தங்கைக்கு உதவிய பெருமாள்
இறைவன் பார்வதீசுவரர் என்ற பெயரிலும், இறைவி சாந்த நாயகி என்ற பெயரிலும் அருள்பாலிக்கும் சிவாலயம் கிழக்கு திசையில் இருக்க, மேற்கில் தங்கையுடன் நிழல் போல் சென்ற திருமாலின் ஆலயம் இருக்கிறது.
இஞ்சிகுடி ஒரு அழகிய கிராமம். இங்கிருந்த சந்தனக்காட்டில் தவம் செய்து கொண்டிருந்தார் துர்வாச முனிவர். அவரை அடைய நினைத்த மதலோலை என்ற அரக்கி, முனிவரின் தவத்தை கலைத்தாள். தவம் கலைந்து பார்த்த முனிவரின் எதிரே நின்றிருந்தாள் மதலோலை. கடும் கோபம் கொண்ட முனிவர், அவளுக்கு சாபத்தோடு தாயாகும் வரத்தையும் வழங்கினார்.
இதையடுத்து மதலோலை, கருவுற்று அம்பரன், அம்பன் என இரு புதல்வர்களைப் பெற்றெடுத்தாள். அவர்கள் அசுரத் தன்மையோடு வளர்ந்தனர். பின்னர் தவத்தால் இறைவனிடம் இருந்து பல வரங்களைப் பெற்ற அவர்கள், தேவர்களுக்கும், முனிவர்களுக்கும், பூலோக மக்களுக்கும் பெரும் துன்பம் விளைவித்தனர். துன்பத்தால் துடித்த மக்கள் தேவர்களிடத்திலும், தேவர்கள் சிவபெருமானிடமும் முறையிட்டனர். அவர்களின் வேண்டுகோளுக்குப் பலன் கிடைத்தது.
அனைவரையும் அசுரர்களிடமிருந்து காப்பாற்ற முடிவு செய்த சிவபெருமான், தனது இடதுபாகத்தில் அமர்ந்திருந்த பார்வதி தேவியை புன்னகையோடு நோக்கினார். அவரது பார்வையின் பொருளை உணர்ந்த அன்னை, கண்டவர் மயங்கும் பேரழகு கொண்டு அசுரர்களின் முன்பு போய் நின்றாள்.
அசுரர்கள் இருவரும் அந்தப் பெண்ணைப் பார்த்தனர். அவளது அழகில் மதி மயங்கினர். மணந்தால் அவளைத்தான் மணப்பது என இருவரும் முடிவு செய்தனர். அப்போது திருமால் ஒரு வயோதிகர் உருவில் அங்கு தோன்றினார். இரு அரக்கர்களும் அந்தப் பெண்ணை தங்களுக்கே மணம் முடித்து தர வேண்டும் என அந்த வயோதிகரிடம் கேட்டனர்.
அதைக்கேட்ட வயோதிகர் ‘ஒரு பெண்ணை எப்படி இருவர் அடைய முடியும்?. உங்களில் பலசாலி யாரோ, அவர்களுக்கே இந்தப் பெண் கிடைப்பாள்’ என்றார்.
இருவரில் யார் பலசாலி என்று அறிந்து கொள்வதற்காக இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. அந்த பயங்கரமான சண்டையில், அம்பரன் தன்னுடைய தம்பி அம்பனைக் கொன்றான். வெற்றி பெற்ற மகிழ்வில் அம்பரன், அந்தப் பெண்ணை நெருங்கினான்.
அப்போது அன்னையானவள், காளியாக உருவெடுத்தாள். கண்ணில் கோபம் பொங்க ஆக்ரோஷமாக நின்ற அம்பிகையைக் கண்டு அம்பரன் நடுநடுங்கிப் போனான். அவளிடம் இருந்து தப்பிக்க வடக்கு திசை நோக்கி ஓடத் தொடங்கினான்.
அவனைத் துரத்திச் சென்ற காளிதேவி, தன்னுடைய சக்தி வாய்ந்த ஆயுதங்களையெல்லாம் அசுரனின் மீது வீசினாள். ஆனால் அந்த அசுரன் அவற்றையெல்லாம் தன் கைகளில் பற்றிக்கொண்டு ஓட்டம் பிடித்தான். ஐந்து காத தூரம் விரட்டிச் சென்ற காளி, தன் சூலாயுதத்தை ஏவினாள். சூலாயுதத்திற்கு அம்பரனால் தப்ப முடியவில்லை; இறந்து போனான்.
அசுர வதம் முடிந்தும், காளியின் கோபம் அடங்கவில்லை. இதைக் கண்ட திருமால், காளியிடம் சாந்தம் அடைந்து, முன்பு போல் சிவபெருமானின் இடது பாகத்தில் இருந்தருள வேண்டும் என்று வேண்டினார். தேவியும் அப்படியே இறைவனின் இடப்பாகத்தில் அமர்ந்தாள்.
இறைவன் பார்வதீசுவரர் என்ற பெயரிலும், இறைவி சாந்த நாயகி என்ற பெயரிலும் அருள்பாலிக்கும் சிவாலயம் கிழக்கு திசையில் இருக்க, மேற்கில் தங்கையுடன் நிழல் போல் சென்ற திருமாலின் ஆலயம் இருக்கிறது. இந்த ஆலயத்தில் மூலவரான பெருமாள் ‘ஆதிகேசவப் பெருமாள்’ என்ற பெயரில் சேவை சாதிக்கிறார். அவருக்கு இருபுறத்திலும் ஸ்ரீதேவி -பூ தேவி தாயார் இருக்கின்றனர். கருவறைக்கு எதிரே கருடாழ்வாரும், கருவறை முகப்பின் வலது புறம் லட்சுமி நாராயணரும் அருள்பாலிக்கின்றனர்.
இந்த ஆலயத்தின் தலவிருட்சம் நெல்லி மரம். இந்த விருட்சம் ஆலயத்தின் வடகிழக்கு மூலையில் உள்ளது. தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் ஆலயம் திறந்திருக்கும்.
மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் சாலையில் பேரளம் ரெயில் நிலையத்தில் இருந்து, ½ கிலோமீட்டர் தொலைவில் உள்ளது இஞ்சிகுடி கிராமம்.
-முனைவர் சி.செல்வி
Related Tags :
Next Story