ஆன்மிகம்

வெட்கத்திற்கு பதிலாக... + "||" + Instead of shy ...

வெட்கத்திற்கு பதிலாக...

வெட்கத்திற்கு பதிலாக...
அன்பான தேவபிள்ளைகளே! ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள்! ‘‘அவர்கள் வெட்கம் அனுபவித்த சகல தேசங்களிலும் அவர்களுக்குப் புகழ்ச்சியும் கீர்த்தியும் உண்டாகச் செய்வேன்’’. செப்பனியா.3:19
பிரியமானவர்களே! பலவிதமான போராட்டங்களினாலும், குடும்ப சூழ்நிலைகளினாலும், கடன் பாரத்தினாலும் நீங்கள் வேதனைப்பட்டு, வெட்கப்பட்டு கலங்கிக் காணப்படுகிறீர்களா? உங்களை இந்த நாளில் உயர்த்த நம் ஆண்டவர் வல்லவராயிருக்கிறார்.


நம் தேவன் ஒருவரை உயர்த்தி ஒருவரை வெட்கப்படுத்துகிறவரல்ல. உங்கள் வாழ்வில் நன்மையையும், கிருபையையும் தொடரச்செய்து உங்களை உயர்த்தி ஆசீர்வதிப்பார்.

யோசேப்பின் வாழ்வில்...

யோசேப்பு தேவ மனிதன்தான். ஆனாலும், அவன் வாழ்வில் எவ்வளவோ வேதனை, அவமானம். சகோதரர்களால் விற்கப்பட்ட போது எவ்வளவு வேதனை, செய்யாத தவறுக்கு தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டபோது எவ்வளவு வெட்கம், நிந்தை, அவமானம்.

ஆனால் யோசேப்பு கர்த்தரை விட்டுவிடவில்லை. ஆண்டவரும் அவனோடு கூடஇருந்தார். ஏற்ற நேரம் வந்தபோது சிறைச்சாலையில் இருந்து சிங்காசனத்துக்கு உயர்த்தினார்.

யோசேப்பு வெட்கப்பட்ட அதே இடத்தில், அதே சகோதரர்கள் முன்பாக உயர்த்தப்பட்டான். ‘‘நான் சிறுமைப்பட்டிருந்த தேசத்தில் தேவன் என்னைப் பலுகப்பண்ணினார் என்று சொல்லி, இளையவனுக்கு எப்பிராயீம் என்று பேரிட்டான்.’’ ஆதியாகமம் 41:52

பிரியமானவர்களே! நீங்கள் சோர்ந்து போகாமல் கர்த்தருடைய பிள்ளையாக, பரிசுத்தமாக வாழும் போது நிச்சயம் உங்களையும் தேவன் உயர்த்துவார்.

அன்னாள் வாழ்வில்...

அன்னாளுக்குப் பிள்ளையில்லாததனால் அவள் சக்களத்தி அவளை ஒவ்வொரு நாளும் துக்கப்படும்படியாக மிகவும் மனமடிவாக்குவாள். அன்னாள் கண்ணீர்விட்டு வேதனையோடு வாழ்ந்து கொண்டிருந்தாள். ஒருபக்கம் பிள்ளையில்லையே என்ற வேதனை, மறுபக்கம் மனு‌ஷர் களின் அற்பமான நிந்தையான பேச்சு. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ‘என் நிந்தனையை மாற்ற ஆண்டவர் ஒருவரால்தான் முடியும்’ என்று அவரிடத்தில் ஜெபம் பண்ணியபோது, ஆண்டவர் அவளை ஆசீர்வதித்து ஒரு கர்ப்பத்தின் கனியைத் தந்து அவள் குடும்பத்தின் நடுவில் உயர்த்தினார். அவள் பிள்ளை சாமு  வேலைப்போல ஒரு தீர்க்கதரிசி அப்புறம் எழும்பவில்லை என்கிற அளவுக்கு அவளை உயர்த்தினார்.

‘‘என் இருதயம் கர்த்தருக்குள் களிகூரு   கிறது, என் கொம்பு கர்த்தருக்குள் உயர்ந்திருக்கிறது.’’ 1.சாமுவேல் 2:1

இன்றும் உங்கள் வாழ்வில் ஆசீர்வாதம் இல்லாதபடியினால், குறைவுகள் இருப்பதால் மனிதர்கள் உங்களை நிந்திக்கலாம், உங்களை அவமானமாய்ப் பார்க்கலாம். தேவனுடைய பாதத்தைப் பிடித்துக் கொள்ளுங்கள், ஜெபியுங்கள். தேவன் உங்களை அவர்களுக்கு முன்பாகவே உயர்த்தி உங்களை ஆசீர்வதிப்பார். நீங்கள் வெட்கப்பட்டுப் போவதில்லை.

மரியாள் வாழ்வில்...

மரியாள் தேவ ஆவியால், தேவசித்தப்படி கர்ப்பம் தரித்தாள். அதையறிந்த யோசேப்பு மரியாளை ரகசியமாய் தள்ளிவிட யோசித்தான். பிரியமானவர்களே! ஒருவேளை யோசேப்பு மரியாளை திருமணம் செய்யாமலிருந்தால் என்ன நடந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். எவ்வளவு அவமானத்தால் மரியாள் தலை      குனிந்து வாழ்ந்திருப்பாள். எத்தனை பேர் அவளை நிந்தித்து அவமானப்படுத்தியிருப்பார்கள்.

ஆனால் ஆண்டவர் அப்படிவிடவில்லை. யோசேப்போடு தரிசனத்தில் காணப்பட்டு, தேவ திட்டத்தை அவனுக்கு வெளிப்படுத்தி மரியாளை சேர்த்துக் கொள்ளச் சொன்னார். அதனால் மரியாள் வாழ்வில் ஒரு பெரிய நிம்மதி, சமாதானம், உயர்வு உண்டானது.

‘‘உனக்கு விரோதமாய் உருவாக்கப்படும் எந்த ஆயுதமும் வாய்க்காதேபோம்.’’ஏசாயா 54:17.

ஒருவேளை உங்களுக்கே தெரியாமல் உங்களை வெட்கப்படுத்த சாத்தான் திட்டமிட்டுக் கொண்டிருக்கலாம். ஆனால் சாத்தானின் திட்டங்களை உடைத்து, கர்த்தர் உங்களுக்காக கிரியை செய்து உங்களை உயர்த்துவார். எனவே சோர்ந்து போகாதீர்கள். கர்த்தரைப் பற்றிக் கொள்ளுங்கள். தேவ திட்டத்தின்படி தேவ சித்தத்தின்படி வாழ உங்களை அர்ப்பணியுங்கள். ஆண்டவர் உங்களை ஆசீர்வதிப்பாராக!

சகோதரி கிறிஸ்டினா ராபின்சன், சென்னை.