ஆன்மிகம்

‘‘நோயாளிகள் குணம் பெற பிரார்த்திப்போம்’’ + "||" + "Let's Pray for Patients"

‘‘நோயாளிகள் குணம் பெற பிரார்த்திப்போம்’’

‘‘நோயாளிகள் குணம் பெற  பிரார்த்திப்போம்’’
நோய் வி‌ஷயத்தில் பிரார்த்தனை என்பது இரண்டு விதமாக அமைந்துள்ளது. ஒன்று, நோயாளி தமது நோய் நீங்கிட தானே இறைவனிடம் பிரார்த்தனை புரிவது. இரண்டாவது, நோயாளிகளுக்காக, அவர்கள் குணமடைய மற்றவர்கள் பிரார்த்திப்பது.
பி இப்ராகீம் (அலை) அவர்கள் நோயுற்றபோது, தமது இறைவனிடம் அவர்கள் நிவாரணம் வேண்டி முறையிட்டதை இறைவன் பின்வருமாறு தெரிவிக்கின்றான்:

‘நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகின்றான்’. (திருக்குர்ஆன் 26:80)

மேலும், நபி அயூப் (அலை) அவர்கள் கடுமையாக நோயுற்றபோது, தமது நோய் நீங்கிட, குணம் கிடைத்திட தமது இறைவனிடம் பிரார்த்தித்து, அதன் வாயிலாக அவர் நலம் பெற்றதை இறைவன் பின்வருமாறு கூறுகின்றான்:

‘‘இன்னும், அயூப் (அலை) தம் இறைவனிடம் ‘நிச்சயமாக என்னை (நோயினாலான) துன்பம் தீண்டியுள்ளது; (இறைவனே!) நீயே கருணையாளர்களுக்கெல்லாம் மிகக் கருணையாளன்’ என்று பிரார்த்தித்த போது, நாம் அவருடைய பிரார்த் தனையை ஏற்றுக்கொண்டோம்; அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கிவிட்டோம்; அவரது குடும்பத்தாரையும், அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை’’.  (21:83,84)

ஒரு நோயாளி தமக்கு ஏற்பட்டுள்ள நோய் குறித்து இறைவனிடம் பிரார்த்திக்கும் போது, அவரின் நோயை இறைவன் கண்டிப்பாக குணமளிப்பான் என்பது மேற்கூறிய இறைவசனங்களிலிருந்து உண்மையாகிறது.

நோயாளிகளை நலம் விசாரிப்பது நபி வழியே

நோயாளிகளை நலம் விசாரிப்பது நபி வழியாகவும், இஸ்லாமிய அடிப்படை மரபு வழியாகவும் உள்ளது. நோயாளிகளை நோயாளிகளாக மட்டுமே பார்க்க வேண்டும். அவர் என்ன சாதி? அவர் என்ன மதம்? அவர் நிறம் என்ன? அவர் மொழி என்ன? அவர் ஏழையா? அவர் பணக்காரரா? அவர் சிறியவரா? அவர் பெரியவரா? என்றெல்லாம் பார்க்கக்கூடாது. இத்தகைய உயர்ந்த பண்பாட்டை உத்தம நபி (ஸல்) அவர்கள் உலகத்தாருக்கு கற்றுத்தருகிறார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘பசித்தவருக்கு உணவளியுங்கள்; நோயாளியை (சந்தித்து) உடல் நலம் விசாரியுங்கள்; (போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து) விடுவியுங்கள்’. (அறிவிப்பாளர் : அபூ மூஸா அல்அஷ்அரீ (ரலி), புகாரி)

‘யூதர்களின் அடிமையொருவர் நபி (ஸல்) அவர்களுக்கு ஊழியம் செய்து வந்தார். அவர் நோயுற்றுவிட்டார். அவரை நபி (ஸல்) அவர்கள் உடல்நலம் விசாரிக்கச் சென்றார்கள்’ (அறிவிப்பாளர் : அனஸ் (ரலி), புகாரி)

உடல்நலம் குன்றியவர் எவராயினும் அவரையும் உடல் நலம் விசாரிக்க வேண்டும் என்பது இஸ்லாத்தின் கோட்பாடு; நபி (ஸல்) அவர்களின் பண்பாடு.

நோயாளிகளுக்காக பிரார்த்திப்பதும் நபி வழியே

நோயாளிகளைக் கண்டு நலம் விசாரிப்பது மட்டும் போதாது. அவர்கள் நலம் பெற பிரார்த்திக்கவும் வேண்டும் என இஸ்லாம் வலியுறுத்துகிறது.

நபி (ஸல்) அவர்கள் ஒரு நோயாளியிடம் உடல் நலம் விசாரிக்கச் சென்றால் அந்த நோயாளியிடம், ‘கவலைப்பட வேண்டாம். இறைவன் நாடினால், (இது உங்கள் பாவத்தை நீக்கி உங்களைத்) தூய்மைப்படுத்தி விடும்’ என்று கூறுவார்கள்.

