தை அமாவாசை


தை அமாவாசை
x
தினத்தந்தி 10 Jan 2018 7:11 AM GMT (Updated: 10 Jan 2018 7:10 AM GMT)

அமாவாசை நாளில் தீர்த்தக் கரைகளில் நீராடும்போது, பிதுர்காரகனாகிய சூரியனுக்கு மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் அவருடைய அருளையும் பெறலாம்.

பொதுவாக அமாவாசை நாட்களில் முன்னோர்களுக்கு நீத்தார் கடன் செய்வது விசேஷம். அனைத்து அமாவாசை தினங்களும் சிறப்பானவை என்றாலும், ஆடி மற்றும் தை அமாவாசை தினங்கள் நீத்தார் கடன் தீர்க்கும் முக்கியமான நாட்களாக கருதப்படுகிறது. தங்களின் முன்னோர் இறந்த திதி தெரியாதவர்கள், இதற்கு முன்பு முன்னோர்களுக்கு பித்ரு கடன் செய்திருக்காதவர்கள் என அனைவரும் மேற்கண்ட இரண்டு நாட்களில் ஏதாவது ஒன்றில் பித்ருக்களுக்கான கடன்களை செய்து கொள்ளலாம்.

நீர் நிலை உள்ள பகுதிகளில் தான் மூதாதை யர்களுக்கு செய்ய வேண்டிய பித்ரு கடன்களைச் செய்வார்கள் என்பதால், திருப்புல்லாணி, ராமேஸ்வரம், கோடியக்கரை, பூம்பு கார், திருவெண்காடு, திருச்சி அம்மா மண் டபம், திருச்செந்தூர், முக்கடல் சங்கமிக்கும் கன்னியாகுமரி, பவானி கூடுதுறை போன்ற தலங்களில் மக்களின் கூட்டம் அதிகமாக காணப்படும். தை அமாவாசை நாட்களில் தங்கள் சந்ததியினர் செய்யும் பித்ரு கடன்களை ஏற்றுக்கொள்வதற்காக, முன்னோர்கள் அனைவரும் பூவுலகிற்கு வருவதாக ஐதீகம்.

வடநாட்டில் காசி, பத்ரிநாத், கயா, கங்கைக்கரை போன்ற பகுதிகளில் பித்ரு பூஜை செய்யப்படுவது வழக்கம். முன்னோர்களுக்கு திதி கொடுப்பது என்பது, ஒவ்வொருவரின் கடமையாகும். தை அமாவாசையில் முன்னோருக்கு உணவு, புத்தாடை படைத்து வழிபட்டு விட்டு, அவற்றை ஏழை எளியவர்களுக் கு தானமாக வழங்கினால் நன்மைகள் பல வந்து சேரும். இல்லத்தில் தடைபட்ட சுபகாரி யங்கள் நடைபெறும். நீண்டநாளாக வருத்தி வந்த நோய் அகலும். மனக்கலக்கம் விலகும், மனதில் மகிழ்ச்சி பொங்கும்.

தை அமாவாசையில் அதிகாலை எழுந்து நீராடி விட்டு, சிவாலய தரிசனம் செய்ய வேண்டும். பின்னர் முன்னோர்களுக்கு தர்ப்பணம், அன்னதானம் செய்தால் மிகவும் நன்மை அளிக்கும். அமாவாசை நாளில் தீர்த்தக் கரைகளில் நீராடும்போது, பிதுர்காரகனாகிய சூரியனுக்கு மூன்று முறை அர்க்கியம் செய்வதன் மூலம் அவருடைய அருளையும் பெறலாம்.

பித்ரு கடன் செய்வதில், தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் முக்கியத்துவம் பெற்று விளங்குகிறது. இங்குள்ள ராமநாதசுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மனை அமாவாசை அன்று அக்னி தீர்த்தத்திற்கு எழுந்தருளச் செய்வார்கள். அங்கு தங்களின் மூதாதையர் களுக்கு தர்ப்பணம் செய்யும் மக்கள், இந்த இறைவனையும், இறைவியையும் வழிபட்டு அவர்களின் அருளாசியையும் பெறலாம்.

இதே போல் வேதாரண்யத்தில் உள்ள மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடுவதும் சிறப்பானதாகும். தை அமாவாசை தினங்களில், மணிகர்ணிகை தீர்த்தத்தில் நீராடுவது கங்கை, யமுனை, நர்மதை, சிந்து, காவிரி போன்ற புனித நதிகளில் நீராடுவதற்கு சமம் என்று சொல்லப்படுகிறது. இங்கு நீராடுபவர்கள், தங்களின் பாவங்களைப் போக்கிக் கொள்வதோடு, அவர்களின் முன்னோரது பாவங்களையும் நீக்கிக்கொள்ள இயலும் என்கிறார்கள். மேலும் பல வருடம் யோகம், தானம், தவம் செய்த பலன் கிடைக்கும்.

வேதாரண்யம் ஆலயத்திற்கு எதிரே உள்ள கடல் ‘ஆதிசேஷ தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. இதில் ஒரு முறை நீராடுவது ராமேஸ் வரத்தில் உள்ள அக்னி தீர்த்தத்தில் நூறு தடவை நீராடுவதற்குச் சமம் என்கிறார்கள். தை அமாவாசை, மகாளய அமாவாசை தினங்களில் இங்கு வந்து நீராடும் பக்தர்களின் எண்ணிக்கை ஏராளம். 

Next Story