கடவுள் துகளும், பிரபஞ்ச ரகசியமும்


கடவுள் துகளும், பிரபஞ்ச ரகசியமும்
x
தினத்தந்தி 26 Dec 2017 7:50 AM GMT (Updated: 26 Dec 2017 7:50 AM GMT)

கடவுள் துகளை கண்டறியும் முயற்சியில் ஜோ இன்கண்டேலா என்ற பிரபல அணு விஞ்ஞானி தலைமையில், இரண்டு விஞ்ஞானிகள் குழு தொடர்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது.

பொதுவாக, பேச்சு வழக்கில் ‘அது என்ன பிரபஞ்ச ரகசியமா..?’ என்ற கேள்வி அவ்வப்போது பலரால் கேட்கப்படுவது வழக்கம். பிரபஞ்சம் உருவான விதம் பெரிய ரகசியமாகவே இருந்து வருகிறது. கடவுள் பிரபஞ்சத்தை படைத்தார் என்று ஆன்மிகம் குறிப்பிடுகிறது. ஆனால், அறிவியலோ உலகம் மொத்தமும் அணுக்களால் ஆனது என்று உறுதியாக எடுத்துக் காட்டுகிறது.

பல்லாயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்பு ‘பிக்பாங்க்’ என்ற பெரு வெடிப்பின்போது பல்வேறு வாயுக்கள் உருவாகின. பின்னர், அதில் உள்ள அணுக்கள் ஒன்றிணைந்து பிரபஞ்சமும், அதில் உள்ள மற்ற பொருட்களும் உருவானதாக அறிவியல் கூறுகிறது. அணு என்பது எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் என்ற 3 உட்பொருட்களின் சேர்க்கை ஆகும். அந்த அணுக்களின் கூட்டமைப்புதான் வெவ்வேறு விதங்களில் திடப்பொருட்களாக உருவாகி இருக்கின்றன. பூமியில் நம்மை சுற்றி உள்ள நம்மை சுற்றிலும் இருக்கும் அனைத்து பொருட்களும் அணுக்களின் கூட்டமைப்பில் உருவானவை.

அனைத்து பொருட்களும் ஒன்றிணைந்த இந்த பிரபஞ்சமும் அடிப்படை அமைப்பில் அணுக்களின் சேர்க்கைதான். அந்த அணுக்களை ஒன்றாக இணைக்கும் ஒட்டுப்பொருள் எது..? என்ற கேள்விக்கு பதில் தெரியாமல் இருந்தது. அணுக்களை ஒன்றோடு ஒன்று இணைய வைக்கும் பொருளை கண்டுபிடித்தால், பிரபஞ்சம் உருவான ரகசியத்தையும் அறிந்துகொள்ள முடியும் என்று விஞ்ஞானிகள் நம்பினார்கள். அதை கண்டுபிடிக்க ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டார்கள்.

பெரு வெடிப்பின்போது ஏற்பட்ட சூழலை செயற்கையாக உண்டாக்கும் பட்சத்தில் அணுக்களை இணைக்கும் ஒட்டுப்பொருள் எது..? என்பதை கண்டுபிடிக்க முடியும் என்று விஞ்ஞானிகள் முடிவு செய்தனர். அதற்காக அணுக்களை ஒன்றோடு ஒன்று மோதவிட்டு சோதனைகளை மேற்கொள்ள முடிவு செய்து அதற்காக பிரான்ஸ் மற்றும் சுவிட்சர்லாந்து நாடுகளுக்கு இடையே 574 அடி ஆழத்தில் 27 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சுரங்கப்பாதை போன்று ‘செர்ன்’ என்ற பெயரில் (அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய மையம்) ஆராய்ச்சிக்கூடத்தை அமைத்து, உலகப்புகழ் பெற்ற விஞ்ஞானிகள் ஒன்று சேர்ந்து ஆராய்ச்சிகளை செய்து வந்தனர். அதில், 2400 முழுநேர ஆராய்ச்சி பணியாளர்கள், 608 பல்கலைக்கழகங்கள் மற்றும் ஆராய்ச்சி மையங்களில் பணியாற்றும் 113 நாடுகளை சேர்ந்த 7931 அறிவியல் அறிஞர்கள் பணியாற்றி வருகின்றனர்.

அவர்களது ஆராய்ச்சி முடிவில் அணுக்களின் ஒட்டுப்பொருளானது 12 துகள்களின் சேர்க்கை என தெரியவந்தது. அதில் 11 துகள்கள் கண்டறியப்பட்டன. 12-வது துகளை விஞ்ஞானி ஹிக்ஸ், 1964-ம் ஆண்டு கண்டுபிடித்தார். அது ‘ஹிக்ஸ் பாசன்’ துகள் என்றும், ‘கடவுள் துகள்’ (காட்ஸ் பார்ட்டிகிள்) என்றும் குறிப்பிடப்படுகிறது.

கடவுள் துகளை கண்டறியும் முயற்சியில் ஜோ இன்கண்டேலா என்ற பிரபல அணு விஞ்ஞானி தலைமையில், இரண்டு விஞ்ஞானிகள் குழு தொடர்ந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தது. ஆராய்ச்சி முடிவில் கடவுள் துகள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. அதே நேரத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது ‘ஹிக்ஸ் பாசன்’ துகள் என்று சொல்லப்படும் கடவுள் துகள்தானா..? என்பதை உறுதி செய்யும் அடுத்த கட்ட ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

Next Story