நம்பிக்கை அவசியம்


நம்பிக்கை அவசியம்
x
தினத்தந்தி 26 Dec 2017 7:28 AM GMT (Updated: 26 Dec 2017 7:28 AM GMT)

அவர்களுடைய நம்பிக்கையையும், விசுவாசத்தையும் கண்ட இயேசு பிரான், அந்த ஆளைப் பார்த்து, “உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்று கூறினார்.

புனித லூக்காவின் நற்செய்தியைப் படிப்பதில், வழக்கம் போல் ஆர்வம் கொள்ளும் நாம், இந்த நற்செய்தியையும் ஆர்வத்துடன் படிப்போம். தெளிவடைவோம்.

அக்காலத்தில் இயேசு பிரான், கற்பித்துக் கொண்டிருந்தபோது, கலிலேயா, யூதேயா பகுதிகளில் உள்ள ஊர்களில் இருந்தும், எருசலேமில் இருந்தும் வந்திருந்த பரிசேயரும், திருச்சட்ட ஆசிரியர்களும் அங்கு அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

நோயைப் போக்குவதற்கான ஆண்டவரின் வல்லமையை அவர் கொண்டிருந்தார். அப்பொழுது சில பேர், முடக்கு வாதத்தில் அவதிப்பட்டுக் கொண்டிருந்த ஒருவரைக் கட்டிலோடு சுமந்து கொண்டு வந்தனர். அவரைக் கூட்டத்திற்குள் கொண்டு போய், இயேசு பிரானின் முன் வைப்பதற்கு வழியைத் தேடினர். மக்கள் அதிகமாகத் திரண்டிருந்ததால், அவரை உள்ளே கொண்டு போக அவர்களால் முடியவில்லை.

எனவே கூரை மேல் ஏறினார்கள். ஓடுகளைப் பிரித்து, அந்த வழியாக மக்களின் நடுவில், அவரைக் கட்டிலோடு, அவருக்கு முன் இறக்கி வைத்தார்கள்.

அவர்களுடைய நம்பிக்கையையும், விசுவாசத்தையும் கண்ட இயேசு பிரான், அந்த ஆளைப் பார்த்து, “உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்று கூறினார்.

இதைக் கேட்ட மறை நூல் அறிஞர்களும், பரிசேயர்களும், ‘கடவுளைப் பழித்துரைக்கும் இவன் யார்? கடவுள் ஒருவரைத் தவிர, பாவங்களை மன்னிக்க யாரால் முடியும்?’ என்று தங்களுக்குள்ளே எண்ணிக் கொண்டனர். அவர்களுடைய எண்ணத்தை உணர்ந்து கொண்ட இயேசு பிரான், அவர்களை நோக்கி, “உங்கள் உள்ளங்களில் நீங்கள் எண்ணுகிறது என்ன? உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்பதா? அல்லது எழுந்து நட என்பதா? எது எளிமையானது? மண்ணுலகத்தில் பாவங்களை மன்னிக்க, மானிட மகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டும்” என்று கூறினார்.

உடனே அவர் முடக்கு வாதம் உள்ளவரை நோக்கி, “நான் உமக்குச் சொல்கிறேன். நீர் எழுந்து, உம்முடைய கட்டிலைத் தூக்கிக் கொண்டு உமது இல்லத்துக்குப் போம்” என்றார்.

உடனே அந்த முடக்குவாதக்காரர், அவர்களின் முன்பாக எழுந்து, தான் படுத்திருந்த கட்டிலைத் தூக்கிக் கொண்டு, இறைவனைப் போற்றிப் புகழ்ந்து கொண்டே, தனது இல்லத்திற்குப் போனார். இதை நேரே பார்த்த அனைவரும், தங்களை மறந்தவர்களாய் வியப்படைந்து, இறைவனைப் போற்றிப் புகழ்ந்தனர். அவர்கள் அனைவரும் பயம் அடைந்தவர்களாய், ‘இன்று புதுமையானவற்றைக் கண்டோம்’ என்று பேசிக் கொண்டனர்.

