செவ்வாய் தோ‌ஷம் போக்கும் உஜ்ஜைனி மங்களநாதர்


செவ்வாய் தோ‌ஷம் போக்கும் உஜ்ஜைனி  மங்களநாதர்
x
தினத்தந்தி 24 Nov 2017 1:30 AM GMT (Updated: 23 Nov 2017 11:25 AM GMT)

நவக்கிரகங்களில் ஒருவரான செவ்வாய் மங்களகரமான வாழ்வை அருள்பவர். தைரியம், வலிமை, பெருந்தன்மை, கண்டிப்பு, வைராக்கியம், பகைவரை எதிர்க்கும் ஆற்றல் ஆகிய வற்றை கொடுப்பவரும் இவரே.

வக்கிரகங்களில் ஒருவரான செவ்வாய் மங்களகரமான வாழ்வை அருள்பவர். தைரியம், வலிமை, பெருந்தன்மை, கண்டிப்பு, வைராக்கியம், பகைவரை எதிர்க்கும் ஆற்றல் ஆகிய வற்றை கொடுப்பவரும் இவரே. செவ்வாய்க்கு ‘குஜன்’ என்ற பெயரும் உண்டு. ‘கு’ என்றால் பூமி. ஜன் என்றால் பிறந்தவன் எனப்பொருள். இவரை பூமாதேவியின் மகன் என்பார்கள். மங்களன், அங்காரகன் என்பது இவரது வேறு பெயர்களாகும்.

மத்திய பிரதேசத்தின் தலைநகரான உஜ்ஜைனில் அமைந்துள்ள மங்களநாதர் சிவாலயம், செவ்வாய் அவதரித்த தலமாகும். இதனால் இது அங்காரக ஷேத்திரம் என்று அழைக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் வைத்தீஸ்வரன் கோவில் செவ்வாய் தலமாக கருதப்படுகிறது. நாட்டின் பல இடங்களில் செவ்வாய்க்கு கோவில்கள் இருந்தாலும், செவ்வாய் பிறந்த தலமாக உஜ்ஜைனி மங்களநாதர் கோவில் உள்ளதால், இங்குள்ள வழிபாட்டுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

 செவ்வாய் பகவான், செந்நிற மேனி, புன்னகை பூத்த முகம், நான்கு கைகள், கதை, சக்தி ஆயுதம், சூலம் ஏந்தி வரத முத்திரையுடன் விளங்குபவர். பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்ததாக கருதப்படும் இந்த ஆலயத்தில் செவ்வாய் பகவான், மங்களநாதர் என்ற பெயரில்  சிவலிங்க திருமேனியாக காட்சியளிக்கிறார். பொதுவாக சிவன் கோவில்களில் மூலவருக்கு எதிரில் நந்தி சிலை இருக்கும். ஆனால் இங்கு மங்களநாதர் கருவறையின் முன்பு செவ்வாய் பகவானின் வாகனமாக கருதப்படும் ஆடு உருவம் வைக்கப்பட்டுள்ளது.

ஒருவரின் ஜாதகத்தில் லக்னத்தில் 4,7,8,12 இடங்களில் செவ்வாய் இருந்தால், அது தோ‌ஷமாக கருதப்படுகிறது. இதனால் அந்த ஜாதகருக்கு திருமண தடைஏற்படும்; விபத்து நேரிடும், அடிக்கடி காயம் ஏற்படும் என்கிறது ஜோதிட பலன். இந்த தோ‌ஷ நிவர்த்திக்காக மக்கள் செவ்வாய் தலத்திற்குச் சென்று, செவ்வாய்க்கிழமைகளில் விரதம் இருந்து பரிகார பூஜைகள் செய்கின்றனர்.

உஜ்ஜைனி மங்களநாதர் கோவில் 5 அடி உயர கோபுரத்துடன் கம்பீரமாக காட்சியளிக்கிறது. மங்களநாதர் கோவில் கருவறை, பூமத்தியரேகையின் நேர்க்கோட்டில் அமைந்துள்ளது. திருமணத்தடை ஏற்படுபவர்கள், செவ்வாய்க் கிழமைகளில் விரதம் இருந்து அங்காரனுக்கு சிவப்பு ஆடை சாத்தி, செவ்வரளி மலர்களால் அர்ச்சனை செய்து, துவரம் பருப்பு பொடி கலந்த அன்னத்தை நிவேதனம் செய்து, பிறகு அதனை தானம் செய்கிறார்கள். கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்கள் கைகளால் சுவாமிக்கு அபிஷேகம் செய்யலாம். அர்ச்சனை அபிஷேக பொருட்களை வெளியில் விற்கும் கடையில் வாங்கும் பக்தர்கள், பூசாரி மந்திரம் சொல்ல தாங்களாகவே சாமிக்கு அபிஷேகம் செய்கிறார்கள்.



