ஆன்மிகம்

ஜென் கதை : கவலை தீர தோள் கொடுப்போம் + "||" + Zen's story:a worry Should be given the shoulder

ஜென் கதை : கவலை தீர தோள் கொடுப்போம்

ஜென் கதை : கவலை தீர தோள் கொடுப்போம்
அந்த நாட்டின் அரசன் மிகவும் சில நாட்களாக சோர்ந்து காணப்பட்டான். ஆனால் என்ன என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.
ந்த நாட்டின் அரசன் மிகவும் சில நாட்களாக சோர்ந்து காணப்பட்டான். ஆனால் என்ன என்று யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அவன் அரசன் என்பதால், அவனருகில் சென்று ‘உங்களுக்கு என்ன பிரச்சினை?’ என்று கேட்க எவருக்கும் தைரியம் இல்லை. அரசின் அரசவையில் இருந்த மந்திரிகளும் கூட அவனிடம் இது பற்றி கேட்பதில் தயக்கம் காட்டினர். ஆனால் மன்னனின் பிரச்சினையும், குழப்பமும் தீர வேண்டும் என்று அனைவரும் நினைத்தார்கள்.

மன்னனும் கூட தன்னுடைய மனக் குழப்பத்தை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தான். ஒரு நாள் மன்னனின் அரசவையில் உள்ள முதன்மை அமைச்சர் வந்து, ‘அரசே! நீங்கள் வேட்டைக்குச் சென்று வெகுநாட்கள் ஆகிவிட்டதே’ என்று, மன்னனின் மனநிலையை மாற்றும் நோக்கத்தில் கேட்டார்.

‘ஆம்! நீண்ட நாட்கள் ஆகிவிட்டதுதான். ஆனாலும் இப்போது வேட்டையாடும் மனநிலையில் நான் இல்லை’ என்றான் மன்னன். ‘மனநிலை குழப்பமாக இருக்கும்போது தான் அரசே, வேட்டையாடச் செல்ல வேண்டும். புறப்படுங்கள்; அப்படியே போகிற வழியில் தானே நம் குருவின் குடில் இருக்கிறது. அவரையும் தரிசித்து விட்டுப் போகலாம்’ என்றார் அமைச்சர்.

குரு என்று அமைச்சர் சொன்னதும், மன்னனின் மனம் துள்ளிக்குதித்தது. அவரிடம் சென்றால் மனக் குழப்பத்திற்கு மருந்து கிடைக்கும் என்று நினைத்த மன்னன் உடனடியாகப் புறப்பட்டான்.

இருவரும் குதிரையில் ஏறி குருவின் குடிலை நோக்கிச் சென்றனர். முதலில் மன்னனும், அமைச்சரும் சேர்ந்தே குருவை தரிசித்தனர். பின்னர் மன்னன் தனியாக குருவை சந்தித்து பேசினான். அப்போது அவன் மனதில் உள்ள குழப்பங்களை தெரிவித்ததுடன், அந்த குழப்பம் தீர தான் யோசித்து வைத்திருக்கும் தீர்வையும் சொன்னான்.

அவன் சொன்ன அனைத்தையும் அமைதியாக கேட்டுக் கொண்டிருந்த குரு, ‘சரி.. நீ புறப்படலாம்’ என்றார்.

மன்னன் அதிர்ச்சியடையவோ, குழப்பமடையவோ இல்லை. அவன் மனம் மகிழ்ச்சியில் திளைத்தது. மனம் தெளிவடைந்து உற்சாகத்துடன் குதிரை ஏறி வேட்டையாட காட்டிற்குச் சென்றான்.

மன்னன் சென்றதும், குடிலுக்குள் வந்த அமைச்சர், ‘குருவே! மன்னரின் மனக்கவலை தீர நீங்கள் என்ன தீர்வு சொன்னீர்கள்?’ என்று கேட்டார்.
அதற்கு குரு, ‘நான் ஒன்றுமே சொல்லவில்லை. மன்னன் சொன்னதை காது கொடுத்துக் கேட்டேன். அவன் கவலையை பகிர்ந்து கொண்டேன். அவன் தோள் சாய, என்னுடைய தோள் கொடுத்தேன். அவ்வளவுதான்’ என்றார்.