நோய்களுக்கு காரணமாகும் கிரக அமைப்பு


நோய்களுக்கு காரணமாகும் கிரக அமைப்பு
x
தினத்தந்தி 11 Jan 2018 10:30 PM GMT (Updated: 11 Jan 2018 9:22 AM GMT)

ஜோதிடத்திற்கு விஞ்ஞானத்தை ஆதாரமாகக் காட்ட முடியாது. அனுபவத்தின் மூலமாக உணரத்தான் முடியும்.

ஜோதிடத்திற்கும், மருத்துவத்திற்கும் அடிப்படை விஞ்ஞானம் தான். ஆனால் கொஞ்சம் வேறுபாடு; அவ்வளவு தான். மருத்துவம் விஞ்ஞானத்தை ஆதாரமாகக் கொண்டது. ஜோதிடம் அனுமானத்தை அடிப்படையாகக் கொண்டது. ஜோதிடத்திற்கு விஞ்ஞானத்தை ஆதாரமாகக் காட்ட முடியாது. அனுபவத்தின் மூலமாக உணரத்தான் முடியும். ஜோதிடம் வெற்றியடையும் போது, உடன் விஞ்ஞானமும் வெற்றி பெறுகிறது. அதே நேரம் ஜோதிட கணிப்புகள் தோல்வியைத் தழுவும் போது, விஞ்ஞானம் மட்டும் வெற்றி ஸ்தானத்தில் கம்பீரமாக உள்ளது. காரணம்.. விஞ்ஞானம் எப்போதும் உண்மையின் ஆதாரத்தை நம்மிடம் கேட்கிறது.

இன்று விஞ்ஞான ரீதியில் நவக்கிரகங்கள் உள்ளதை நிரூபணம் செய்திருக்கிறார்கள். ராகு, கேது கிரகங்களை நிழல் கிரகம் என்றே விஞ்ஞானம் கூறுகிறது. சூரிய, சந்திர கிரகணம் நடைபெறும்போது, இந்த ராகு– கேது நிழல்களைக் காண முடிகிறது. அவை பாம்பு ஒன்று சூரியனை விழுங்குவதுபோல் இருப்பதாக கூறுகிறார்கள். சந்திரன் பூமியைச் சுற்றிவருவதையும் விஞ்ஞானம் சுட்டிக்காட்டுகிறது. ஆனால் இவற்றையெல்லாம் வேத காலத்திலேயே சொல்லப்பட்டது. ஜோதிட சாஸ்திரமும் கூட இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டுதான் இயங்கி வருகிறது.

இன்றைய விஞ்ஞான காலத்தில் மருத்துவத் துறை எவ்வளவோ முன்னேற்றம் கண்டுள்ளது. இருப்பினும் இவற்றுக்கெல்லாம் ஜோதிடமும் காரண கர்த்தாவாக உள்ளது என்பதை நிரூபிக்க முடியும். மருத்துவ கருவிகளுக்கும் சரி.., மருத்துவம் கூறும் நோய்களுக்கும் சரி.., நோய் போக்கும் மருந்துகளுக்கும் கூட சரி.. ஜோதிடம் ஒரு காரணமாகவே அமைகிறது. ஒரு மனிதனுக்கு தேவையான மருத்துவம் மற்றும் அதற்கான மருந்தை எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் பற்றியும் கூட ஜோதிடம் கூறுகிறது. எதற்குமே கால நேரம் அவசியம் என்பதை ஜோதிடம் வலியுறுத்துகிறது.

பொதுவாக நமது முன்னோர்கள் வைத்தியம் பார்ப்பதற்கு என்றே சில கிழமைகளை வைத்திருக்கிறார்கள். புதியதாக வைத்தியம் பார்க்கவும், புதிய மருந்துகளை எடுத்துக் கொள்ளவும் ஞாயிறு, புதன், வெள்ளி ஆகிய தினங்கள் சிறந்தது. அதே நேரம் எந்த நோயாக இருந்தாலும், எந்த வைத்தியமும் மருந்தும் எடுத்துக் கொள்ளக் கூடாத தினங்கள் என்று திங்கள், சனிக்கிழமைகளை வைத்திருந்தார்கள். ‘வியாழக்கிழமை கொண்ட வியாதி எளிதில் விடாது’ என்று சொன்னவர்கள், செவ்வாய்க்கிழமையில் உடலை அறுத்து சிகிச்சை செய்யக்கூடாது என்றும் கூறியிருக்கிறார்கள். ஆனால் இவையெல்லாம் இன்றைய அவசர உலகத்தில் கடைப் பிடிக்க கடினமானவை.

ஒரு மனிதனுக்கு நோய்கள் உருவாவதற்கும், அந்த நோய்கள் நீங்குவதற்கும் கிரகங்களே காரணமாக அமைவதாக ஜோதிடம் சொல்கிறது. சில தீராத நோய்களும், போக்கவே முடியாத நோய்களும் வருவதற்கும், பரம்பரை வியாதிகள் வருவதற்கும் கூட இந்த கிரகங்களேக் காரணம். மனிதன் தனக்கு ஏற்பட்ட நோய்களைப் போக்க, பல விதமான வைத்தியங்கள் செய்யலாம். ஆனால் விதி என்னும் பிடியில் இருந்து அவன் தப்பிக்கவே முடியாது. விதியின் பலனை அனுபவித்தே ஆக வேண்டும்.

–ஆர்.சூரிய நாராயணமூர்த்தி

Next Story