ஆன்மிகம்

நெல்லை மாவட்டத்தில் கோவில்களில் ஆருத்ரா தரிசனம் + "||" + In Nellai district Arutra darshan in temples

நெல்லை மாவட்டத்தில் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்

நெல்லை மாவட்டத்தில் கோவில்களில் ஆருத்ரா தரிசனம்
நெல்லை மாவட்டத்தில் உள்ள கோவில்களில் ஆருத்ரா தரிசனம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
நெல்லை,

நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரம் செப்பறை அழகிய கூத்தர் கோவிலில் திருவாதிரை திருவிழா 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவிலில் தினமும் சிறப்பு அபிஷேகம், சதுர்வேத பாராயணம், திருவெம்பாவை பாராயணம், நீராஞ்சன தீபாராதனை ஆகியவை நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் தேரோட்டம் நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருவாதிரை ஆருத்ரா தரிசனம் நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு அழகிய கூத்தருக்கு மகா அபிஷேகம், 4 மணிக்கு கோ பூஜை நடந்தது. தொடர்ந்து ஆருத்ரா நடன தரிசனமும், ஆருத்ரா தீபாராதனையும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர். மதியம் 1-30 மணிக்கு சிறப்பு நடன தீபாராதனை நடந்தது.

நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் உள்ள தாமிரசபையில் திருவாதிரை ஆருத்ரா திருநடன திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு கோவில் கும்பாபிஷேகம் நடத்துவதற்காக பாலாலயம் செய்யப்பட்டு, தாமிரசபையில் திருப்பணி நடந்து வருகிறது. இதனால் திருவாதிரை திருவிழா நடைபெறவில்லை. இருந்தாலும் நடராஜருக்கும், அம்பாளுக்கும் கோவில் உற்சவர் உள்ள இடத்தில் வைத்தே சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நெல்லை டவுன் சந்திபிள்ளையார் கோவிலில் உள்ள நடராஜர் சன்னதியில் நேற்று காலையில் திருவாதிரை ஆருத்ரா சிறப்பு நடன தீபாராதனை நடந்தது.

நெல்லை கொக்கிரகுளம் காசி விசுவநாதர் கோவிலிலும் திருவாதிரை திருவிழாவையொட்டி, நேற்று அதிகாலையில் ஆருத்ரா தரிசனம் நடந்தது. முன்னதாக கோபூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

இதே போல் நெல்லை சந்திப்பு சொக்கநாதர் கோவில், டவுன் தொண்டர் நயினார் கோவில், பாளையங்கோட்டை திரிபுராந்தீசுவரர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் ஆருத்ரா தரிசனம் நடந்தது.

சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவிலில் திருவாதிரை திருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகங்களும், ஆராதனைகளும், வீதிஉலாவும் நடைபெற்றது. 10-ம் திருநாளான நேற்று விழாவின் முக்கிய நிகழ்ச்சியான நடராஜர் ஆருத்ரா தரிசனம் நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு கோவில் நடைதிறக்கப்பட்டு 4.45 மணிக்கு கோபூஜையும், அதனை தொடர்ந்து 5 மணிக்கு ஆருத்ரா தரிசனம் கொடுக்கும் நிகழ்ச்சியும், தீபாராதனைகளும் நடைபெற்றது.

காலை 8 மணிக்கு சிவகாமி அம்பாள் சமேத நடராஜர் 63 நாயன்மார்களுக்கு ஆனந்த திருநடன காட்சி கொடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. அதனை தொடர்ந்து 8.45 மணிக்கு மாணிக்கவாசகர் மற்றும் முதல் மூவர் புறப்பாடும் அதனை தொடர்ந்து ஆனந்தநடராஜர் சப்பரத்தில் எழுந்தருளி வீதிஉலா நிகழ்ச்சி நடந்தது.

நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற தாசில்தார் நடராஜன், ஆறுமுகநயினார் சைவ மரபினர் மகமை பொதுசங்க செயலாளர் திருமலைக்குமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்திருந்தனர்.

பாபநாசம் உலகாம்பிகை சமேத பாபநாசநாதர் கோவிலில் நேற்று அதிகாலையில் 4.30 மணிக்கு நடராஜருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, ஆருத்ரா தரிசனத்தில் நடராஜர் எழுந்தருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். முன்னதாக கோமாதா பூஜை நடந்தது.

வாசுதேவநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் என்ற சிந்தாமணிநாதர் கோவிலிலும் ஆருத்ரா தரிசனம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் வாசுதேவநல்லூர் ராஜபழனி ஆண்டவர் கோவிலில் நேற்று அதிகாலை ஆருத்ரா தரிசனம் திருவாதிரை பூஜை நடந்தது. தொடர்ந்து மகேசுவர குருபூஜையும், திருவாதிரை பஜனை குழுவினரின் வீதிஉலாவும் நடந்தது. மதியம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.