பேரழகைத் தரும் ரம்பா திருதியை


பேரழகைத் தரும் ரம்பா திருதியை
x
தினத்தந்தி 21 Nov 2017 1:30 AM GMT (Updated: 20 Nov 2017 1:21 PM GMT)

அட்சயத் திருதியை பற்றி அனைவருக்கும் தெரியும். அந்த நாளில் சிறிய அளவிலாவது செல்வம் வாங்கிவிட வேண்டும் என்று அனைவரும் ஆவல் கொள்வார்கள்.

21-11-2017  ரம்பா  திருதியை

ட்சயத் திருதியை பற்றி அனைவருக்கும் தெரியும். அந்த நாளில் சிறிய அளவிலாவது செல்வம் வாங்கிவிட வேண்டும் என்று அனைவரும் ஆவல் கொள்வார்கள். அதன் மூலம் இல்லத்தில் செல்வ வளம் அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாக இருக்கிறது.

அட்சயத் திருதியை பற்றி தெரியும் சரி.. உங்களுக்கு ‘ரம்பா திருதியை’ப் பற்றித் தெரியுமா?

செல்வத்தை அள்ளித் தருவது அட்சயத் திருதியை என்றால், ஐஸ்வரியத்தோடு பேரழகை அள்ளித் தரும் விரதம் ‘ரம்பா திருதியை’ ஆகும். இந்த விரதம் தேவலோக நடன மங்கையான ரம்பையின் நினைவாக, பார்வதிதேவியை நினைத்து செய்யப்படும் சிறப்பு மிகுந்த வழிபாடாகும். இந்த நாளில்தான் தேவேந்திரனின் அறிவுரையின் பேரில், பார்வதிதேவியை வழிபட்டு, ரம்பை தன்னுடைய பேரழகை மீட்டெடுத்ததாக புராணங்கள் கூறுகின்றன. கார்த்திகை மாதம் வரும் அமாவாசைக்கு அடுத்த மூன்றாவது நாளில் ‘ரம்பா திருதியை’ விரதம் கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்திரலோகத்தின் அழகார்ந்த இந்திரசபை கூடியிருந்தது. அந்த சபையின் அரியாசணத்தில் இந்திராணியோடு அமர்ந்திருந்தான் இந்திரன். சபையில் தேவர்கள் பலரும் வரிசையாக அமர்ந்திருக்க, சபையின் நடுவே, தேவலோகப் பேரழகிகளான ரம்பை, ஊர்வசி, மேனகை ஆகியோர் நடனமாடிக்கொண்டிருந்தனர்.

நடனம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே மூன்று அழகிகளுக்குள்ளும் போட்டி ஏற்பட்டு விட்டது. யார் சிறப்பாக நடனம் ஆடுகிறார்கள் என்ற பிரச்சினை எழுந்தது. அதனால் மூவரின் நடனமும் வேகம் பிடித்தது. தேவலோகத்தின் முதல் பேரழகி என்ற தனது பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள எண்ணிய ரம்பை, சுற்றுச் சுழன்று அரங்கம் அதிரும்படியாக ஆடிக்கொண்டிருந்தாள். அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது.

ஆட்டத்தின் இடையே, ரம்பை அணிந்திருந்த நெற்றிப்பொட்டும், பிறை சந்திரனும் கீழே விழுந்து விட்டன. இதனால் ரம்பை நிலை குலைந்து போனாள். இந்தக் காட்சியைக் கண்ட ஊர்வசியும், மேனகையும், ரம்பையைப் பார்த்து ஏளமான சிரிப்பை உதிர்த்து விட்டு, அரங்கை விட்டு வெளியேறினர்.

அவர்களின் செய்கையை தனக்கு நேர்ந்த அவமானமாக கருதிய ரம்பை, கீழே விழுந்த அணிகலன்களை எடுத்துக் கொண்டிருந்தபோது, ‘இன்றை சகுனம் சரியில்லை.. சபை கலையலாம்’ என்று உத்தரவிட்டான் இந்திரன்.

ஏற்கனவே தன் சக அழகிகளின் ஏளனத்தால் வெட்கிப் போயிருந்த ரம்பை, தன்னால் சகுனம் சரியில்லை என்று இந்திரன் சொன்னதும் உடைந்து போய்விட்டாள். இரவு முழுவதும் அவளுக்கு உறக்கம் இல்லை. சபையில் தனக்கு நேர்ந்த அவமானத்தை எண்ணி கண்ணீர் வடித்தாள்.

