நற்செய்தி சிந்தனை : அந்த எழுபத்திரண்டு பேர்


நற்செய்தி சிந்தனை : அந்த எழுபத்திரண்டு பேர்
x
தினத்தந்தி 14 Nov 2017 8:03 AM GMT (Updated: 14 Nov 2017 8:03 AM GMT)

இருபெரும் பிரிவுகளாகப் பிரித்துச் சிந்திக்க வேண்டிய புனித லூக்காவின், திருவசனங்களாகிய நற்செய்திகளை இணைத்து இவ்வாரம் ஆராய்வோம்.

யேசு பிரான் காலத்தில், எழுபத்திரண்டு பேர்களை நியமனம் செய்து, தாம் போகவிருந்த எல்லா ஊர்களுக்கும், தமக்கு முன்பே, இருவர் இருவராக அனுப்பினார். அச்சமயத்தில், அவர் அவர்களை நோக்கி, இவ்வாறு கூறினார்:

“அறுவடை மிகுதி; வேலையாட்களோ குறைவு. ஆகையால், தம் அறு வடைக்குத் தேவையான வேலையாட்களை அனுப்பும்படி, அறுவடையாளரின் உரிமையாளரிடம் மன்றாடிக் கேட்டுக் கொள்ளுங்கள். புறப்பட்டுப் போங்கள். ஓநாய்கள் இடையே, ஆட்டுக்குட்டிகளை அனுப்புவதுபோல, உங்களை நான் அனுப்புகிறேன். பணப்பையோ, வேறு பையோ, மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம். வழியில் செல்கின்றபொழுது, எவருக்கும் வணக்கம் சொல்ல வேண்டாம்.

நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக! என்று முதலில் கூறுங்கள். அமைதியை விரும்பக் கூடியவர்கள், அங்கு இருப்பார்களேயானால், நீங்கள் வாழ்த்தாகக் கூறிய அமைதி, அவர்களிடம் தங்கும். இல்லாவிடில், அது உங்களிடமே திரும்பி வந்து விடும். அவர்களிடம் இருப்பதை நீங்கள் உண்ணுங்கள். அந்த வீட்டிலேயே தங்குங்கள்.

வீடு வீடாகச் செல்ல வேண்டாம். நீங்கள் செல்கின்ற ஊரில், உங்களை ஏற்றுக் கொண்டால், உங்களுக்கு எதைப் பரிமாறுகிறார்களோ அதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குறைந்து இருப்போரை குணமாக்குங்கள். இறையாட்சி, அவர்களை நெருங்கி வந்து விட்டது என்று சொல்லுங்கள்.

நீங்கள் செல்லும் ஊரில், உங்களை எவரும் ஏற்றுக் கொள்ளாவிடில், வீதிகளில் சென்று, ‘எங்கள் கால்களில் ஒட்டியுள்ள, உங்கள் ஊர்த் தூசியையும், உங்களுக்கு எதிராக உதறி விடுகிறோம். ஆயினும் இறையாட்சி நெருங்கி வந்து விட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்’ என்று கூறுங்கள்.

அந்த நாளில், அவ்வூரானது பெறும் தண்டனையானது, ‘சோதோம்குமாரம்’ என்ற நகரினர் பெறும் தண்டனையை விடக் கடினமாகவே இருக்கும் என உங்களுக்குச் சொல்கிறேன்” என்று கூறினார்.

இருபெரும் பிரிவுகளில், முதலில் இந்நற்செய்தியை ஆராய முற்படுவோம்.

இயேசு பெருமான் இவ்வுலகில் வாழ்ந்தபோது, எழுபத்திரண்டு பேர்களை நியமித்து இறைப்பணிக்காக அனுப்பினார் என்ற செய்தி, புனித லூக்காவின் நற்செய்தியில் காணப்படுகிறது.

இயேசு பெருமகனார் இவ்வுலகில் வாழ்ந்த குறைந்த காலத்தில், தம் பணியை எடுத்துரைக்க எழுபத்திரண்டு பேர்களைத் தெரிந்தெடுத்திருக்கிறார் என்பதை அறிகிறோம்.

ஏற்றுக் கொள்பவர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் அவர்களுக்கு விவரிக்கிறார்.

‘ஓநாய்களிடையே ஆட்டுக் குட்டிகளை அனுப்புவதைப் போல’ என்ற வார்த்தையைக் கூறுகிறார். கடினமான பணியாக, இப்பணி இருக்கிறது. ஆட்டுக் குட்டிகளை ஓநாய் எப்படிப் பார்க்கும் என்பதை நாமும் உணர வேண்டும். எல்லாவற்றையும் விட, மிக அருமையாக ஒன்றைச் சொல்கிறார்.

