கோவிலுக்கு வந்த ஜெயேந்திர சரஸ்வதி சாமிகள் டோலியில் தூக்கிச்சென்றனர்


கோவிலுக்கு வந்த ஜெயேந்திர சரஸ்வதி சாமிகள் டோலியில் தூக்கிச்சென்றனர்
x
தினத்தந்தி 8 Jan 2018 10:35 PM GMT (Updated: 8 Jan 2018 10:35 PM GMT)

சுமார் 14 ஆண்டுகளுக்கு பிறகு காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சாமிகள் வரதராஜபெருமாள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். அவரை டோலியில் தூக்கிச்சென்றனர்.

காஞ்சீபுரம்,

காஞ்சீபுரம் சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி சாமிகள் நேற்று காலை காஞ்சி சங்கரமடத்தில் இருந்து கார் மூலம் உலக பிரசித்தி பெற்ற வரதராஜபெருமாள் கோவிலுக்கு சென்றார். அங்கு அவரை, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையரும், கோவில் செயல் அலுவலருமான விஜயன் மற்றும் அர்ச்சகர்கள் வரவேற்றனர்.

பின்னர் சங்கராச்சாரியாரின் கார் கோவிலுக்கு உள்ளே சென்றது. அங்கு காரில் இருந்து கீழே இறங்கிய ஜெயேந்திர சரஸ்வதி சாமிகள், டோலியில் அமர்ந்தார். அங்கிருந்தவர்கள் டோலியை தோளில் சுமந்து சென்றனர்.

ஜெயேந்திர சரஸ்வதி சாமிகள் முதலில் மூலவர் வரதராஜபெருமாளை தரிசனம் செய்தார். அவருக்கு அர்ச்சகர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். பின்னர் பெருந்தேவி தாயார் சன்னதிக்கு அவரை டோலியில் தூக்கிச்சென்றனர். அங்கு தாயாரை வணங்கிய அவருக்கு குங்குமம் பிரசாதம் வழங்கப்பட்டது.

வரதராஜபெருமாள், பெருந்தேவி தாயார் ஆகியோரை தொடர்ந்து உற்சவர் வரதராஜர், அழகிய சிங்கர், விநாயகர் ஆகியோருக்கு பட்டு வஸ்திரத்தை வழங்கினார். அர்ச்சகர்கள் அதை வாங்கி உற்சவர் உள்ளிட்ட சாமிகளுக்கு அணிவித்தனர்.

அதைதொடர்ந்து காஞ்சி சங்கராச்சாரியார், 16 கால் மண்டபத்துக்கு வந்தார். அங்கு அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அங்கிருந்த பக்தர்களுக்கு ஜெயேந்திர சரஸ்வதி சாமிகள் ஆசி வழங்கினார். இதையடுத்து அவர், கோவிலில் இருந்து சங்கரமடத்துக்கு காரில் புறப்பட்டு சென்றார்.

‘‘சடாரி பஞ்சமுத்திரை’’ 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும். அப்போது 5 மடாதிபதிகளுக்கு கோவிலில் மரியாதை செய்யப்படும். அதையொட்டியே காஞ்சி சங்கராச்சாரியார் காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள் கோவிலுக்கு வந்ததாக தெரிவிக்கப்பட்டது.

காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவில் மேலாளராக இருந்த சங்கரராமன், கடந்த 2004–ம் ஆண்டு கோவில் வளாகத்தில் படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காஞ்சி சங்கராச்சாரியார், ஜெயேந்திரர் உள்பட அனைவரையும் புதுச்சேரி நீதிமன்றம் கடந்த 2013–ம் ஆண்டு விடுதலை செய்தது.

சங்கரராமன் படுகொலைக்கு பின்னர் வரதராஜபெருமாள் கோவிலுக்கு ஜெயேந்திர சரஸ்வதி சாமிகள் வரவில்லை. அங்கு நடைபெறும் சிறப்பு வழிபாடுகளிலும் கலந்துகொள்ளாமல் இருந்தார்.

இந்தநிலையில் 14 ஆண்டுக்கு பிறகு ஜெயேந்திரர் சரஸ்வதி சாமிகள் காஞ்சீபுரம் வரதராஜபெருமாள் கோவிலுக்கு வந்து இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story