வேதனைகளை மாற்றும் தேவன்


வேதனைகளை மாற்றும்  தேவன்
x
தினத்தந்தி 22 Dec 2017 12:45 AM GMT (Updated: 21 Dec 2017 8:18 AM GMT)

இயேசுவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள். சிறையிருப்பு என்றவுடனே நம் கண்களுக்கு முன்பாக வருவது சிறைச்சாலை கம்பிகள், சிறைச்சாலைக் கைதிகளே. பலவிதமான குற்றம் புரிவோரும் அவரவர் செய்த குற்றத்திற்கு தக்கதாக தண்டனை வழங்கப்பட்டு, சிறைச்சாலையில் அடைக்கப்படுகின்றனர்.

பிரியமான சகோதரனே! சகோதரியே! நம்முடைய வாழ்விலும் அநேக சிறையிருப்புகளில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கலாம். பலவிதமான போராட்டங்கள், வேதனைகள் நம்மை சிறைப்படுத்தி இருக்கலாம். இப்படிப்பட்ட சிறையிருப்புகளினின்று விடுதலையைத் தருபவர் நம் அருமை ஆண்டவர் ஒருவரே. நம்முடைய தேவன் நம்மை சிறையிருப்பிலிருந்து மாற்றும்பொழுது, நிச்சயமாகவே நம் வாழ்வில் சந்தோ‌ஷமும் மகிழ்ச்சியும் உண்டாகும்.

‘‘கர்த்தர் தம்முடைய ஜனத்தின் சிறையிருப்பைத் திருப்பும்போது, யாக்கோபுக்குக் களிப்பும், இஸ்ரவேலுக்கு மகிழ்ச்சியும் உண்டாகும்’’. சங்கீதம் 14:7

அன்பானவர்களே! நம் தேவன் எப்பொழுது? எப்படி? நம்முடைய சிறையிருப்பை மாற்றுவார்? என்பது குறித்து நாம் தியானிப்போம்.

பாவத்தை அறிக்கையிடும்போது விடுதலை

இஸ்ரவேல் ஜனங்களை எகிப்தின் சிறையிருப்பில் இருந்து தேவன் விடுவித்தார். அவர்களுக்கு அற்புதங்களையும் அதிசயங்  களையும் செய்து அவர்களை வழிநடத்தி, கானான் தேசத்தில் கொண்டு வந்து சேர்த்தார். ஆனால் இஸ்ரவேலரோ கர்த்தரை விட்டு விட்டு, அவருக்கு விரோதமாக பாவம் செய்தபோது, அவர்களை கர்த்தர் மீதியானியரின் கையில் சிறை கைதிகளாக ஒப்புக் கொடுத்தார். (நியாயாதிபதிகள் 6:1) அவர்கள் சிறையிருப்பிலே மிகவும் வேதனைப்பட்டார்கள்.

‘‘இப்படி மீதியானியராலே இஸ்ரவேலர் மிகவும் சிறுமைப்பட்டார்கள். அப்பொழுது இஸ்ரவேல் புத்திரர் கர்த்தரை நோக்கி முறையிட்டார்கள்’’. (நியாயாதிபதிகள் 6:6)

அவர்கள் கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, தங்கள் பாவத்தினால் வந்த தண்டனையை மாற்றும்படி ஜெபித்தபோது, கர்த்தர் அவர்களின் விண்ணப்பத்தைக் கேட்டு கிதியோன் என்னும் நியாயாதி    பதியை அனுப்பி அவர்களை விடுவித்தார்.

பிரியமானவர்களே! நம் வாழ்விலும் நாம் பாவம் செய்யும்போது, கர்த்தரை வேதனைப்படுத்தும்போது, கர்த்தர் நம்மை சிறையிருப்புக்குள்ளாக அனுமதிக்கிறார். நம்முடைய பாவத்தின் நிமித்தமாகவே நம் வாழ்வில் அநேக போராட்டங்கள் ஏற்படக்கூடும். இப்படி வேதனைகள் நம்மை வாட்டும்போது, நாம் புலம்பாமல், மனிதனை நாடி ஓடாமல், கர்த்தர் சமூகத்தில் விழுந்து நம்மை நாமே ஆராய்ந்து, நம் பாவத்தை அறிக்கையிட்டால், கர்த்தர் நம் சிறையிருப்பில் இருந்து விடுதலையைத் தந்து, நம்மை சந்தோ‌ஷப்படுத்துவார்.

இப்பொழுதே உங்கள் பாவங்களை அறிக்கையிடுங்கள். குடும்பத்தில் ஆசீர்வாதமும், மகிழ்ச்சியும் அளவில்லாமல் பொங்கும்.