ஒரு நோயாளியிடம் எவ்வாறு நலம் விசாரிக்க வேண்டும்? என்பதில் நபி (ஸல்) அவர்கள் அகில உலகத்தாருக்கு அழகிய முன்மாதிரியாக இருக்கிறார்கள்.

ஒரு நோயாளியை சந்திக்கும்போது, நலம் விசாரிப்பு என்கிற அடிப்படையில் மணிக்கணக்கில் அவரிடம் பேசிக் கொண்டிருக்கக்கூடாது; அல்லது அறவே பேசாமலும் வந்துவிடக்கூடாது. இந்த இரண்டு விதமான செயல்பாடுகளும் நோயாளிக்கு தொந்தரவு தருவதாக ஆகிவிடும்.

‘‘ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) கூறினார்: நான் மக்காவில் கடுமையாக நோய் வாய்ப்பட்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் என்னை உடல் நலம் விசாரிக்க வந்தார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்கள் தம் கையை என் நெற்றியின் மீது வைத்துப் பிறகு, அதை என் வயிற்றின் மீதும், என் முகத்தின் மீதும் தடவினார்கள். பின்னர், ‘இறைவா! ஸஅதுக்குக் குணமளிப்பாயாக!’ என்று பிரார்த்தித்தார்கள்’’. (புகாரி)

நோயாளியை சந்திக்கும்போது, அவரைப் பார்த்து ‘‘கவலைப்பட வேண்டாம் இறைவன் நாடினால் இந்த நோயின் மூலம் உமது பாவங்களை மன்னித்து, உமக்கு குணமளிப்பான்’’ என்று ஆறுதல் கூறி, நமது கையால் நோயாளியின் முகத்தையும், வயிற்றையும் தடவிக் கொடுத்து, அவருக்காக, ‘‘இறைவா! நீ அவரின் நோயைப் போக்கி, அவருக்கு நிவாரணம் அளிப்பாயாக!’’ என்று பிரார்த்திக்க வேண்டும்.

‘‘காய்ச்சல் மற்றும் இதர நோய்களை திட்டாதீர்’’

காய்ச்சல் ஏற்படாத எந்த மனிதரையும் உலகில் காணமுடியாது. ஏன் இறைத் தூதர் முஹம்மது நபி (ஸல்) அவர்களுக்குக் கூட காய்ச்சல் ஏற்பட்டிருக்கிறது. அதுவும் சாதாரண காய்ச்சல் கிடையாது. இருவருக்கு ஏற்படும் காய்ச்சல் போன்று நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இதையும் நபி (ஸல்) அவர்கள் கடந்து தான் வந்திருக்கிறார்கள்.

இப்னுமஸ்ஊத் (ரலி) கூறுகிறார்:

நபி (ஸல்) அவர்கள் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது அவர்களிடம் நான் சென்றேன்.

‘இறைத்தூதர் அவர்களே, தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறீர்களே’ என்று விசாரித்தேன்.

‘ஆம்; உங்களில் இரண்டு மனிதர்கள் காய்ச்சலால் அடைகிற துன்பத்தை (ஒரே மனிதனாகிய) நான் அடைகிறேன்’ என்றார்கள்.

‘(இந்தத் துன்பத்தின் காரணமாகத்) தங்களுக்கு இரண்டு மடங்கு நற்பலன்கள் கிடைக்கும் என்பதாக இதற்குக் காரணமா?’ என்று நான் கேட்டேன்.

இதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘ஆம்’ என்று கூறிவிட்டு, ‘ஒரு இறைவிசுவாசியைத் தைக்கும் ஒரு முள்ளாயினும், அதற்கு மேலான துன்பம் எதுவாயினும் அதற்கு பதிலாக, மரம் தன் இலைகளை உதிர்த்து விடுவதைப் போன்று அவரின் பாவங்களை இறைவன் (உதிரச்செய்து) மன்னிக்காமல் விடுவதில்லை’ என்று கூறினார்கள். (நூல் : புகாரி)

பாவங்களை மன்னித்து, பாவ அழுக்குகளிலிருந்து மனிதனை தூய்மைப்படுத்த சிலருக்கு வியாதிகளை கொடுத்து இறைவன் சோதிக்கின்றான். எனவே நாம் பாவங்களில் இருந்தும், பாவச்செயல்களில் இருந்தும் நம்மை பாதுகாத்துக்கொண்டால் இந்த சோதனையில் இருந்து தப்பிக்கலாம். மேலும் இந்தச்சோதனையில் சிக்கியவர்கள், அதில் இருந்து மீண்டு நலம் பெற பிரார்த்தனை செய்வதும் நம் அனைவரின் கடமையாகும்.

மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுன்.

அதிகம் வாசிக்கப்பட்டவை