துர்வாச முனிவரை துரத்திய சக்ராயுதம்
தன்னுடைய சுதர்சன சக்ரத்தையே, மன்னனின் அரண்மனையில் வைத்துவிட்டார் திருமால். அந்த சக்கரத்தின் சக்தியால் நாட்டில் எந்த பிரச்சினையும் இல்லை.
அம்பரீஷன் என்ற மன்னன், அனுதினமும் மகாவிஷ்ணுவின் நினைவிலேயே இருந்து வந்தான். இறைவனின் கீர்த்தனைகளைக் கேட்பதிலும், அவன் நாமங்களைச் சொல்வதிலும் அவன் கவனம் இருந்தது. நாட்டை ஆள்வதில் அதிகமாக கவனம் செலுத்தவில்லை.
மன்னனின் பக்தியை உணர்ந்த மகாவிஷ்ணு, நம் மீதுள்ள பக்தியால் மன்னன் நாட்டையும், நாட்டு மக்களையும் கவனிக்கத் தவறிவிடுகிறானே என்ற எண்ணம் கொண்டார். மன்னன் இப்படியே தொடர்ந்தால், நாட்டின் நிலை மோசமாகிவிடும் என்பதற்காக, தன்னுடைய சுதர்சன சக்ரத்தையே, மன்னனின் அரண்மனையில் வைத்துவிட்டார் திருமால். அந்த சக்கரத்தின் சக்தியால் நாட்டில் எந்த பிரச்சினையும் இல்லை.
மன்னனும் இறைவனின் நாமத்தைப் பாடுவதிலேயே கவனம் செலுத்தத் தொடங்கினான். ஒரு முறை ஏகாதசி விரதம் இருக்க முடிவு செய்தான் அம்பரீஷன். யமுனை நதிக்கரையோரம் ஒரு குடில் அமைத்து, அங்கேயே ஓராண்டு காலம் இருந்து ஏகாதசி விரதத்தை மேற்கொள்ளப் போவதாக அறிவித்தான். அதன்படி ஓராண்டு காலம், ஒவ்வொரு மாதமும் வரும் ஏகாதசிகளில் விரதம் அனுஷ்டித்து வந்தான்.
அந்த வருஷத்தின் கடைசி ஏகாதசி வந்தது. வழக்கம்போல் எல்லோருக்கும் போஜனம் செய்வித்து தானங்களை வழங்கி முடித்தான் அம்பரீஷன். அவனும் அவனுடைய மனைவியும் சாப்பிடவேண்டும்.
அந்த நேரத்தில் துர்வாச முனிவர் அங்கு வந்து சேர்ந்தார். அவரை வணங்கிய அம்பரீஷன், ‘முனிவரே! தாங்கள் உணவருந்தி, எங்களுக்கும் பிரசாதத்தை வழங்க வேண்டும்’ என்றான்.
துர்வாசரோ, ‘நீராடி விட்டு வருகிறேன்’ என்று எழுந்து நடக்கத் தொடங்கினார். ஏகாதசி விரதத்தை முடிப்பதற்கு அரை நாழிகைதான் மீதம் இருக்கிறது. ஆனால் துர்வாசரோ, வேண்டுமென்றே மெதுவாக நடந்து சென்று அம்பரீஷனை சோதித்தார்.
ஏகாதசி விரத காலம் முடியும் நிலை வந்து விட்டது. ஆனாலும் நீராடச் சென்ற துர்வாச முனிவரைக் காணவில்லை. காலம் கடந்து விட்டால், ஓராண்டு காலமாக கடைப்பிடித்து வந்த விரதம் அனைத்தும் வீண் என்று உணர்ந்த அம்பரீஷன், இதுபற்றி அங்கிருந்து பெரியவர்களிடம் கேட்டான்.
‘நீரில் ஒரு துளசி இலையை போட்டு, உட்கொள்ளுங்கள். அது சாப்பிட்ட மாதிரியும் கணக்கு; சாப்பிடாத மாதிரியும் கணக்கு. எனவே துவாதசி முடிவதற்குள் இதனை செய்யுங்கள்’ என்றனர்.
அம்பரீஷனும் அப்படியேச் செய்தான். ஆனால் அவன் துளசியை சாப்பிட்டது துர்வாசருக்குத் தெரிந்து விட்டது.
‘என்னுடன் அமர்ந்து உணவருந்துவதாகச் சொல்லிவிட்டு, இப்போது என்ன செய்திருக்கிறாய்? உனக்கு எவ்வளவு அகங்காரம்?’ என்றவர், தன் ஜடா முடியில் இருந்து ஒரு முடியை எடுத்துப் போட்டார். அதில் இருந்து புறப்பட்ட பூதம், அம்பரீஷனையும், அவனது குடும்பத்தையும் அழிக்க முற்பட்டது.
ஆனால் அம்பரீஷனின் பூஜை அறையில் இருந்த சுதர்சன சக்கரம் அங்கு வந்து, பூதத்தை வதம் செய்தது. பின்னர் அது துர்வாசரின் பக்கம் திரும்ப, அவர் தன்னை காத்துக் கொள்ள ஒவ்வொரு இடமாக ஓடி ஒளிந்தார். முதலில் பிரம்மனிடமும், பின்னர் சிவனிடமும் சென்று தஞ்சம் அடைந்தார். ஆனால் அவர்கள் இருவரும் கைவிரித்து விட, சுதர்சன சக்கரத்தை கையில் வைத்திருக்கும் திருமாலிடம் சென்றார்.
திருமாலோ, ‘துர்வாசரே! என் பக்தர்கள்தான் என்னுடைய எஜமானர்கள். அவர்களுக்குப் பிரச்சினை என்றால், அவர்களுக்காக நான் எதையும் செய்வேன். நீங்கள் உங்களைக் காத்துக் கொள்ள வேண்டுமென்றால், அம்பரீஷனையே சரணடையுங்கள்’ என்று சொல்லிவிட்டார்.
வேறு வழியில்லாமல் துர்வாசரும், அம்பரீஷனிடம் வந்தார். அதன் பிறகே சுதர்சனச் சக்கரம் தன்னுடைய ஆக்ரோஷ நிலையை கைவிட்டது. அம்பரீஷனின் இந்த உயரிய நிலைக்கு, அவனது ஏகாதசி விரதமே காரணம்.
Related Tags :
Next Story