ஆன்மிகம்

கிறிஸ்தவம் : உண்மையும் நேர்மையும் + "||" + Christianity: Faithfulness and honesty

கிறிஸ்தவம் : உண்மையும் நேர்மையும்

கிறிஸ்தவம் :  உண்மையும் நேர்மையும்
அக்காலத்தில், குறுநில மன்னனாக இருந்த ஏரோது என்பவன், இயேசு பெருமானைப் பற்றிய செய்தியைக் கேள்விப்பட்டிருந்தான். அவன் தன் ஊழியர்களைப் பார்த்து, இப்படிக் கூறினான்:
- செம்பை சேவியர்.

“இவர் திருமுழுக்கு யோவான் தான். இறைந்து போன யோவானைக் கடவுள் உயிர் பெற்று எழச் செய்திருக்கிறார். இதனால்தான், இப்படிப்பட்ட வல்ல செயல்களை, இவர் செய்து கொண்டிருக் கிறார்” என்று கூறினான்.

ஏரோது என்ற அந்தச் சிற்றரசன், தன் சகோதரன் பிலிப்புவின் மனைவியாகிய ஏரோதியாளை வைத்திருந்தான். திருமுழுக்கு யோவான், அவனிடம், “நீ உன் சகோதரன் பிலிப்புவின் மனைவியை வைத்திருப்பது முறையல்ல” என்று கூறினார். இதனால் ஏரோது, யோவானைக் கொலை செய்ய எண்ணினான். ஆகவே அவரைப் பிடித்துக் கட்டிச் சிறையில் அடைத்திருந்தான்.

மக்கள் கூட்டமோ, இதை ஏற்றுக் கொள்ளவில்லை. இவர் இறைவாக்கினர் என்பதால், அவர்கள் விரும்பவில்லை. அவர் களுக்கு ஏரோது பயந்து கொண்டிருந்தான்.

ஏரோதின் பிறந்த நாளில், ஏரோதியாதியாளின் மகள், அவையினர் நடுவில் நடனம் ஆடி, ஏரோதை மகிழச் செய்தாள். அதனால், அவள் எதைக் கேட்டாலும் தருவதாக வாக் குறுதி அளித்திருந்தான். அவள் தன் தாயானவள் சொல்லிக் கொடுத்த படியே, “திருமுழுக்கு யோவானின் தலையை ஒரு தட்டில் வைத்து, இங்கேயே எனக்குக் கொடும்” என்று கேட்டாள். இதைக் கேட்ட ஏரோது அரசன் வருத்தமடைந்தான். ஆனாலும், தான் கொடுத்த வாக்குறுதிப்படி, அந்தத் தலையைக் கொடுக்கக் கட்டளையிட்டான். ஆளை அனுப்பிச் சிறையில் இருந்த, யோவானின் தலையை வெட்டச் செய்தான். அவரது தலையை ஒரு தட்டில் வைத்து கொண்டு வரச் செய்து, அதைச் சிறுமியிடம் கொடுத்தான். அவளும் அதைத் தன் தாயிடம் கொடுத்தாள். யோவானுடைய சீடர் கள், அங்கு வந்து அவரது உடலைப் பெற்றுச் சென்று அடக்கம் செய்தனர். பிறகு இந்த நிகழ்வை இயேசுவிடம் சென்று அறிவித்தனர்.

மத்தேயு எழுதிய இந்நற்செய்தியின் வாசகத்தை உற்றுக் கவனிப்போம். இறைவாக்கினர்கள், இறைவனுடைய வார்த்தைகளை, மக்களிடம் எடுத்து வைப்பதற்காகவும், அவர்களை நல்வழிப்படுத்தவும் இவ்வுலகிற்கு வந்தவர்கள். அந்த வழியில், இவ்வுலகிற்கு வந்தவர்தான், திருமுழுக்கு யோவான் என்பவர். அவருடைய போதனை, சாவுக்கும் அஞ்சாத போதனையாக இருந்தது என்பதற்கு, அவருடைய வாழ்க்கையே ஒரு சான்றாக அமைகிறது.

இவ்வுலகில் எவ்வளவு சக்தி வாய்ந்தவராக இருந்தாலும், இறைவன் முன் சமம் தான். தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களைத் திருத்துவதுதான், இறைவாக்கினர் களின் கடமை என் பதை உணர்ந்ததால்தான், ஏரோது செய்கின்ற தவறைச் சுட்டிக் காட்டுகிறார். என்ன விளைவுகள் ஏற்பட்டாலும், அதைப் பற்றிக் கவலைப்படவில்லை. நேர்மைக்குப்பங்கம் வரக்கூடாது என்பதில், திருமுழுக்கு யோவான் மிகவும் கவனமாக இருந்தார்.

அக்காலத்தில் இப்படிப்பட்ட செயல்கள், சர்வ சாதாரணம் என்றாலும், ஓர் அரசனே இப்படி நடந்து கொள்வது கூடாது என்பதை எடுத்துரைக் கிறார். பிறருக்கு எடுத்துக்காட்டாக வாழ வேண்டியவர்களே தவறு செய்தால், பிறரை எப்படி நல்வழிப் படுத்த முடியும் என்பதுதான் திருமுழுக்கு யோவானின் சிந்தனை.

