இருளை விலக்கும் திருக்கார்த்திகை 2-12-2017 கார்த்திகை திருநாள்


இருளை விலக்கும் திருக்கார்த்திகை 2-12-2017 கார்த்திகை திருநாள்
x
தினத்தந்தி 28 Nov 2017 10:58 AM GMT (Updated: 28 Nov 2017 10:58 AM GMT)

இருளை விலக்கவல்லது ஒளி, அந்த ஒளியை தருவது அக்னி எனப்படும் நெருப்பு. நெருப்பை உருவாக்கக் கற்றுக் கொண்டு அதன் பயனை அறிந்தபின்னரே மனித நாகரிகம் தன்னிறைவு பெறத் தொடங்கிற்று.

ருளை விலக்கவல்லது ஒளி, அந்த ஒளியை தருவது அக்னி எனப்படும் நெருப்பு. நெருப்பை உருவாக்கக் கற்றுக் கொண்டு அதன் பயனை அறிந்தபின்னரே மனித நாகரிகம் தன்னிறைவு பெறத் தொடங்கிற்று. ஆகாயத்தை அரணாக வரித்துக் கொண்டு, நிலத்தில் நிலைத்து, நீரைப்பருகி, காற்றை சுவாசித்து வாழ்ந்து கொண்டிருந்த மனிதர்கள், நெருப்பை மூட்டி அதன் மூலம் தங்களது உணவுத்தேவைகளை அடையவும், விலங்குகளிடமிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ளவும் கற்றுக்கொண்ட பின்னரே எதையும் எதிர்கொள்ளும் ஆற்றல் பெற்றனர். காலப்போக்கில் அவர்கள் தங்களுக்கு உதவிசெய்த இயற்கை சக்திகளை போற்றவும், கைமாறு கருதாது செயலாற்றும் அவைகளுக்கு நன்றி தெரிவிக்கவும் முற்பட்டனர். பன்னெடுங்காலத்திற்கு முன் சடங்காக அவர்களுள் உதித்த இந்த நிகழ்வே படிப் படியாக வளர்ச்சிப் பெற்று இன்று சம்பிரதாய பூர்வமான வழிபாடாக உருப்பெற்றுள்ளது.

ஆதியில், இயற்கை சக்திகள் யாவும் கடவுளால் தரப்பட்டது என்று நம்பிக் கொண்டிருந்தவர்கள் பின்னர் அந்த சக்தி களையே கடவுளாக்கி அதற்கென்று ஒரு ஆலயம் நிர்மாணித்து நன்றியை சாசனமாக்கி வழிபாட்டுக்கு மேலும் சிறப்பு சேர்த்தனர். பஞ்ச பூதங்கள் எனப்படும் நீர், நிலம், காற்று, ஆகாயம், நெருப்பு என்னும் இயற்கை சக்திகள் கடவுளாக உருப்பெற்றதும், அவைகளுக்குரிய கோவில்கள் உருவாக்கப்பட்டதும் இப்படித்தான். அதன்படி நீரின் அதிபதியாக திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரரும், நிலத்தின் அதிபதியாக திருவாரூர் தியாகேசரும் (காஞ்சி ஏகாம்பரேஸ்வரரையும் கூறுவதுண்டு), காற்றின் அதிபதியாக திருக்காளஹஸ்தி காளத்திநாதரும், ஆகாயத்தின் அதிபதியாக சிதம்பரம் நடராஜபெருமானும், நெருப்பின் அதிபதியாக திருவண்ணாமலை அருணாசலேஸ்வரரும் போற்றி வணங்கப்படுகின்றனர்.

இவர்களில் நெருப்பின் அதிபதியான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர், அக்னிமலையாக ஒளிர்ந்த, ஒளிரும் திருநாளே திருகார்த்திகை தீபத்திருநாளாகும்.

சிவமலை அக்னிமலையாய் சிவந்த நாளை குறிக்கும் விதமாகவே தீபம் ஏற்றப்படுகிறது என்று ஒருசாரரும், மற்றொரு சாரரோ, ஒருசமயம் சக்தி விளையாட்டாக சிவனின் கண்களைப் பொத்தினார். அடுத்த நொடியே பிரபஞ்சமே இருளில் ஆழ்ந்தது. சிவன் கோபமானார், விளையாட்டாக தான் செய்த செயலால் சிவன் கோபித்ததும், உலக ஜீவராசிகள் தவித்ததையும் பார்த்த உமையவள் தன்னை மன்னித்தருளுமாறு வேண்டினார். சிவன் உமையவளை மன்னித்து தன் உடலின் இடப்பாகத்தை தந்து அர்த்தநாரீஸ்வரராக காட்சியளித்தார். இருண்ட பிரபஞ்சத்திற்கு ஒளியூட்டிய நாளைப் போற்றும் விதமாகவே உயர்ந்த இடத்தில் தீபம் ஏற்றி வழிபாடு செய்யப்படுகிறது என்கின்றனர்.

