ஆன்மிகம்

அருள்பாலிப்பவன் இறைவன் ஒருவன் தான் + "||" + God is one

அருள்பாலிப்பவன் இறைவன் ஒருவன் தான்

அருள்பாலிப்பவன் இறைவன் ஒருவன்  தான்
பல ஏற்ற தாழ்வுகள் நிறைந்தது தான் இந்த சமூகம். பணத்திலும், ஈகை குணத்திலும் மாறுபட்ட மனம் கொண்டவர்களாக மனிதர்கள் உள்ளனர்.
ல ஏற்ற தாழ்வுகள் நிறைந்தது தான் இந்த சமூகம். பணத்திலும், ஈகை குணத்திலும் மாறுபட்ட மனம் கொண்டவர்களாக மனிதர்கள் உள்ளனர். இருந்தாலும், அவை எல்லாம் குறிப்பிட்ட வர்களால் உணரப்படாமல் ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்கின்ற ஓர் உன்னத வாழ்வுமுறையை இறைவன் ஏற்படுத்தியுள்ளான்.

விவசாயி இல்லை என்றால் மனிதன் உணவுக்கு எங்கே செல்வான்? தொழிலாளி இல்லை என்றால் உபகரணங்களுக்கு எங்கே செல்வான்? உணவையோ, உபகரணத்தையோ வாங்குவதற்கு ஒருவன் இல்லை என்றால், விவசாயி, தொழிலாளி வாழ்வாதாரம் செழிப்பது எப்படி?. இவ்வாறு ஒருவரை ஒருவர், ஒன்றை ஒன்று சார்ந்து வாழும் முறையில் இந்த உலகை படைத்துள்ளான் இறைவன்.

அல்லாஹ்வும் தன் திருமறையில் சொல்கின்றான்: ‘வானங்கள், பூமியின் பொக்கி‌ஷங்களின் சாவிகள் அவனிடமே இருக்கின்றன. அவன் விரும்பியவர்களுக்கு உணவை விரிவாக்குகிறான். அவன் விரும்பியவர்களுக்கு சுருக்கி விடுகின்றான். நிச்சயமாக அவன் சகல வஸ்துகளையும், மக்களின் தன்மைகளையும் நன்கறிந்தவன். ஆகவே அவர்களின் தகுதிக்கு தக்கவாறு கொடுக் கிறான்’. (42:12)

‘மனிதனின் தகுதியையும் தன்மையையும் அறிந்து கொடுக்கின்றேன்’ என்று சொல்வதன் மூலம் தன் அடியானுக்கு கொடுப்பதை தன் வசம் தான் அல்லாஹ்  வைத்துள்ளான் என்பது நிரூபணம் ஆகிறது.

சகோதர, சகோதரிகளுக்கோ அல்லது பிற உறவுகளுக்கோ நாம் ஏதாவது உதவி செய்கிறோம் என்றால், அதற்கு நம்மை பொறுப்பேற்கச் செய்த அல்லாஹ்விற்கே நன்றி செலுத்த வேண்டும். அந்த சமயங்களில் நாம் உதவி செய்கிறோம் என்ற மமதையில் அவர்கள் மனம் வருந்தும் வகையில் எந்தவித வார்த்தைகளையும் சொல்லக்கூடாது என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும்.

ஆனால் அந்த உயர்ந்த அந்தஸ்தை உணர்ந்து கொள்ளாதவன், ‘நான் தான் உதவி செய்கிறேன். என்னால் தான் இந்த காரியம் நிறைவேறுகிறது’ என்று  பிறரை இகழ்வாய் நினைத்தால், அல்லாஹ் அவனைக் கொண்டு நாடிய அந்த நன்மையை நிறுத்தி விடுவான்.

காரணம், அது உன்னால் கொடுக்கப்பட்டது அல்ல. உன் தேவைக்குப் போக, உன்னைச் சார்ந்த பிறரின் தேவையையும் உன்னுடைய அருளில் சேர்த்தே வழங்கியதை நீ அறிந்திருக்கவில்லை. நீ இல்லை என்றால் கூட இன்னொருவரைக் கொண்டு அவனுக்கு வழங்க வேண்டியதை வழங்க கூடிய வல்லமை பெற்றவன் அல்லாஹ்.

உறவினர்களோடு உரையாடும் சந்தர்ப்பத்தில், அது பிடிக்காத காரணத்தால் ஸஹத் இப்னு அபி வக்காஸ் (ரலி) என்ற நபித்தோழரின் வார்த்தைகளும் சற்று தடம்புரண்டு விட்டது. இதனை அறிந்த நபியவர்கள், அவர்களைக் கூப்பிட்டு கடிந்து கொண்ட வரலாறு உண்டு.

ஒருவன் உதவி கேட்டு உங்களிடம் வருகிறான் என்றால் அதற்கான ஏற்பாட்டை அல்லாஹ் ஏற்கனவே உங்கள் மூலம் செய்து விட்டான் என்பது தான் பொருள். உங்களின் அந்த கடமையை நிறைவேற்ற உதவி செய்வதற்காகத் தான் அவன் நம்மிடம் வருகிறான் என்று நம்பி நிறைவாய் நன்மையைச் செய்ய வேண்டும். மேலும் நமது கடமையை நிறைவேற்ற உதவி செய்த அவனுக்கும் அல்லாஹ்விற்கும் நன்றி செலுத்த வேண்டும். அது நம்பிக்கையாளர்களின் அடையாளங்களில் ஒன்று.  