ஏரோது அரசனை நோக்கி, ‘உன் சகோதரன் மனைவியை, நீ வைத்துக் கொள்வது முறையல்ல’ என்று கடிந்து கொள்கிறார். அதை ஏற்க மனமில்லாதவனாக அரசன் இருந்ததால், அவரைக் கொலை செய்ய எண்ணுகிறான். கொலையை உடனே செய்து விட முடியாததால், சிறையில் அடைத்து வைக்கிறான்.

இவன் எதிர்பாராமலேயே காம வெறியும், ஆசாபாசங்களும், அவனை ஆட்டிப் படைக்கிறது. ஏரோதியாள் உடந்தையாகிறாள். தன் ஆணைப்படியும், கொடுத்த வாக்கின்படியும் நடக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறான், ஏரோது.

‘காமம், வெகுளி, மயக்கம், இவை மூன்றும்

நாமம் கெடக்கெடும் நோய்’ என்ற வள்ளுவரின் வார்த்தைகளை வைத்து, அக்காலத்தை எண்ணிப் பார்க்கலாம். மேலே சொன்ன காமம், வெகுளி, மயக்கம் இம்மூன்றும் மனிதர்களைப் பாவக்குழியில் தள்ளுகிறது. கொலைக்கு அஞ்சாத தன்மையை உருவாக்குகிறது. ஏரோதியாளின் பொருட்டு, பரிசுத்தமானவரின் தலையையே வெட்டுகிற அளவுக்குத்துணிகிறான், ஏரோது என்ற அக்கொடிய அரசன்.

மத்தேயுவின் நற்செய்தியை ஒரு கணம் சிந்தித்துப் பார்ப்போம். எப்பொழுதுமே இறைவாக்கை அறிக்கையிட்டு, மக்களை நல்வழிப்படுத்த நினைப்பவர்கள், எதற்கும் அஞ்சக் கூடாது. இவ்வுலகில் நிலைத்து வாழக்கூடியவர்கள் யாரும் கிடையாது. என்றாவது ஒருநாள், இவ்வுலகை விட்டு மறையத்தான் வேண்டும்.

இப்படிப்பட்ட சூழலில், நற்செய்தியைக் கேட்டு நல்வழியில் நடந்தால் இவ்வுலகம் போற்றும். அதுமட்டுமல்ல, மறுவுலக வாழ்விலும் நற்கதி அடையலாம் என்பதே உண்மை என்பதை, இறைவாக்கினர் எடுத்துரைக்கின்றனர்.

நற்செய்தியை அறிவிக்க வேண்டும் என்று எண்ணுபவர்கள், எவராக இருந்தாலும், ஏழை பணக்காரன் என்று பிரித்துப் பார்க்கக் கூடாது. பெரும் பதவியில் இருக்கிறார்கள் என்பதற்காகப் பயந்து விடக்கூடாது. நல்ல கருத்தை, நேர்மையான போதனையால் எடுத்துரைக்க வேண்டும்.

இருப்பது ஒரு உயிர்; அது போவதும் ஒருமுறை. நல்லதற்காகப் போகட்டுமே என்று எண்ணிட வேண்டும்.

திருமுழுக்கு யோவானின் துணிச்சலை, நாம் பின்பற்ற வேண்டும். ஓர் அரசனின் தவறைச் சுட்டிக் காட்டும் அளவுக்கு, அவரது துணிச்சல் இருந்திருக்கிறது.

அந்தத் துணிவால் தன் உயிரையும் கொடுக்கிறார். தலையானது வெட்டப்பட்ட பிறகு ஏரோது மன்னன் பயப்படுகிறான்.

வந்திருக்கும் இயேசு பிரான், தன்னால் தலை துண்டிக்கப்பட்ட திருமுழுக்கு யோவான் என்று எண்ணுகிறான்.

‘இறந்துபோன யோவானை கடவுள், உயிர் பெற்று எழச் செய்திருக்கிறார். இதனால்தான், இப்படிப்பட்ட வல்ல செயல்களை இவர் செய்து கொண்டிருக்கிறார்’ என்று கூறுகிறான். அவரை விட வல்ல செயல்களைச் செய்யும் இயேசு பிரான் இவரே என்பதை உணரத் தோன்றவில்லை.

சுருக்கமாகச் சொன்னால், நேர்மையாளர்களை எதுவும் அழித்து விட முடியாது. உண்மையும், நேர்மையும் மனித வாழ்க்கைக்கு வழிகாட்டி என்பதை உணர வேண்டும். அன்பும், பண்பும் ஒருவரை உயர்த்தும். ஆகவே திருமுழுக்கு யோவானின் வாழ்க்கை நமக்கெல்லாம் ஒரு வழிகாட்டியாக அமையட்டும்.


ஆசிரியரின் தேர்வுகள்...