‘அறுவடை மிகுதி; வேலையாட்களோ குறைவு’ என்கிறார். ஆம். இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பின்பும் இதே நிலைதான் நீடிக்கிறது.

அடுத்து வரும் நற்செய்தியின் கருத்துகளை, தொடர் வாசகமாக உற்றுக் கவனிப்போம்.

அக்காலத்தில், அனுப்பப்பட்ட எழுபத்திரண்டு பேரும் மகிழ்ச்சியுடன் திரும்பி வந்தனர். அவர்கள் அனைவரும் இயேசு பிரானைப் பார்த்து, ‘ஆண்டவரே! உம்முடைய பெயரை சொன்னால், பேய்கள்கூட எங்களுக்கு அடிபணிகின்றன’ என்று கூறினர்.

அதற்கு அவர், ‘வானத்தில் இருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன். பாம்புகளையும், தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும், உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவும் தீங்கை விளைவிக்காது. அதற்காக, தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பதைப் பற்றி, மகிழ்ச்சி அடைய வேண்டாம். அதற்கு மாறாக, உங்கள் பெயர்கள், விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பதைப் பற்றி மட்டும் மகிழ்ச்சி அடையுங்கள்’ என்றார்.

மேலும் இயேசு பிரான், ‘என் தந்தை, எல்லாவற்றையும் என்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார். தந்தையைத் தவிர, வேறு எவரும் மகனை அறியார். தந்தையானவர் யாரென்று, மகனுக்குத் தெரியும். மகன், யாருக்கு வெளிப்படுத்த விரும்புகிறாரோ, அவருக்கும் தெரியும். வேறு எவரும் தந்தையை அறிய மாட்டார்கள்’ என்று கூறினார்.

பிறகு அவர் தம் சீடர்களைத் தனியாக நோக்கினார். அவர்களிடம், ‘நீங்கள் காண்பவற்றைக் காணும் வாய்ப்பினைப் பெற்றவர்கள், பேறு பெற்றவர்கள். ஏனென்றால் இறைவாக்கினரில் பலரும், அரசர்களும், நீங்கள் காண்பவற்றைக் காண விரும்பினார்கள். ஆனால் அவர்கள் காணவில்லை. நீங்கள் கேட்பவற்றைக் கேட்க விரும்பினார்கள். ஆனால் அவர்கள் கேட்கவில்லை என்று, நான் உங்களுக்குச் சொல்கிறேன்’ என்றார்.

இந்த நற்செய்தியின் தொடர்ச்சியை மேலும் மேலும் ஆராய்ந்து பார்த்தால், எழுபத்திரண்டு பேர்களைத் திரட்டுவதும், அவர்களை நெறிப்படுத்துவதும், அவர்களுக்குத் துணிவையும், அறிவையும் ஊட்டுவதும், எவ்வளவு சிரமமானது என்பதைப் படிப்போர் ஊகிக்க முடிகிறதல்லவா?

இயேசு பிரான் இவ்வுலகில் மனிதனாகப் பிறந்தார். துன்ப துயரங்களை அனுபவித்தார். இம்மண்ணுலக மாந்தர்களுக்காகத் தம் உயிரையும் இழந்தார் என்பதுதான், கிறித்துவத்தின் அடிப்படைத் தத்துவமாகிறது.

இருபெரும் பிரிவுகளாகப் பிரித்து ஆராயப்பட்ட, இந்நற்செய்தியின் வாசகங்கள், படிப்போரைச் சிந்திக்கத் தூண்டுகின்றன.

எல்லாவற்றுக்கும் மேலாக இந்நற்செய்தியில் காணப்படும் ஒரு வாசகத்தை, மனதில் பதிய வைக்க வேண்டும். ஏனென்றால், இவ்வாசகம் பொருள் பொதிந்ததாக இருப்பதை நீங்கள் உணர்வீர்கள்.

இயேசு பிரான், தூய ஆவியால் பெரிய மகிழ்ச்சியை அடைந்து, கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

“தந்தையே! விண்ணுக்கும் மண்ணுக்கும் ஆண்டவரே! உம்மைப் போற்றுகிறேன். ஏனெனில், ஞானிகளுக்கும், அறிஞர்களுக்கும் இவற்றை மறைத்து, குழந்தைகளுக்கு வெளிபடுத்தினீர். ஆம், தந்தையே! இதுவே உமது திருவுளம்”

இவ்வாசகத்தில் இருந்து, ஒன்றை நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

‘குழந்தையைப் போல, நீங்கள் மாறாவிட்டால், விண்ணரசில் புக முடியாது’ என்ற அவருடைய கருத்தையும் நினைவில் கொள்வோம். ஞானிகள், அறிஞர்களை விட, அறியாக் குழந்தைகளே, மேலானவர்கள் என்பதையும் ஆராய்ந்து தெளிவோம். 

Next Story