நபித்தோழர் அபூபக்கர் சீத்தீக் (ரலி) அவர்கள் தங்களின் உறவினர்கள் பலருக்கு பல ஆண்டுகாலமாக உதவிகளைச் செய்து வந்தார்கள். அவர்களில்  மிஸ்த்தா என்பவர் ஒரு சந்தர்ப்பத்தில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றி ஒரு தவறான செய்தியை பரப்புவதில் முன்னிலை பெற்றிருந்தார். இந்த காரணத்தில் அவர் மீது கோபம் கொண்டு, ‘நான் உனக்கு செய்யும் உதவியை இன்றோடு நிறுத்திவிடுவேன்’ என்று சொல்லி விட்டார்கள். அவர்களின் அந்த செயலை அல்லாஹ் விரும்பாத காரணத்தால் அவர்களை கண்டித்து திருமறையில் ஒரு வசனத்தை  இறக்கி விட்டான்.

“உங்களில் செல்வந்தரும், பிறருக்கு உதவி செய்ய இயல்புடையவரும் தங்கள் பந்துக்களுக்கோ, ஏழைகளுக்கோ அல்லாஹ்வுடைய பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ தர்மம் கொடுக்க மாட்டேன் என்று  சத்தியம் செய்ய வேண்டாம். அவர்களால் உங்களுக்கு ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால் அதை நீங்கள் மன்னித்து புறக்கணித்து விடவும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிக்க மன்னிப்பவன் கருணையுடையவன் ஆவான்” (24:22)

சொர்க்கத்தின் வாரிசுதாரர்கள் என்று நன்மாராயம் சொல்லப்பட்ட நபித்தோழர்களையே இது போன்ற சந்தர்ப்பங்களில் கடிந்து கொள்ளும் அல்லாஹ், நாம் அனாவசியமாய் தரம் தாழ்ந்து உறவினர்களைப் பழிப்பதை எப்படி ஏற்றுக்கொள்வான்? எனவே நம் போன்றவர்களுக்கு அருள்மறையின் மூலம் ஒரு செய்தியைச் சொல்கிறான்.

‘தர்மம் செய்து அதை வாங்கியவனுக்கு துன்பம் தொடரும் படியாகச் செய்யும் தர்மத்தை விட, அன்புடன் சொல்லும் இனிய சொல்லும், மன்னிப்பும் மிக்க மேலானதாகும். அல்லாஹ் எத்   தேவையும் அற்றவன்மிக்க பொறுமையாளன் ஆவான்’ (2:263).

அல்லாஹ் நம்மை கொடுக்கின்ற நிலையில் வைத்திருக்கின்றான். கொடுப்பதற்கான நல்ல மனதை தந்திருக்கின்றான். அவர்களுக்குரிய வாழ்வாதாரத்தையும் நம்மிடமே தந்து வழங்கச் சொல்கிறான். இப்படிப்பட்ட நல்ல நிலையில் பொருந்திக் கொண்ட அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தி, அந்த நன்மையின் காரணமாக பாவமன்னிப்பு கோரியவர்களாக அல்லாஹ்விடம் சரணடைய வேண்டும். இதை விட்டுவிட்டு ‘நாம் கொடுக்கிறோம்’ என்ற காரணத்தால் பிறரை தாழ்வாக எண்ணி இகழ்வதையோ, ‘என்னால் தான் எல்லாம் உனக்கு கிடைக்கிறது’ என்று தன் இறுமாப்பையோ அவர்களிடம் காட்டுவது தவறானது. அதனை தவிர்க்க வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ், நம் எல்லோருக்கும் அத்தகைய நல்ல குணத்தை தர கிருபை செய்வானாக, ஆமீன்.

எம். முஹம்மது யூசுப். உடன்குடி.


தொடர்புடைய செய்திகள்

1. பொறாமை
பொதுவாக யார் பொய் சொல்லும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறாரோ, அதன் காரணமாக, அவரிடம் மற்ற கெட்ட குணங்களும் இருக்கும்.
2. எந்த நிலையிலும் இறைவனை மறக்க வேண்டாம்
“இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்” என்று சேர்த்துச் சொன்னால்) அன்றி; தவிர, (இதை) நீர் மறந்து விடுங்கால் உம் இறைவனை நினைவு படுத்திக் கொள்வீராக;
3. கடன் இல்லாத வாழ்க்கை...
கடனில்லாமல் வாழ்வது என்பது பெரும் பாக்கியம். அப்படி வாழ்க்கை அமைவதென்பது பெரிய சவால்.
4. எல்லாக்காரியங்களிலும் வீரம் மிக்க செயல் எது?
அல்லாஹ்வால் படைக்கப்பட்ட மிக சிறந்த ஞானவான்கள் பலர் இருப்பினும், அவர்களில் இருவரைப் பற்றிய குறிப்புகள் மட்டுமே திருக்குர்ஆனில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
5. மனிதப்பண்பை சிதறடிக்கும் ‘வெறுப்பு’
“ஓ நம்பிக்கையாளர்களே! எந்த ஒரு கூட்டத்தார் மீதும் நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு, நீதி செய்யாமலிருக்க உங்களைத் தூண்ட வேண்டாம்.