ஆன்மிகம்

இறைவனை துதிக்க உதவும் ஜெப மாலைகள் + "||" + Praise the Lord Prayer garlands

இறைவனை துதிக்க உதவும் ஜெப மாலைகள்

இறைவனை துதிக்க உதவும் ஜெப மாலைகள்
ஜெபமாலை பிறரது கண்களில் படுவது போல ஜெபம் செய்வதை தவிர்க்கவும்,ஜெபத்தை தனியிடங்களில் செய்வதையும் சாஸ்திரங்கள் வலியுறுத்தியுள்ளன.
ஜெப மாலைகளைப் பயன்படுத்தி மந்திர ஜெபம் செய்வது, உலக அளவில் பரவலாக உள்ள வழக்கமாகும். குறிப்பிட்ட ஒரு காரியம் நிறைவேற அல்லது மற்ற பிரார்த்தனைகளின் அடிப்படையில் மானசீகமாக அல்லது மெதுவான உச்சாரணம் மூலம் குறிப்பிட்ட தெய்வத்திற்கான மந்திரம் அல்லது சுலோகத்தை தியானிப்பது ஜெபம்’ ஆகும். ஜெபத்தின் போது, தெய்வம் மலர்ந்த கண்களுடனும், ஆசீர்வதிக்கும் கைகளுடனும் அருள் புரிவதாக மனதில் பாவனை செய்ய வேண்டும் என்பது ஆன்மிக மனோதத்துவமாகும்.

எண்ணிக்கை

பொதுவாக ஜெப மாலை 108, 54 அல்லது 27 மணிகளால் அமைக்கப்படுகிறது. அவற்றில், புத்திரஜீவமணி மாலை, சங்கு மணி மாலை, பவள மணி மாலை, வைஜந்தி மாலை, ஸ்படிக மாலை, ருத்ராட்ச மாலை, தாமரைமணி மாலை, முத்துமணி மாலை, நவரத்தின மற்றும் உபரத்தின மாலை, சந்தன மாலை, துளசிமணி மாலை, பொன் மணி மாலை, தர்ப்பை பவித்திர முடிச்சு மாலை என்று பல வகைகள் உள்ளன.

ஜெபமாலை பிறரது கண்களில் படுவது போல ஜெபம் செய்வதை தவிர்க்கவும்,ஜெபத்தை தனியிடங்களில் செய்வதையும் சாஸ்திரங்கள் வலியுறுத்தியுள்ளன. கோவில், மலைப்பகுதி, கோசாலை, மரங்கள் சூழ்ந்த வனம், ஆற்றங்கரை மற்றும் கடற்கரை ஆகிய இடங்கள் அதற்கு உகந்ததாக சொல்லப்பட்டுள்ளது.

ஜெப மாலையின் மணிகள் 27, 54 மற்றும் 108 என்ற எண்ணிக்கையில் கோர்த்து வைக்கப்பட்டிருக்கும். அவற்றில் தனித்து உயர்ந்திருக்கும் ஒரு மணியானது ‘மேரு’ என்று சொல்லப்படும். அமானுஷ்யமான சக்திகளை அடைய விரும்புபவர்கள், மனித அல்லது விலங்குகளின் எலும்புகளால் தயாரிக்கப்பட்ட ஜெப மாலைகளை உபயோகிப்பதாகவும் தகவல்கள் உள்ளன.

வழக்கமான மாலைகளான ருத்ராட்சம், துளசி உள்ளிட்டவை தவிர ஆன்மிக ரீதியில் பயன்படுத்தும் வெவ்வேறு ஜெப மாலை வகைகள் பற்றி இங்கே காணலாம்.

பஞ்சபூத மாலை

இவ்வகை மாலைகள் பரவலான உபயோகத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சிவப்பு சந்தனம், தாமரை மணி, ருத்ராட்சம், ஸ்படிகம் மற்றும் துளசி ஆகிய மணிகளின் தொகுப்பாக உள்ள பஞ்சபூத மாலை, பஞ்சபூதங்களின் துணையைப் பெற உதவி செய்கிறது. மேலும் எதிர்மறை சக்திகளை விலக்க பயன்படுவதாகவும் நம்பப்படுகிறது. பொதுவாக, ஹோமம், யக்ஞம், பூஜை, கோவில் திருவிழா மற்றும் தெய்வ தரிசனம் போன்றவற்றில் ஈடுபடும் ஒரு சில ஆன்மிக சாதகர்கள், இவ்வகை மாலையை அணிவது வழக்கம்.

