நல்வாழ்வு தரும் நாகர் ஆலயங்கள்


நல்வாழ்வு தரும் நாகர் ஆலயங்கள்
x
தினத்தந்தி 14 Nov 2017 8:18 AM GMT (Updated: 14 Nov 2017 8:18 AM GMT)

ஆதி காலம் முதலே தமிழர்களிடம் நாகங்களை வழிபடும் பழக்கம் இருந்து வந்திருக்கிறது.

நாகங்களோடு தொடர்புடைய பல ஆலயங்கள், ஊர்கள் தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவிலும் பல இருக்கின்றன. தமிழகத்தில் நாகத்தீவு, நாகப்பட்டினம், நாகர்கோவில், திருநாகேஸ்வரம் உள்ளிட்ட ஊர்கள், நாகங்களின் பெயர்களை பரப்புரை செய்வதாக அமைந்துள்ளன. ஒரு சில இங்கே இரண்டு நாகர் ஆலயங்களைப் பற்றி பார்க்கலாம்.

ஒரு ஆலயம்.. 30 ஆயிரம் சிலைகள்..

கேரள மாநிலத்தில் அதிக அளவில் நாக வழிபாடு இருப்பதாக கூறப்படுகிறது. அங்கு பதினைந்தாயிரம் சர்ப்பக்காவுகள், அதாவது நாகக் கோவில்கள் இருந்திருக்கின்றன என்ற தகவல் அதை மெய்ப்பிக்கும் வகையில் இருக்கிறது. அதிலும் மன்னார்சாலை, வெட்டுக்காடு, பாம்பன்மேக்கோடு போன்ற இடங்கள் இந்திய அளவில் பிரபலமான நாகர் ஆலயங்கள் ஆகும்.

இதில் மன்னார்சாலை கேரள மாநிலத்தின் ஆலப்புழை மாவட்டத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள சர்ப்பக்காவு நாகராஜா ஆலயம், பக்தர்களிடையே நாடு முழுவதும் பெயர் பெற்ற தலமாகும். இந்த ஆலயத்தில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாக தேவதைகளின் சிலைகளை, பாதையின் இருபுறமும் மற்றும் மரத்தடிகளிலும் காணலாம். இந்தக் கோவில் அதிக சிலைகள் கொண்ட கோவில்கள் வரிசையில் இடம் பிடித்துள்ளது.

கேரளத்தில் ஆலப்புழை மாவட்டத்தில் உள்ள ஹரிப்பாடு பேருந்து நிலையத்தில் இருந்து, சுமார் 3 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது இந்தக் கோவில். கொச்சின் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமார் 115 கிலோமீட்டர் தூரத்திலும், திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சுமார் 125 கிலோ மீட்டர் தூரத்திலும் இந்த ஆலயம் இருக்கிறது.

8 ஆயிரம் ஆண்டு பழைய சிலை

சக்தி தேவியின் அவயங்கள் விழுந்த இடங்களில் எல்லாம் சக்தி பீடங்கள் உருவானதாக புராணங்கள் நமக்குச் சொல்கின்றன. அந்த வகையில் சக்திதேவியின் இடுப்பெலும்பு விழுந்ததாக குறிப்பிடப்படும் இடம், இலங்கையின் யாழ்ப்பாணம். அங்கு அமைந்துள்ள நாகபூசனி அம்மன் கோவில் பிரசித்தி பெற்று திகழ்கிறது.

இந்த ஆலயத்தில் உள்ள சுமார் 8 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த ஐந்து தலை நாகர் சிலை சக்தி வாய்ந்ததாக நம்பப்படுகிறது. நாகபூசனி அம்மன் கோவில் பழமையானதாக இருந்தாலும், தற்போது புணரமைக்கப்பட்டு பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் அதிகம் வருகை தரும் இடமாக மாற்றப்பட்டிருக்கிறது. பொதுவாக அனைத்து தோஷங்களையும் நீக்கும் நாகபூசனி அம்மன், நாகதோஷங்களை நீக்குவதில் பிரசித்திப் பெற்றவள் என்கிறார்கள், இங்கு தவறாது வந்து வழிபட்டுச் செல்லும் பக்தர்கள்.

திருமணம் ஆகாதவர்கள், திருமணம் தள்ளிப்போகிறவர்கள், கடன் பிரச்சினை இருப்பவர்கள் என அனைவரும் வந்து வழிபடும் தலமாக உள்ளது இந்தக் கோவில்.

Next Story