ஆன்மிகம்

ராமபிரான் பூஜித்த சிவலிங்கம் + "||" + Rama worshiped Shiva lingam

ராமபிரான் பூஜித்த சிவலிங்கம்

ராமபிரான் பூஜித்த சிவலிங்கம்
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் உள்ளது, அருள்மிகு கோதண்டராமேஸ்வரர் திருக் கோவில். இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனின் பெயர் கோதண்டராமேஸ்வரர்
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறில் உள்ளது, அருள்மிகு கோதண்டராமேஸ்வரர் திருக் கோவில். இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் இறைவனின் பெயர் கோதண்டராமேஸ்வரர். இறைவியின் பெயர் அகிலாண்டேசுவரி. கோவிலின் தல விருட்சம் வில்வ மரம். கயத்தாறு ராமர் தீர்த்தம், கோடி தீர்த்தம் ஆகியவை தல தீர்த்தங்களாக உள்ளன.

ராமபிரான் சீதாதேவியோடும், தம்பி லட்சுமணனோடும் வனவாசம் புரிந்தபோது, இந்த இடத்திற்கு வருகை புரிந்துள்ளார். அதற்கு ஆதாரமாக அவரது இரு பாதங்களும் பாறையின் மேல் பதிந்துள்ளன. அதன் நினைவாகவே இந்தத் திருக்கோவில் எழுப்பப்பட்டு உள்ளது.

‘பூமி வெங்கானம் நண்ணி
புண்ணிய தீர்த்தமாடி
ஏழிரண்டாண்டில் வா’


என அன்னை வழியாய், தந்தை சொல் ஏற்ற ராமபிரான், சீதா தேவியோடும், தம்பி லட்சுமணனோடும் வனம் புகுந்தார். அந்த காலத்தில் காடாக இருந்த இந்தத் திருக்கோவில் அமைந்து உள்ள இடத்தின் அருகே வந்தபோது, சீதா தேவிக்கு தாகம் ஏற்பட்டது. தன் மனைவியின் தாகம் தீர்ப் பதற்காக, தான் வைத்திருந்த கோதண்டத்தால், தரையில் அம்பை எய்தார், ராமபிரான். அம்பு நிலத்தைக் கீறியதில் உள்ளிருந்து ஊற்று ஒன்று பெருகி வந்து ஆறாக ஓடத் தொடங்கியது. அந்த ஆறு ‘கசந்த ஆறு’ என்று அழைக்கப்பட்டது. அதுவே அந்த ஊரின் பெயராகவும் ஆனது. அதுவே காலப்போக் கில் மருவி ‘கயத்தாறு’ என்றானதாக கூறப்படுகிறது.

ஊற்று ஏற்படுத்த கோதண் டத்தை ராமபிரான் வளைத்த போது, ஸ்ரீராமருடைய பாதங்கள் அழுந்திய பாறை யில் அவருடைய இரு பாதங்கள் பதிந்து இருப்பதாக தல புராணம் சொல்கிறது. அந்தப் பாறையில் உள்ள ராமர் பாதத்தை இன்றும், பக்தர்கள் பக்தி சிரத்தையுடன் வழிபாடு செய்து வருகிறார்கள்.

பல நூற்றாண்டுகளுக்கு முந்தைய கல்வெட்டுகள், இந்த ஆலயத்தின் உள்ள அம்மன் சன்னிதிக்கு முன்பாக வைக்கப்பட்டிருக்கின்றன. இக்கோவிலின் தென்கிழக்கு மூலையில் இருந்த வைணவக் கோவில், காலத்தின் கோலத்தால் அழிந்துபோனது. அந்தப் பெருமாள் கோவிலின் உற்சவ விக்கிரகங்களும், கல் விக்கிரகங்களும் இந்த ஆலயத்தில் காணக்கிடைக்கின்றன. வசைகவி புலவன் ஆண்டான் கவிராயர், ‘பாழை மணங்கமழும் கயத்தாற்றுப் பதியே’ என பாடி, ‘என்னாளும் உன்கோவில் நாசம்தானே’ என்று பாடியிருப்பது, ஆலயம் சிதையுண்டு போனதற்கு சான்று பகிர்வதுபோல் இருக்கிறது.

கோதண்டராமேஸ்வரர் ஆலயத்தின் முன்பு உள்ள சிற்றாறு, எத்தகைய வறட்சி யான காலகட்டத்திலும் வற்றாத ஊற்றாக பெருகி ஓடுகிறது. ராமர் பாதம் உள்ள பாறையில் இருந்து ஊற்று நீர் ஓடி வருவது தனிச்சிறப்பாகும். இந்த ஆறு வடக்கில் இருந்து தெற்காக ஓடுவது மற்றொரு தனிச்சிறப்பு.
ஆலய கருவறையில் சுவாமி கோதண்டரா மேஸ்வரர், லிங்க வடிவில் காட்சி அளிக்கிறார். ராமபிரான் பூஜை செய்த இறைவன் இவர் என்று சொல்லப்படுகிறது. மூலவரை தரிசித்து வேண்டும் வரம் பெற்று திரும்பும்போது, மகாமண்டபத்தின் இடதுபுற சுவற்றில் கல் திறவு கொண்ட சுரங்கம் உள்ளது. அதில் நான்கு கற்கள் இருக்கிறது. அதை நகர்த்தினால் உள்ள ஒரு அறை (நிலவறை) தெரிகிறது. இந்தச் சுரங்க அறையில்தான் முன்பு இத்திருக்கோவில் உற்சவ விக்கிரகமும், திருவாபரணங்களும் பாதுகாக்கப்பட்டு வந்ததாக தெரிவிக்கின்றனர்.

நாள்தோறும் இந்தக் கோவிலில் நான்கு கால பூஜைகள் நடைபெற்று வருகிறது. தினசரி காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் நடை திறந்திருக்கும். ஐப்பசி விசு திருநாளும், பங்குனி மாதம் நடைபெறும் தேரோட்ட திருவிழாவும் இங்கு நடைபெற்று வரும் முக்கிய திருவிழாக்களாகும்.

திருநெல்வேலி-மதுரை தேசிய நெடுஞ் சாலையில், திருநெல்வேலியில் இருந்து 57 கிலோமீட்டர் தொலைவிலும், கோவில்பட்டி நகரின் மத்தியிலும் இக்கோவில் அமைந் துள்ளது.

-நெல்லை வேலவன்.

அதிகம் வாசிக்கப்பட்டவை