மன உறுதியையும், ஆன்மிக சக்தியையும் வழங்கும் சிவப்பு சந்தனம், மன ஒருமையோடு உடலுக்கு குளிர்ச்சித் தந்து, மன இறுக்கத்தை விலக்கி உள்ளுணர்வை மேம்படுத்தும் ஸ்படிகம், மகாலட்சுமியின் அருளை அள்ளித்தரும் தாமரை மணி, ரத்த அழுத்தம் மற்றும் அகால மரணம் ஆகியவற்றை தவிர்க்க உதவும் பஞ்சமுக ருத்ராட்சம், உடலின் வெப்பத்தை சரியாக பராமரிப்பதோடு, மகாவிஷ்ணுவின் அருளையும் அள்ளித்தரும் துளசி ஆகிய மணிகளின் கலவையாக பஞ்சபூத மாலை அமைந்திருக்கிறது. எனவே இது ஆன்மிக முன்னேற்றத்துக்கு பயன்படுவதாக ஆன்மிக சாதகர்கள் பலரும் தெரிவித்துள்ளனர்.

தாமரைமணி மாலை

பொருளாதார முன்னேற்றத்தைத் தரவல்ல பிரபஞ்ச ரகசியங்களில் ஒன்றாக தாமரை மணியை நமது முன்னோர்கள் பயன்படுத்தி வந்துள்ளார்கள். பணத்தை ஈர்க்கும் பல வகை பொருட்களில் தாமரை மணிக்கு முதலிடம் என்பதாகவும் நம்பிக்கை இருக்கிறது. மகாலட்சுமியின் அம்சமாக கருதப்படும் தாமரைப் பூவிலிருந்து கிடைக்கும் மணியாக இருப்பதால், லட்சுமி கடாட்சம் பெற்றது என்ற கருத்தும் உண்டு.

நல்ல எண்ணங்கள் உருவாகவும், அவற்றை செயல்முறைப்படுத்தும் சக்தியை அளிக்கும் சக்தி பெற்றதாகவும் தாமரை மணி கருதப்படுகிறது. இனம், மொழி, மதம் என்ற வித்தியாசங்கள் இல்லாமல் இந்த மாலை உபயோகத்தில் உள்ளது. குறிப்பாக, பழங்காலம் முதல் தாமரைமணியை ஜெப மாலையாக பயன்படுத்தி வந்திருக்கிறார்கள் என்பது கவனிக்கத்தக்கது.

பவள மாலை

பவளம்.. செவ்வாய்க்குரிய ரத்தினம் என்ற நிலையில், ஜாதக ரீதியாக செவ்வாயின் பாதிப்புகளை தடுக்கும் விதத்தில் ஜெப மாலையாக பயன்படுகிறது. பொதுவாக இவ்வகை மாலைகள் 54 என்ற எண்ணிக்கையில் பயன்படுத்தப்படுகிறது. மேலும், கணபதி, முருகன், துர்க்கை மற்றும் அனுமன் ஆகிய தெய்வங்களின் மீதான ஜெபம் அல்லது பூஜை ஆகியவற்றில் இவ்வகை மாலைகள் பெரிதும் பயன்படுகின்றன. மருத்துவ ரீதியாக ரத்த சோகை உள்ளவர்கள், பவள மாலையை அணிந்து நிவாரணம் பெறலாம் என்றும் சொல்லப்படுகிறது.

புத்திர ஜீவ மாலை

தமிழில் இருக்கொல்லி, கறிப்பாலை என்றும், சமஸ்கிருதத்தில் புத்திரஜீவ என்றும், ஆங்கிலத்தில் ‘லக்கி பீன்ஸ்’ என்றும் இவ்வகை மரம் குறிப்பிடப்படுகிறது. அதன் பழங்களில் இருந்து பெறப்படும் விதைகள், 108 எண்ணிக்கை கொண்ட மாலையாக கோர்க்கப்பட்டு ஜெபம் செய்ய பயன் படுத்தப்படுகிறது. புத்திரஜீவ என்ற பெயருக்கு ஏற்றாற்போல் குழந்தை பாக்கியம் கிடைக்கச் செய்யும் சக்தி படைத்ததாக இது இருக்கிறது. சூரியன் மற்றும் குரு ஆகிய கிரகங்களின் மந்திரம் அல்லது சந்தான கோபால கிருஷ்ண மந்திரம் ஆகியவற்றை இந்த மாலையைக்கொண்டு ெஜபமாக செய்தால், புத்திர பாக்கியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை நிலவுகிறது.

