விஸ்வரூப சர்வ மங்கள சனீஸ்வரர்


விஸ்வரூப சர்வ மங்கள சனீஸ்வரர்
x
தினத்தந்தி 19 Dec 2017 11:46 AM IST (Updated: 19 Dec 2017 11:46 AM IST)
t-max-icont-min-icon

சனீஸ்வரன் என்ற பெயரை கேட்டாலே போதும்..! பலருக்கும் மனதில் ஒருவித பயம் ஏற்பட்டு விடுகிறது.

னீஸ்வரன் என்ற பெயரை கேட்டாலே போதும்..! பலருக்கும் மனதில் ஒருவித பயம் ஏற்பட்டு விடுகிறது. காரி, மந்தன் மற்றும் ரவிபுத்திரன் என்று குறிப்பிடப்பட்டாலும் சனீஸ்வரன் என்ற பெயர்தான் பிரபலம். திருநள்ளாறு, திருக்கொள்ளிக்காடு, குச்சனூர் மற்றும் சனி சிங்கனாப்பூர் ஆகிய தலங்கள், மக்கள் மத்தியில் பெரிதும் பேசப்படும் பரிகார தலங்களாக உள்ளன.

சிவன் கோவில்களில் ஈசானிய பாகத்தில், மேற்கு திசையை நோக்கியவாறு சனீஸ்வரர் அமைக்கப்பட்டிருப்பதோடு, நவக்கிரகங்களுக்கான சன்னிதியில் மேற்கு பார்த்து நின்ற நிலையிலும் இருப்பார். பிள்ளையார், சிவன், அம்பிகை, முருகன் ஆகிய கோவில்களிலும் சனீஸ்வரர் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பார்.

ஒவ்வொரு கோவிலிலும் உள்ள தெய்வ விக்கிரகங்களின் வடிவம் மற்றும் அதன் அளவு ஆகியவை சம்பந்தப்பட்ட ஊர், இடம், திசை, கோவில் அமைப்பு மற்றும் அளவுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து ஆன்மிக பெரியோர்களால் முடிவு செய்யப்பட்டு மக்களது நன்மைக்காக அமைக்கப்படுவது ஐதீகம். அந்த அமைப்பில் சனீஸ்வரர் சிலை பல இடங்களில் அதிகபட்சம் 3 அடிகளுக்குள் அமைக்கப்பட்டு வழிபாடுகள் செய்யப்படுகிறது.

ஆனால், சென்னை பெருநகரத்தின் மத்தியில் உள்ள ஆதம்பாக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள ஒரு கோவிலில் சனீஸ்வரர் ஆறரை அடி உயரத்தில் விஸ்வரூப சர்வமங்கள சனீஸ்வர பகவானாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளார். கலியின் கடுமையான பாதிப்புகளை தவிர்க்க வேண்டியே, தருமமிகு சென்னையின் மத்தியில் வழக்கத்தை விட அதிகமான உயரத்தில் சனீஸ்வரர் அருள்பாலிக்க எழுந்தருளி உள்ளதாக பலரும் எண்ணுகின்றனர்.

சுமார் நாற்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஆதம்பாக்கம் பகுதியில் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவில்தான் வீடுகள் இருந்தன. வீடுகளோடு ஒரு பாம்பு புற்றும் இருந்துள்ள நிலையில் அதற்கு மேற்புறத்தில் சிறிய கூரை அமைத்து பால் வைத்து வழிபாடுகள் செய்யப்பட்டு வந்தது. காலப்போக்கில் புற்றுக்கு மேல்புறத்தில் சிறிய சிலை அமைக்கப்பட்டு ‘ஸ்ரீதேவி நாகமுத்து மாரியம்மன்’ என்ற பெயர் கொண்ட கோவிலாக கட்டப்பட்டது. படிப்படியாக நவக்கிரகங்கள், ஐயப்பன், ஆஞ்சநேயர், தட்சிணாமூர்த்தி, துர்க்கை மற்றும் வைஷ்ணவி ஆகிய சிலைகளும் அமைத்து வழிபாடுகள் செய்யப்பட்டன.

கலியுகத்தில் ஆதிக்கம் செலுத்தும் கிரகங்களில் சனீஸ்வரருக்கே பிரதான இடம் என்ற சாஸ்திர அடிப்படையில் அவருக்கு விஷேசமான அமைப்பில் கோவிலை நிர்மாணிக்க நிர்வாகிகள் முடிவு செய்தனர். அதன் அடிப்படையில் துன்பங்களை அகற்றி நன்மைகளை அருளும் வடிவம் கொண்டதாக சர்வ மங்கள விஸ்வரூப சனீஸ்வரர் என்ற பெயரில் ஆறரை அடியில் சிலை அமைக்கப்பட்டு, அதன் கும்பாபிஷேகம் 1997-ம் ஆண்டில் நடைபெற்றது.

அந்த அளவு கொண்ட சிலையை ஒரே கல்லில்தான் அமைக்க வேண்டும். அதற்கான கல் தேர்வு, அளவுகள், பிம்ப லட்சணம், நிலை, அடிப்புற பீடம் போன்ற விஷயங்களை தீர்மானித்து முடிவெடுக்க கிட்டத்தட்ட ஒரு வருடத்துக்கு மேல் ஆகிவிட்டது. அதன் பிறகு சிலை வடிப்பதற்கும் ஒரு வருட காலம் ஆனது. சிலை கோவில் வளாகத்துக்கு கொண்டு வரப்பட்டு, ஒரு மண்டலம் ஜல வாசம், ஒரு மண்டலம் தானிய வாசம், ஒரு மண்டலம் ஸ்வர்ண வாசம் ஆகிய படி நிலைகளை கடந்த பிறகு அதன் ஆதார பீடத்தில் வைத்து கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.

நன்மைகளை அருளும் பிரமாண்ட வடிவமாக திகழ வேண்டும் என்ற நிலையில் சனீஸ்வரரின் சிலைக்கு அடியில், அதாவது மூலஸ்தானத்தின் மையத்தில் உள்ள ஆதார பீடத்திற்கு கீழ்ப்புறத்தில் சர்ம மங்கள எந்திரம் அமைக்கப்பட்டுள்ளது. கும்பாபிஷேகம் மூலம் உயிர் பெற்ற எந்திரங்கள் குறிப்பிட்ட காலம் வரை சக்தி பெற்றவையாக அமைந்து, அதன் மேற்புறத்தில் அமைக்கப்பட்டுள்ள சிலைகளின் மூலம் அருளை வழங்குகின்றன. அதன் காரணமாக அன்றாட பூஜைகள், மாதாந்திர மற்றும் வருடாந்திர பூஜைகள் முறையாக செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.

Next Story