இறைவனை உணர உருவ வழிபாடு அவசியம்


இறைவனை உணர உருவ வழிபாடு அவசியம்
x
தினத்தந்தி 10 Jan 2018 12:21 PM IST (Updated: 10 Jan 2018 12:21 PM IST)
t-max-icont-min-icon

உருவ வழிபாட்டின் மூலம் ஐந்து புலன்களையும் ஒரு முகப்படுத்தி, இறை சக்தியிடம் எளிதாக அணுக முடிகிறது.

மது இந்திய பண்பாட்டில் ஆன்மிக சாஸ்திரங் களுக்கு எப்போதுமே உன்னதமான இடம் அளிக்கப்பட்டு வருகிறது. பல்வேறு விதமான கலைகளை விளக்கும் சாஸ்திரங்களை படைத்தவர்கள் ரிஷிகள் ஆவர். அவர்கள்கூட தாமே அவற்றை இயற்றியதாக சொல்லவில்லை. தமது இறை தவத்தின் மூலம் கண்டுணர்ந்த சத்திய உணர்வின் வெளிப்பாட்டையே சாஸ்திரங்களாக படைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

அதன் காரணமாக அவர்கள் ‘மந்த்ர திருஷ்டா’ (மந்திரங்களை நேரில் கண்டவர்கள்) என்று அழைக்கப்பட்டனர். உருவங்கள் ஏதுமற்ற, அருவமாக இறைவனை உணர்வதற்கு முதிர்ந்த ஆன்ம நிலையின் வெளிப்பாடுகளை கொண்ட ஞானிகளால் மட்டுமே முடிகிறது. ஆனால், சாதாரண மனிதர்களுக்கு இறைவனது அருளை உணர ஏதேனும் ஒரு சார்பு நிலை அவசியமாக உள்ளது. அதன் அடிப்படையில் உருவ வழிபாடு என்ற சிலா பூஜை என்பது ரிஷிகளால் பரிந்துரைக்கப்பட்ட வழிமுறையாக இருந்து வருகிறது. அவற்றை செய்வதற்கும் ஒழுங்கு முறைகளின் கீழ் அமைக்கப்பட்ட விதிகள், ஆகமங்கள் மூலம் வகுத்து அளிக்கப்பட்டுள்ளன. அதன் அடிப்படையில் கவனிக்கும்போது தமது விருப்பத்திற்கு ஏற்றவாறு ஒருவர் வழிபாடுகளை செய்வது அனுமதிக்கப்படுவதில்லை. குறிப்பாக, வீடுகளில் செய்யப்படும் தனிப்பட்ட இஷ்ட தெய்வ பூஜைகளுக்கும்கூட குறிப்பட்ட வழிமுறைகள் உள்ளன.

உருவம் மற்றும் பெயர் ஆகிய வரையறைகளுக்கு உட்பட்ட நிலையில் அமைந்த இவ்வுலக வாழ்க்கையில், மகத்தான சக்தியான உருவ மற்றை இறைவனை அணுக உருவ வழிபாடு அல்லது விக்கிரக ஆராதனை என்பது தவிர்க்க இயலாத அம்சமாகும். இறைவனை உருவங்கள் மூலம் வழிபடுவது தவறு என்று சொல்பவர்களும்கூட ஏதாவது ஒரு சின்னம் வடிவில் இறை நிலையை உருவகித்து பின்பற்ற வேண்டியதாக உள்ளது.

உருவ வழிபாட்டின் மூலம் ஐந்து புலன்களையும் ஒரு முகப்படுத்தி, இறை சக்தியிடம் எளிதாக அணுக முடிகிறது. அதன் அடிப்படையில் வைணவ சம்பிரதாயம் இறைவனின் சிலா ரூபங்களை, அர்ச்சாவதாரம் என்று குறிப்பிடுகிறது. அதன் பொருட்டு ஆலயங்கள் நிறுவப்பட்டு, அவற்றின் மூலம் பண்பாடு, கலைகள், வேதம், வேதாந்தம், இலக்கியம், மொழி போன்ற அனைத்து கலைகளையும் வளர்த்து வரக்கூடிய ஆன்மிக கல்வி நிலையங்களாகவும் ஆலயங்கள் இருந்து வந்தன.

அர்ச்சாவதாரம் என்று சொல்லப்படும் சிலா ரூபங்கள் வெறும் கல்லால் வடிவமைக்கப்பட்டிருந் தாலும் அவற்றிற்கு உயிர் உள்ளதாக ஐதீகம். உதாரணமாக குறிப்பிட்ட முன் தேதி இடப்பட்ட ஒரு காசோலையை வெறும் காகிதம் என்று யாரும் குறிப்பிடுவதில்லை. அதன் மதிப்பை சம்பந்தப்பட்டவர்கள் உணர்வதுபோல பக்தர்களும் கல்லால் செய்யப்பட்ட அர்ச்சாவதாரம் என்ற சிலா ரூபத்தை அகிலாண்ட கோடி பிரம்மாண்ட நாயகனின் திருவடிவமாகத்தான் கண்டு உணர்கிறார்கள்.

Next Story