்று அன்னை மீனாட்சியும், சுவாமி சொக்கநாதரும் வயோதிக அந்தணர் வேடத்தில் வந்து நிட்சேப நதியில் மூழ்கி, கருவறையில் நுழைந்து ஒளிப்பிழம்பாகி மறைந்தனர் என்று ஒரு செவி வழிச் செய்தி கூறப்படுகிறது.

இந்தத் திருக்கோவிலின் முன் மண்டபம், கொடி மரம் மற்றும் மகாமண்டபம் முதலியன பாண்டிய மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்டவை ஆகும். அதற்கு அடையாளமாக மீன் சின்னம் காணப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மதுரையில் நடைபெறும் விழாவை போன்றே சித்திரை திருவிழா, கந்த சஷ்டி, நவராத்திரி, திருவாதிரை, விசாகம், மகாசிவராத்திரி திருவிழா ஆகியவை இக்கோவிலிலும் நடைபெற்று வருகிறது. மாதந்தோறும் பிரதோஷம், சங்கடஹர சதுர்த்தி, அஷ்டமி, திருவிளக்கு பூஜை ஆகியவை நடக்கிறது.

இந்த ஆலயம் தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் திறந்திருக்கும்.

எட்டயபுரத்தில் இருந்து 18 கிலோமீட்டர் தொலைவிலும், அருப்புக்கோட்டையில் இருந்து 46 கிலோமீட்டர் தொலைவிலும், தூத்துக்குடியில் இருந்து 48 கிலோமீட்டர் தொலைவிலும் இக்கோவில் அமைந்துள்ளது. மதுரை- நெல்லை ரெயில் வழித்தடத்தில் கோவில்பட்டி ரெயில் நிலையத்தில் இருந்து 37 கிலோமீட்டர் தொலைவில் இந்த திருத்தலம் இருக்கிறது.

-நெல்லை வேலவன் 

Next Story