அண்டை வீட்டாரிடம் அன்பு


அண்டை வீட்டாரிடம் அன்பு
x
தினத்தந்தி 26 Dec 2017 7:24 AM GMT (Updated: 26 Dec 2017 7:24 AM GMT)

நல்ல வீடும், நல்ல வாகனமும் இருந்தால் மட்டும் போதாது. நல்ல அண்டை வீட்டுக்காரரும் அமைதியான வாழ்விற்கு அவசியம் தேவை. எனவே நாமும் நல்ல அண்டை வீட்டுக்காரர்களாக வாழ்வோம்.

ருமுறை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஒருவர், தனது அண்டை வீட்டார் தனக்குத் தொல்லை தருவதாக முறையீடு செய்தார். ‘பொறுமையாக இருங்கள்’ என்று கூறி அவரை அனுப்பி வைத்தார்கள். நபிகளாரின் அறிவுரைக்கேற்ப அவர் பொறுமை காத்தார். ஆனால் தொல்லை தொடரவே செய்தது. அவர் மீண்டும் நபிகளாரிடம் முறையிட்டார். பொறுமையாக இருக்கும்படி அவருக்கு மீண்டும் அறிவுரை வழங்கினார்கள். இவ்வாறு பலமுறை அவர் முறையீடு செய்த வேளைகளில் பொறுமை காக்கும்படியே கூறி வந்தார்கள். இறுதியில் அவர், ‘இறைத்தூதர் அவர்களே! தொல்லை அதிகரித்துக் கொண்டே போகிறதே ஒழிய குறைந்த மாதிரி தெரியவில்லையே’ என்றார்.

‘தோழரே! அப்படியானால் உன்னுடைய வீட்டில் உள்ள பொருட்களையெல்லாம் வெளியே எடுத்துப் போட்டு தெருவில் அமர்ந்து கொள்’ என்று நபிகளார் கூறினார்கள். அவரும் அவ்வாறே செய்தார்.

வருவோர் போவோரெல்லாம் என்னவென்று விசாரிக்கத் தொடங்கினார்கள். அவர் நடந்தவற்றைச் சொன்னார். அதனைக் கேட்ட மக்கள், அவருக்குத் தொல்லை கொடுத்த அந்த நபரை ஏசவும், சபிக்கவும் செய்தார்கள். இதைக் கேட்ட அந்த நபர் நபிகளாரிடம் ஓடோடிச் சென்று நடந்ததைச் சொல்கிறார். அவர் தனது அண்டை வீட்டாருக்குக் கொடுத்த தொல்லைகளை நபிகளார் கண்டித்தார்கள். ‘அண்டை வீட்டினரிடம் நீ நடந்து கொண்ட முறை கண்டு மக்கள் சபிக்குமுன் இறைவனும் உன்னைச் சபிக்கிறான்’ என்று கூறினார்கள்.

உடனே அவர், ‘இறைத்தூதர் அவர்களே! இனி ஒருபோதும் நான் அண்டை வீட்டினருக்கு நோவினை செய்ய மாட்டேன்’ என்றார்.

பாதிக்கப்பட்ட மனிதரை நபிகளார் அழைத்து, ‘பொருட்களை உள்ளே எடுத்து வை. இதுவே அவருக்குப் போதுமானது. உனக்கு அவருடைய தொந்தரவு இருக்காது’ என்று கூறினார்கள். (நூல்: பைஹகீ 8924)

பொதுவாகவே அண்டை வீட்டாரிடம் இருந்து பிரச்சினைகள் வந்தால் நாம் அதனை ஒரு கவுரவப் பிரச்சினையாக எடுத்துக் கொண்டு சண்டைக்குத் தயாராகி விடுகிறோம். வாக்குவாதத்தில் ஈடுபடுகிறோம். தொல்லை தந்த அவருக்கு நாமும் தொல்லை தர ஆரம்பிக்கிறோம். இது நிரந்தரப் பகையாக மாற அமைதியை இழந்து விடுகிறோம். சில வேளைகளில் பிரச்சினை முற்றிப் போய் காவல்துறை, நீதிமன்றம் என்று அலைய ஆரம்பித்து விடுகிறோம். இதற்கு மாற்றாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய நடைமுறையைச் செய்து பார்க்கலாமே!

நபிகளார் கூறியது போல் முதலில் பொறுமையாக இருந்து பிரச்சினையைத் தீர்க்க பார்க்கலாம். பல சமயங்களில் பொறுமை பலன் அளிப்பதை நாம் பார்க்கிறோம். பொறுமை இழந்து ஏட்டிக்குப் போட்டியாக நாமும் செயல்களில் இறங்கி விடும்போது நிலைமை இறுக்கமாக மாறி விடுகிறது. எனவே முதலில் பொறுமையை மேற்கொள்வோம்.