வேத வசனத்திற்கு கீழ்ப்படியும்போது விடுதலை

‘‘உன் தேவனாகிய கர்த்தரிடத்துக்கே திரும்பி, இன்று நான் உனக்குக் கற்பிக்கும்படியெல்லாம், நீயும் உன் பிள்ளைகளும் உங்கள் முழு இருதயத்தோடும் உங்கள் முழுஆத்மாவோடும் அவருடைய சத்தத்திற்குச் செவிக்கொடுத்தால், உன் தேவனாகிய கர்த்தர் உன் சிறையிருப்பைத் திருப்பி, உனக்கு இரங்கி, உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிதற அடித்த எல்லா ஜனங்களிடத்திலும் இருக்கிற உன்னைத் திரும்பச் சேர்த்துக் கொள்வார்’’. (உபாகமம் 30:2,3)

அன்பான சகோதரனே! சகோதரியே! நம் வாழ்வில் காணப்படுகிற வேதனையாகிய சிறையிருப்புக்கு மற்றொரு காரணம், வேத வசனங்களுக்கு கீழ்ப்படியாததே ஆகும். கர்த்தர் நமக்குக் கொடுத்துள்ள ஒவ்வொரு கட்டளைக்கும் கீழ்ப்படிந்து, அதன்படி பரிசுத்தமாக நாம் வாழும்போது, நம் வாழ்விலே எப்படிப்பட்ட பிரச்சினைகள் வந்தாலும், அவற்றை எல்லாம் கர்த்தர் மாற்றுவார். நம்மை உயர்த்துவார். சந்தோ‌ஷத்தினாலும், சமாதானத்தினாலும் நிரப்புவார்.

எனவே, அன்பானவர்களே! இன்றே வேத வசனங்களை ஆவலோடு வாசியுங்கள். அதை தியானியுங்கள். அதன்படி வாழ உங்களை ஒப்புக் கொடுங்கள். கர்த்தர் உங்கள் குடும்பத்தில் உள்ள எல்லா சிறையிருப்புகளையும் மாற்றுவார்.

மற்றவர்களுக்காக ஜெபிக்கும்போது விடுதலை


‘‘யோபு தன் சிநேகிதருக்காக வேண்டுதல் செய்தபோது, கர்த்தர் அவன் சிறையிருப்பை மாற்றினார். யோபுக்கு முன் இருந்த எல்லாவற்றைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்க் கர்த்தர் அவனுக்குத் தந்தருளினார்’’. (யோபு 42:10)

யோபுவின் வாழ்வில் மிகப்பெரிய போராட்டம் ஏற்பட்டது. வேதனையான ஒரு சிறையிருப்புக்குள்ளே அவன் தள்ளப்பட்டான். அவனுடைய பிள்ளைகளையும், அவனுடைய உடைமைகளையும், சொத்துகளையும் இழந்தான். அது மாத்திரமல்ல, அவனது சரீரத்திலே தீராத வியாதியையும் பிசாசு கொண்டு வந்தான். ஆனாலும் யோபு முணுமுணுக்கவில்லை, தூஷிக்கவில்லை. மேலும், தன்னுடைய சிநேகிதர்களுக்காக தேவனிடம் ஜெபித்தான். கர்த்தர் அவன் ஜெபத்தைக் கேட்டு யோபுவின் சிறையிருப்பை மாற்றினார். அவன் இழந்த அனைத்தையும் இரட்டிப்பாக பெற்றுக்கொண்டான்.

பிரியமானவர்களே! நம் வாழ்வில் உள்ள சிறையிருப்பு மாற வேண்டுமானால், நாம் மற்றவர்களுக்காக ஜெபிக்க வேண்டும். நம் குடும்பத்தினரின் இரட்சிப்பிற்காக, அருகில் வசிப்பவர்களுக்காக, நமக்குத் தெரிந்த ஊழியர்களுக்காக ஜெபிக்க, ஜெபிக்க நம்முடைய பிரச்சினைகளை கர்த்தர் மாற்றிப் போடுவார். நம் வாழ்வில் மகிழ்ச்சியும் களிப்பும் உண்டாகும் என்பதில் சந்தேகமில்லை.

‘‘கர்த்தாவே, தெற்கத்தி வெள்ளங்களைத்திருப்புவதுபோல,     எங்கள் சிறையிருப்பைத் திருப்பும்’’. (சங்.126:4)

சகோதரி கிறிஸ்டினா ராபின்சன், ‘இயேசு சந்திக்கிறார் ஊழியங்கள்’, சென்னை–54

Next Story