பொழுது விடிந்ததும் இந்திரனைப் போய் சந்தித்தாள். அவனிடம், ‘இந்திரதேவா! நேற்று எனக்கு அவையில் நடந்த அவமானத்துக்கு பரிகாரம் செய்ய வேண்டும். அந்த சம்பவத்தால், என்னுடைய முதல் அழகி என்ற பட்டம் பறிபோய் விட்டதோ என்று அஞ்சுகிறேன்’ என்று கலங்கினாள்.

ரம்பையை ஏறிட்ட இந்திரன், ‘நடனம் என்பது அதன் பாவங்களின் விதி மீறாமல் ஆட வேண்டும் என்பதே முறை. ஆனால் நீங்கள் மூவரும் நடனம் ஆடுவதற்கு பதிலாக, கூத்து அல்லவா நடத்தினீர்கள். அதைப் பார்த்து கலங்கிய கலைவாணிதான், உன்னுடைய நெற்றிப் பொட்டையும், பிறைசந்திரனையும் அகற்றிவிட்டாள். நீ முதல் அழகி என்ற பட்டத்தில் இருந்து கொஞ்ச காலம் விலகி இருப்பதுதான் நல்லது’ என்றான் ஆத்திரத்துடன்.

இந்திரன் அப்படிச் சொன்னதும் துடித்துப் போனாள் ரம்பை. ‘தேவேந்திரா! தேவ உலகின் அதிபதியான நீங்கள் என்னை விலக்கி வைக்கலாமா?. அதற்கு பதிலாக என்னுடைய தவறை திருத்திக்கொள்ள, பரிகாரம் சொல்லுங்கள்’ என்று வேண்டினாள்.

அவளது துன்பத்தை உணர்ந்து கொண்ட இந்திரன், ‘சிவபெருமானை அடையும் நோக்கில், பார்வதிதேவி பூமியில் அவதரித்திருக்கிறார். அவர் ஒரு மகிழ மரத்தின் கீழ் தவம் இருக்கிறார். அந்த கவுரிதேவியை விரதமிருந்து வழிபாடு செய்தால் உனக்கு ஏற்பட்டுள்ள களங்கம் நீங்கும்’ என்று விமோசனம் கூறினான்.

இதையடுத்து பூலோகம் வந்த ரம்பை, கவுரிதேவியைத் ேதடியபோது, பூலோகம் எங்கும் தீபங்கள் வரிசையாக ஒளிர்ந்து கொண்டிருந்தன. அது கார்த்திகை மாதம். அந்த ஒளியில் அன்னையை நம்பிக்கையோடு தேடிய ரம்பைக்கு அன்னையின் தரிசனம் கிடைத்தது.

கார்த்திகை மாத அமாவாசைக்கு இரண்டாம் நாள் துவிதியை திதி. அந்த நாளில் மஞ்சளால் அம்பிகை பிரதிமையை செய்து வைத்து, விரத பூஜை செய்தாள் ரம்பை. மஞ்சள் கொண்டு அன்னையை வணங்கியதால் இந்த பூஜைக்கு ‘தீந்திரிணி கவுரி விரதம்’ என்ற பெயரும் உண்டு. தீந்திரிணி என்றால் மஞ்சள் என்று பொருள்.

ரம்பையின் பூஜையை ஏற்றுக்கொண்ட கவுரிதேவி, மறுநாள் அவளுக்கு சொர்ணதேவியாக காட்சி தந்தாள். ரம்பையை மீண்டும் தேவலோகத்தில் முதல் அழகியாக ஆகும்படி அருளியதுடன், அவளது அழகையும், ஐஸ்வரியங்களையும் இன்னும் அதிகமாக்கி அருள் செய்தாள். மேலும் ரம்பை இருந்த விரதம் ‘ரம்பா திருதியை’ என்று பெண்களால் தங்கத் திருவிழாவாக கொண்டாடப்படும் என்றும் ஆசீர்வதித்தாள்.

ரம்பைக்கு கவுரி தேவி காட்சிதந்தபோது, அழகுக்கு உரிய கார்த்திகேயனை மடியில் வைத்தபடி பொன்மேனியளாக இருந்தார். அதன் காரணமாக, ரம்பா திருதியை அன்று கார்த்தியாயனி வீற்றிருக்கும் ஆலயங்களில் எல்லாம் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

Next Story