பொறுமை பலன் அளிக்காவிடில் பிரச்சினையை மக்களின் கவனத்திற்குக் கொண்டு வரலாம். மக்கள் தலையிட்டு அதற்குத் தீர்வு தரலாம். பொதுவாக பலர் மறைவில் தவறுகளைச் செய்வார்கள். ஆனால் அது எவருக்கும் தெரிந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். இத்தகையோரை வழிக்கு கொண்டு வர பிரச்சினைகளை மக்கள் மன்றத்திற்கு எடுத்துச் செல்வதே சிறந்த வழியாகும். இறைவனுக்கு அஞ்சாவிட்டாலும், சமூகத்திற்கு அஞ்சியாவது தம்மை மாற்றிக் கொள்வார்கள். இதனையே மேற்கண்ட நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.

அண்டை வீட்டினரால் ஏற்படும் பிரச்சினைகளை தீர்க்க இது ஒன்றுதான் வழியென்பது இல்லை. தீமைக்குப் பதிலாக நன்மை செய்யுங்கள். அவ்வாறு செய்தால் உங்கள் பகைவர்களும் உற்ற நண்பர்களாக ஆகி விடுவார்கள். ‘(நபியே!) நன்மையும், தீமையும் சமமாகாது. மிகச் சிறந்த நன்மையைக் கொண்டு நீர் தீமையைத் தடுப்பீராக. அப்போது உம்முடன் கடும் பகைமை கொண்டிருந்தவர்கள்கூட உற்ற நண்பராய் ஆகி விடுவதைக் காண்பீர்’ (41:34) என்று குர்ஆனில் இறைவன் கூறுகின்றான். நாமாகவே அவரிடம் வலியச் சென்று உரையாடுவது, பரிசுகள் கொடுப்பது ஆகியவற்றின் மூலம் உறவுகளைச் சரி செய்யலாம். சில வேளைகளில் இருவருக்கும் தெரிந்த நபர்கள் மூலம் சமரச முயற்சிகளை மேற்கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஓர் இறை நம்பிக்கையாளரின் தேவையானவை மூன்று. 1. விசாலமான வீடு 2. நல்ல அண்டை வீட்டுக்காரர் 3. நல்ல வாகனம் (நூல்: அஹமத்)

நல்ல வீடும், நல்ல வாகனமும் இருந்தால் மட்டும் போதாது. நல்ல அண்டை வீட்டுக்காரரும் அமைதியான வாழ்விற்கு அவசியம் தேவை. எனவே நாமும் நல்ல அண்டை வீட்டுக்காரர்களாக வாழ்வோம்.

பொய் சொல்லக் கூடாது

நம்மில் பலர் குழந்தைகளிடம் பொய் சொல்வதைத் தவறு என்று எண்ணுவதில்லை. அடம் பிடிக்கும் குழந்தை, அழுது புரளும் குழந்தைகளைச் சமாளிக்க அப்போதைக்கு ஒரு பொய்யைச் சொல்லி அடக்கி வைக்கிறார்கள். ‘உனக்கு அதை வாங்கித் தருவேன்; இங்கே அழைத்துப் போவேன்’ என்று பொய் சொல்வார்கள். பின்னர் குழந்தைகளுக்குக் கொடுத்த வாக்குறுதியை மறந்து விடுவார்கள். ஆனால் குழந்தைகளோ அந்த வாக்குறுதிகளை மறப்பதில்லை. வாக்குறுதி நிறைவேற்றப்படுவதை ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். நிறைவேற்றப்படாதபோது ஏமாற்றமும், விரக்தியும் அடைகின்றனர். இதனால் பெற்றோர்களின் மீதுள்ள மரியாதையும் குறைகிறது.

குழந்தைகளிடம் மட்டுமல்ல, எந்த நிலையிலும் யாரிடமும் பொய் சொல்லக் கூடாது என்று இஸ்லாம் வலியுறுத்துகிறது.

தோழர்களிடம் நபிகள் நாயகம் நகைச்சுவையாகப் பேசுவதுண்டு. ‘ஒரு இறைத்தூதர் நகைச்சுவையாகப் பேசலாமா?’ என்று வினவியபோது, ‘நான் பிறரைச் சிரிக்க வைப்பதற்காக ஒருபோதும் பொய் உரைத்ததில்லை’ என்று பதில் அளித்தார்கள். ‘வேடிக்கையாக பேசும்போதும், பொய் பேசுவதைக் கை விட்டவனுக்கு சொர்க்கத்தின் நடுவில் ஒரு வீட்டைக் கட்டித் தர நான் பொறுப்பேற்கிறேன்’ என்று நபிகள் நாயகம் கூறினார்கள். (நூல்லபூ தாவூத்)

குழந்தைகளிடமும் பொய் சொல்ல வேண்டாம்.

சம்பிரதாயத்திற்காகவும் பொய் சொல்ல வேண்டாம்.

பிறரைச் சிரிக்க வைப்பதற்காகவும் பொய் சொல்ல வேண்டாம்.

வாய்மையே என்றும் வெற்றி பெறும்.

-டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மத். 

Next Story