ஆன்மிகம்

தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரர் வீதிஉலா + "||" + Karthikai Deepathirigai 2 day

தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரர் வீதிஉலா

தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரர் வீதிஉலா
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழாவின் 2-ம் நாளான நேற்று காலை தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகர் மாடவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
திருவண்ணாமலை,

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கார்த்திகை தீபத்திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் தனித்தனி கண்ணாடி விமானங்களில் மாடவீதியில் பவனி வந்தனர். இரவு 10 மணியளவில் சாமி வீதிஉலா நடந்தது.


வெள்ளி மூஷிக வாகனத்தில் விநாயகரும், மயில் வாகனத்தில் சுப்பிரமணியரும், வெள்ளி அதிகார நந்தி வாகனத்தில் உண்ணாமலையம்மன் சமேத அருணாசலேஸ்வரரும், வெள்ளி அம்ச வாகனத்தில் பராசக்தி அம்மனும், புலி வாகனத்தில் சண்டிகேஸ்வரரும் மாட வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

விழாவின் 2-ம் நாளான நேற்று காலை 11 மணி அளவில் விநாயகர் மூஷிக வாகனத்திலும், சந்திரசேகரர் தங்க சூரிய பிரபை வாகனத்திலும் ராஜகோபுரம் எதிரே உள்ள 16 கால் மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடந்தது. அதைத் தொடர்ந்து கோவில் யானை ருக்கு முன்னே செல்ல மேள தாளங்கள் முழங்க மூஷிக வாகனத்தில் விநாயகரும், அதன் பின்னே தங்க சூரிய பிரபை வாகனத்தில் சந்திரசேகரரும் கோவில் மாடவீதியை சுற்றி வந்தனர். மாட வீதிகளில் பக்தர்கள் தங்களின் வீடுகளின் அருகே சாமி வந்ததும் தேங்காய் உடைத்து கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.

மேலும் பக்தர்கள் கரும்பில் தொட்டில் அமைத்து தங்கள் குழந்தையை அதில் அமர வைத்து நேர்த்தி கடனாக மாட வீதியில் வலம் வந்தனர். இதையடுத்து அவர்கள் தொட்டில் அமைக்க பயன்படுத்திய கரும்புகளை உடைத்து அங்கிருந்த பக்தர்களுக்கு வழங்கினர்.

இரவு 10 மணி அளவில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், உண்ணாமலையம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் தனித்தனி வெள்ளி இந்திர விமானங்களில் கோவில் மாடவீதியை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தனர்.


தொடர்புடைய செய்திகள்

1. பரக்கலக்கோட்டை பொது ஆவுடையார் கோவிலில் கார்த்திகை கடைசி சோமவார விழா
பரக்கலக்கோட்டையில் உள்ள பொது ஆவுடையார் கோவிலில் கார்த்திகை கடைசி சோமவார விழா நடைபெற்றது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.
2. திருவண்ணாமலை தீபத்திருவிழா: திருப்பூரில் இருந்து 60 சிறப்பு பஸ்கள்
திருவண்ணாமலை தீபத்திருவிழாவுக்கு செல்லும் பக்தர்களின் வசதிக்காக திருப்பூரில் இருந்து 60 சிறப்பு பஸ்கள் இன்று(வியாழக்கிழமை) முதல் இயக்கப்படுகின்றன.
3. கார்த்திகை மகாதீபத் திருவிழா அன்று 2 ஆயிரம் பேர் மட்டும் மலையேற அனுமதி
கார்த்திகை மகா தீபத்திருவிழா அன்று 2 ஆயிரம் பேர் மட்டும் மலையேற அனுமதிக்கப்படுவார்கள் என்று கலெக்டர் கந்தசாமி கூறினார்.