சித்த வைத்தியத்தில் இந்த மரத்தின் இலைகளும், விதைகளும் பல்வேறு வைத்திய குணங்களை கொண்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக, பெண்களுக்கு ஏற்பட்ட குழந்தை பாக்கிய தடைகளை அகற்ற இந்த மரத்தின் விதைகள் பயன்படுத்தப்படுவதாகவும் குறிப்புகள் இருக்கின்றன.

வைஜந்தி மாலை

வைஜந்தி (வைஜெயந்தி அல்ல) என்ற செடி வகையில் இருந்து கிடைக்கும் வெள்ளை நிற விதைகளை கோர்த்து ெஜப மாலை உருவாக்கப்படுகிறது. கிருஷ்ணருடன் தொடர்புள்ள இடங்களான மதுரா, பிருந்தாவனம், கோகுலம் மற்றும் ஆக்ரா போன்ற இடங்களிலிருந்து கிடைக்கப்பெறும் வைஜந்தி மலர்களின் விதைகள் விசேஷமாக பயன்படுத்தப்படுகின்றன. வசீகர சக்தி மற்றும் இஷ்ட தேவதைகளின் தரிசனம் ஆகிய ஆன்மிக காரணங்களுக்காக இந்த மாலையை பயன்படுத்தி பலரும் நம்பிக்கையுடன் ஜெபம் செய்து வருகிறார்கள்.

குறிப்பாக, கிருஷ்ணரால் ராதைக்கும், ராமரால் சீதைக்கும் தரப்பட்டதால், பெயருக்கு ஏற்றாற்போல வெற்றிகளை தரும் மாலையாக வைஜந்தி மாலை சொல்லப்படுகிறது. மகாவிஷ்ணு மற்றும் ராஜராஜேஸ்வரி ஆகிய தெய்வங்கள் இம்மாலையை அணிந் திருப்பதாக பல இடங்களில் குறிப்புகள் இருக்கின்றன. ருத்ராட்சத்திற்கு அடுத்தபடியாக இயற்கையாகவே மத்தியில் துளைகள் கொண்டவை இந்தச் செடியின் விதைகள். கருப்பு நிறமுள்ள வைஜந்தி விதை மாலைகள் சனிக் கிரக பாதிப்புகளை தடுக்க உதவுவதாக சொல்லப்படுகிறது. எளிதாக உடையக்கூடிய தன்மை கொண்டவையாக இவை இருப்பதால், கவனமாக பயன்படுத்த வேண்டியது அவசியம்.

மஞ்சள் விதை மாலை

மஞ்சள் என்பது ஆயுர்வேதத்தில் சிறந்த கிருமி நாசினியாகவும், மருத்துவ குணமுள்ள பொருளாகவும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆன்மிக ரீதியாக மஞ்சள் கொண்டு உருவாக்கப்பட்ட ஜெப மாலைகள், தசமகா வித்யைகளில் ஒன்றான ‘பகளாமுகி சாதனா’ முறையில் பயன்படுத்தப்படுகின்றன. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், தகுந்த ஆயுர்வேத அல்லது சித்த மருத்துவ ஆலோசனைகளுக்கு பிறகு மஞ்சளால் தயாரிக்கப்பட்ட மாலையை அணிந்து கொள்ளும் முறையும் இருந்து வந்துள்ளது. மேலும் மன அமைதியை ஏற்படுத்துவதோடு, மனதின் அழுத்தத்தையும் குறைக்கும் சக்தி பெற்றவையாக மஞ்சளால் தயாரிக்கப்பட்ட மாலைகள் குறிப்பிடப்படுகின்றன.

குறிப்பாக, எதிரிகள் தொல்லை மற்றும் கடன்கள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், தங்களது வழிபாட்டு முறைகளின்போது மஞ்சள் மாலையை அணிந்து கொண்டால் வெற்றி கிட்டுவதாகவும் நம்பிக்கை இருக்கிறது. ஜாதக ரீதியாக குரு கிரகத்தின் நன்மைகளை பெறவும், போட்டிகள், வம்புவழக்குகள் போன்றவற்றில் வெற்றி பெற விரும்புபவர்கள், இந்த மாலையை அணிவது அவசியம் என்பதும் ஆன்மிக ரீதியான வழியாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

ஜெப மாலைகளில் விதவிதமாக நிறைய வகைகள் பயன்படுத்தப்படும் நிலையில், மேற்கண்ட மாலைகள் முற்றிலும் மாறுபட்டவை. அதிலும் புதுமையும், பயன்களும் கொண்டவை. இந்த மாலைகளை தக்க ஆலோசனைகளுக்கு பிறகு, பயன்படுத்துவது முக்கியம் என்பது கவனிக்கத்தக்கது.