செவ்வாய் அவதார வரலாறு

முன்னொரு காலத்தில் அந்தகாசுரன் என்ற அரக்கன், சிவபெருமானை நோக்கி கடும் தவம் இருந்தான். அவன் தவம் இருந்த இடம் உஜ்ஜைனி. அவனது தவத்தை கண்டு மகிழ்ந்த பரமேசுவரன் தோன்றினார். ஈசனை தரிசித்த அந்தகாசுரன், ‘இறைவா! உமது தரிசனம் கண்டு எல்லையில்லா ஆனந்தம் அடைந்தேன். எனது ரத்தம் தரையில் விழுந்தால் அதில் இருந்து என்னைப்போல நூற்றுக்கணக்கானவர்கள் பிறக்க வேண்டும். எனது உள்ளம் மகிழும்படியாக இந்த வரத்தை எனக்கு வழங்கி அருளவேண்டும்’ என்று வேண்டினான். பக்தர்கள் வேண்டியதை வாரி வழங்குவதே இறைவனின் முதல் கடமை என்பதால், அசுரன் கேட்ட வரத்தை அப்படியே வழங்கினார் சிவபெருமான்.

வரம் பெற்ற அரக்கனுக்கு ஆணவம் தலை தூக்கியது. மமதையில் தன் நிலை மறந்து உஜ்ஜைனி நகரில் இருந்த முனிவர்கள், ரிஷிகள், மக்கள் என பேதம் பார்க்காமல், அனைவருக்கும் துன்பம் விளைவித்தான். அவனது செய்கையால் நிலைகுலைந்து போன முனிவர்கள், சிவபெருமானை நோக்கி வழிபாடு நடத்தினர். பக்தர்களின் துயர் களைய பரமேஸ்வரன் முன் வந்தார். அதன்படி அந்தகாசுரனுடன் போரிட முடிவுசெய்தார்.

ஒருநாள் இரவு அவர் சூலாயுதத்துடன் அந்தகாசுரன் முன் தோன்றினார். வந்திருப்பது பரம்பொருள் என்று அறியாத அசுரன், சிவனை எதிர்த்துத் தாக்கினான். இரு வருக்கும் இடையே வானத்தில் கடுமையான போர் நடந்தது. இந்த யுத்தம் பல ஆண்டுகள் நீடித்தது. போர் முடிவடையும் நேரத்தில் சிவபெருமானின் உடலில் இருந்து வியர்வையின் சொட்டுகள் நிலத்தில் விழுந்தன. அது நிலத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்து, செவ்வாய் கிரகம் பிறந்தது. அரக்கன் அந்தகாசுரனின் உடலில் இருந்து விழுந்த ரத்தத் துளிகளை செவ்வாய் கிரகம் உள்வாங்கி அதை பூமியில் விழாமல் தடுத்தது. இதைத் தொடர்ந்து சிவபெருமான் அந்தகாசுரனை சூலாயுதத்தால் அழித்தார். தேவர்களும், முனிவர்களும் ஆனந்தம் அடைந்தனர். இந்த வரலாறு கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது. அரக்கனின் ரத்தத்தை செவ்வாய்க்கிரகம் உள்வாங்கி கொண்டதால் அது சிவப்பாக இருப்பதாக கூறப்படுகிறது.

மங்களநாதர் கோவிலில் மார்ச் மாதம் அங்காரக சதுர்த்தியன்று சிறப்பு பூஜையும், சிறப்பு யாகங்களும் நடைபெறும். அப்போது நடைபெறும் ‘பட்’ பூஜா மிகவும் பிரசித்தமானது. சதுர்த்தி, சப்தமி, அஷ்டமி, துவாதசி திதிகளிலும், செவ்வாய்க்கிழமைகளிலும் இந்த ஆலயத்தில் சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.



அன்னாபிஷேகம்

கோவிலில் உள்ள சிவலிங்கத்திற்கும், உற்சவமூர்த்திக்கும் பக்தர்கள் தயிரால் அபிஷேகம் செய்து அன்னாபிஷேகம் செய்கின்றனர். பிறகு அந்த அன்ன பிரசாதத்தை பக்தர்களுக்கு வினியோகம் செய்கின்றனர். தங்களுடைய கோரிக்கைகளை நிறைவேற அந்த வேண்டுதலை செய்கின்றனர்.     

உஜ்ஜைனி ரெயில் நிலையத்தில் இருந்து 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிப்ரா நதிக்கரையில் இந்த ஆலயம் அமைந்திருக்கிறது.

–மருத்துவர் நா.மோகன்தாஸ், தஞ்சாவூர்.

கிளி வடிவில் தரிசனம்

உஜ்ஜைனி மங்களநாதர் கோவில் தினமும் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். பின்னர் கற்பூர ஆரத்தி காட்டும்போது ஏராளமான கிளிகள் கூட்டமாக வந்து கோவில் வளாகத்தில் வந்து காத்திருக்கும். அந்தக் கிளிகளுக்கு, கோவில் அர்ச்சகர் பிரசாதத்தைக் கொடுக்கிறார். தரிசனத்திற்காக வரும் பக்தர் களும், கிளிகளுக்கு தானியங்களை காணிக்கையாக வழங்குகிறார்கள். அவற்றை கிளிகள் சாப்பிடுகின்றன. மங்களநாதரே கிளிவடிவில் வந்து பிரசாதம் பெற்றுக் கொண்டு, பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவதாக நம்பிக்கை நிலவுகிறது.

Next Story