நாம் பிறப்பதற்கு முன் நம் தாயின் கருவறையில்தான் இருந்தோம். அதுபோல ஆலயங்களில் இறைவன் குடிகொண்டிருக்கும் இடத்தை கருவறை என்கிறோம். கருவறை என்பது வெளிச்சம் படாத ஒரு இடம். அண்டமெங்கும் நிறைந்துள்ள இறைவன் கண்ணுக்குத் தெரியாத பரம்பொருள் என்பதை நினைவு கூர்வதற்காகவே கருவறையில் அவனை பிரதிஷ்டை செய்வது வழக்கமாயிற்று. கற்பூரதீபம் காட்டும்போது கருவறை என்னும் இருளறையில் சிலையாய் நாம் பிரதிஷ்டை செய்த இறைவனின் திருவுருவம் நம் கண் களுக்கு முழுமையாக காட்சியளிக்கிறது. தீபத்தை ஏற்றி மனமாசை (இருளை) விலக்கி வழிபட்டால் பிரபஞ்சமெங்கும் நிறைந்திருக்கும் பேரறிவாளனின் தரிசனம் நமக்கு நிச்சயம் கிட்டும் என்ற தத்துவத்தின் அடிப்படையிலேயே இப்படி தீபமேற்றி வழிபடும் வழக்கம் உருவானது என்கின்றனர் அறிஞர்கள்.

தீபத்தில் இறைவனை காண்பது முன்னோர்கள் காலத்திலிருந்து தொன்றுதொட்டுவரும் நடைமுறையாகும். இவ்வுலகில் உயிரினங்கள் வாழ்வதற்குத் தேவையான அனைத்தையும் சூரியஒளியே தருகிறது என்பதை குறிக்கும் விதமாக தீபவழிபாடு ஏற்பட்டிருக்கலாம் என்பது மற்றொரு சாரரின் கருத்தாகும். ஒளியான தீபவெளிச்சமே அறியாமை என்னும் இருளிலிருந்து நம்மையெல்லாம் மீட்டு அறிவுரீதியாகவும், ஆன்மிகரீதியாகவும் பலப்படுத்துகிறது. மேலும் எரியும் விளக்கை கவிழ்த்தாலும் அதிலிருந்து சுடர்விடுகின்ற தீபம் எப்பொழுதும் மேல்நோக்கியே இருக்கும். அதுபோல வாழ்க்கையில் நாம் எத்தனை எத்தனை பிரச்சினைகளை எதிர்கொண்டாலும் நமது எண்ணம் மேல்நோக்கியே இருக்கவேண்டும் என்பதே தீபம் நமக்கு உணர்த்தும் உன்னத பாடமாகும். இத்தகைய தீபத்தை அந்த ஏகநாயகன் நினைவாக ஏற்றி வழிபடும் ஏற்றம்தரும் திருநாளே கார்த்திகை தீபத்திருநாள். ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்து கார்த்திகை நட்சத்திரத்தன்று, அக்னியாய் சிவந்து அறத்தைக்கூறிய சிவனின் தரிசனம் வேண்டி கொண்டாடப்படும் இத்திருநாளன்று விரதமிருந்து நெல்பொறி அல்லது அவல்பொறியை நைவேத்தியமாக படைத்து வீடு மற்றும் நாம் புழங்கும் இதர இடங்களில் விளக்கேற்றி வழிபடுவது மரபாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது .

ஒவ்வொரு சிவாலயத்திற்கும் மாதாந்திர உற்சவங்கள், வழக்கமான உற்சவங்கள் தவிர ஆண்டுக்கொரு தடவை பத்துநாள் உற்சவம் எனப்படும் பெருந்திருவிழாக்கள் நடத்தப்பெறுவது வழக்கமாகும். கார்த்திகை தீபத்திருவிழா எல்லா சிவாலயங்களிலும் கொண்டாடப்பட்டாலும் இது திருவண்ணாமலை தலத்தில் மிகவும் சிறப்பாகவும் விமரிசையாகவும் கோலாகலமாகவும் தனித்துவத்துடனும் கொண்டாடப்படுகிறது. இன்னும் சொல்வதானால் இவ்வாலயத்தின் பெருந்திருவிழாவே கார்த்திகை தீபத் திருவிழாதான்.

தீபத்திருநாளன்று சுமார் ஆயிரம் கிலோ நெய்யை அதற்கென்று வடிவமைக்கப்பட்ட வெண்கல கொப்பறையில் ஊற்றி தீபம் ஏற்றப்படுகின்றது. இந்த கொப்பறை மைசூர் சமஸ்தானத்தில் அமைச்சராக இருந்த வேங்கடபதி ராயர் என்பவரால் 1745-ல் வழங்கப்பட்டதாகும். இன்றுவரை இந்த கொப்பறையிலேயே மகாதீபம் ஏற்றப்படுகின்றது. மலைமீது ஏற்றப்படும் தீபம் ஏற்றுவதற்கு முன்னர் ஆலயத்தினுள் பஞ்சமூர்த்திகள் வெளியே வந்து நிற்கும். அவைகளுக்கு முன் அகண்டதீபம் ஏற்றும் அதேநேரத்தில், மலைமீது மகாதீபம் ஏற்றப்படும். அந்த நேரம் அண்ணாமலைக்கு அரோகரா என்ற கோஷம் வானை பிளக்கும். அன்று ஏற்றப்படும் இந்த தீபம் பதினோறு தினங்கள் அணையாமல் சுடர்விட்டு எரியும்.

இவ்வாலயத்தின் கோபுரம் 216 அடி உயரமும் பதினோரு நிலைகளையும் கொண்டது, இக்கோவிலில் 9 கோபுரங்களும் உள்ளன. ஆலயத்தின் தீர்த்தங்களாக சிவகங்கை தீர்த்தமும் பிரம்ம தீர்த்தமும், உள்ளன.

-நெய்வாசல் நெடுஞ்செழியன்.

Next Story