இந்த நற்செய்தியில் இருந்து நாம் அறிந்து கொள்ள வேண்டியது என்ன? நம்பிக்கை மனிதனுக்கு அவசியம் என்பதை வெளிப்படுத்துகிறார். முடக்குவாதக்காரர் நலம் பெற்று, இல்லம் திரும்பி விடுவார் என்ற நம்பிக்கை, அவரைத் தூக்கி வந்தவர்களுக்கு இருந்தது.

மிகுந்த துன்பத்தோடு, கூட்டத்தினருக்கு மத்தியில், அவரைத் தூக்கிக் கொண்டு செல்ல முடியாமல், கூரையைப் பிய்த்து, கீழே இறக்கி வைக்கின்றனர். கூரையைப் பிரித்து இறக்கி வைக்கும் அளவுக்கு நம்பிக்கை மேலோங்கியது.

இயேசு பெருமகனாரைக் கடவுளின் மகன் என்று அறியாதவர்களாக, மறைநூல் அறிஞர்களும், பரிசேயர்களும் இருந்தனர். இதனால், ‘உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்ற வார்த்தைகளை, அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதற்காகத்தான், இயேசு பெருமான் இப்படியொரு வினாவைத் தொடுக்கிறார். ‘உங்கள் உள்ளங்களில், நீங்கள் எண்ணுவது என்ன? உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்பதா? எழுந்து நட என்பதா? எது எளிமையானது’ என்ற வினாவைத் தொடுத்து சிந்திக்க வைக்கிறார்.

‘மன்னுலகில் பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் மானுட மகனுக்கு உண்டு என்பதை அறிந்து கொள்ள வேண்டும்’ என்று கூறுகிறார். இதைக் கட்டளையாகவே பிறப்பிக்கிறார்.

இறைவன் மனிதனாகப் பிறந்தார் என்ற தத்துவம் சொல்லப்பட்டாலும், அவரைப் போல, நாமும் பிறரை மன்னிக்க தயாராக இருக்க வேண்டும் என்ற கருத்தும் இங்கு புலப்படுகிறது.

அவரைக் குணப்படுத்துமுன், அவர் சொல்கிற முதல் வார்த்தை, உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன என்பதுதான். ஆம்! குணம் பெறும் செயலை விட, பாவத்தை மன்னிப்பது கடினமான ஒன்று. ஆகவே அவர் அக்கேள்வியை அவர்களிடம் கேட்கிறார்.

நம்முடைய காலத்தில் வாழ்ந்த காந்தியடிகள்கூட ஓர் இடத்தில் குறிப்பிடுவதை, இவ்விடத்தில் கவனிக்கலாம்.

‘மன்னிப்புக் கேட்பது எளிது;
மன்னிப்புக் கொடுப்பது கடினம்’ என்று கூறுவார்.

இயேசு பெருமகனாரைப் பொறுத்தவரை, கட்டளையிடும் சில இடங்களில் இதுவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. ஆகவே, ‘உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன. உமக்கு நான் சொல்கிறேன், நீர் எழுந்து, உமது கட்டிலைத் தூக்கிக் கொண்டு, உமது இல்லத்துக்குப் போம்’ என்று கட்டளையிடுகிறார். ஒரே நேரத்தில் இரு செயல்கள் நடக்கின்றன. முதலில் அவரை ஏற்கத் தயங்கியவர்கள், இறுதியில் இறைவனைப் போற்றினர்; புகழ்ந்தனர். முடக்குவாதக்காரரும் நலம் பெற்றார்.

நம்பிக்கையும், விடாமுயற்சியும் ஒருவரை எல்லா வகையிலும் குணப்படுத்தி விடும் என்பதற்கு இதுவே ஒரு சான்று. மன்னிப்புப் பெற்றதால் உள்ளமும் நலம் பெற்று, உடலும் நலம் அடைந்து முடக்குவாதக்காரரை முழு மனிதனாக்கி விட்டது.

ஆகவே நாமும் நம்பிக்கையோடும், விடாமுயற்சியோடும் செயல்படுவோம்.

Next Story