குறைகள் தீர்க்கும் இறை நாமம்
இறை நாம சக்தியின் மூலம், உலகில் பல அற்புதங்களை செய்ய இயலும்.
தான் விரும்பும்போது மட்டுமே மரணத்தை அடையக்கூடிய ‘இச்சா மிருத்யு’ எனப்படும் அற்புத வரத்தை பீஷ்மர் பெற்றிருந்தார். பாரதப்போரில் வீழ்த்தப்பட்டபோது, அவர் இறந்துவிடவில்லை. அம்புப் படுக்கையிலேயே உத்தராயண புண்ணிய காலம் வரும் வரை மரண வேதனையில் துடித்துக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் அவருக்கு தண்ணீர் தாகம் ஏற்பட்டது. அவர் அர்ச்சுனனை நோக்கி தனக்கு தண்ணீர் கிடைக்க ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
ஆயுதங்களை பயன்படுத்தும் யுத்த களத்தில் தண்ணீர் கிடைக்க வேண்டி அர்ச்சுனன் ஒரு ஜல அஸ்திரத்தை பூமியில் பிரயோகம் செய்தான். ஆனால், தண்ணீர் கிடைக்கவில்லை. அர்ச்சுனன் உட்பட அனைவருக்கும் ஒன்றும் புரியவில்லை. ‘எதனால் பூமியில் இருந்து தண்ணீர் வரவில்லை?’ என்று அறிய நினைத்த அர்ச்சுனன், கிருஷ்ணனை நாடி தனது சந்தேகத்தை கேட்டான்.
தனக்கே உரிய குறும்பு புன்னகையுடன் கிருஷ்ணன், பஞ்சபாண்டவர்களில் ஒருவனான சகாதேவனை அர்த்தத்துடன் நோக்கினார். அதில் உள்ள ரகசியச் செய்தியை புரிந்து கொண்டு, அவன் விரைந்து சென்று அர்ச்சுனன் அம்பு, தரையில் பதிந்திருந்த இடத்திற்கு அருகே தன்னுடைய குரு விரலான ஆட்காட்டி விரலையும், சனி விரலான நடு விரலையும் வைத்து ஒருவித சைகையைச் செய்தான். உடனே, பூமியிலிருந்து கங்கை நீர் பிரவாகம் பீறிட்டு வெளியே வந்து, பீஷ்மரை அடைந்து அவருடைய தாகத்தைத் தீர்த்து வைத்தது. இந்த நிகழ்வு காரணமாக அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர்.
அப்போது கிருஷ்ணன் அனைவரிடமும் இறை நாம மகிமையை எடுத்துக் கூறியதோடு, அதை கைகளால் ஜபம் செய்யும் முறையை அறிந்த சகாதேவனால் கங்கையை எவ்வாறு இங்கே வரவழைக்க இயன்றது என்ற ரகசியத்தையும் வெளியிட்டார். சகாதேவன் பல வருடங்களாக பயின்று வந்த இறை நாம மகிமையால், பூமியில் மறைந்திருந்த கங்காதேவி தனது பிள்ளை பீஷ்மரின் தாகம் தீர்க்க விரைந்து வந்தாள். தாயின் அன்பை விடவும் சக்தி உடைய இறை நாம சக்தியின் மூலம், உலகில் பல அற்புதங்களை செய்ய இயலும் என்று உணர்த்தவே கிருஷ்ண பரமாத்மா இந்த நாடகத்தை நிகழ்த்தினார் என்பதை அனைவரும் உணர்ந்தனர்.
Related Tags :
Next Story