ஆலய அமைப்புகளை குறிப்பிடும் ஆகமங்கள்


ஆலய அமைப்புகளை குறிப்பிடும் ஆகமங்கள்
x
தினத்தந்தி 23 Jan 2018 7:09 AM GMT (Updated: 23 Jan 2018 7:09 AM GMT)

ஆகமங்கள் என்பது வேதங்களின் உட்பொருளாக விளங்குகின்றன. வேதங்களை அருளியவர், தென்திசை நோக்கி ஞானத்தவம் புரியும் தட்சிணாமூர்த்தி.

பொதுவாக கோவில்கள் என்பது மெய்ப்பொருளான இறைவன் வாழும் இடமாக கருதப்படுகிறது. இறைவன் மனமுவந்து குடிகொள்ளும் பீடமாக உள்ளதால் கலை, கலாசார, ஆன்மிக செல்வங்களை ஒருங்கே பிரதிபலிக்கும் இடமாக ஆலயங்கள் அமைக்கப்படுகின்றன. அதன் அடிப்படையில் பல்வேறு விதிமுறைகளை ஆகமங்கள் விளக்குகின்றன.

இறைவனால் தரப்பட்டவை

ஆகமங்கள் என்பது வேதங்களின் உட்பொருளாக விளங்குகின்றன. வேதங்களை அருளியவர், தென்திசை நோக்கி ஞானத்தவம் புரியும் தட்சிணாமூர்த்தி. அதாவது, பிறை சூடிய பெருமானே மறைகளையும், ஆகமங் களையும் அருளினார் என்று பல நூல்கள் எடுத்துக்காட்டுகின்றன.

ஆகம வகைகள்

ஆகமங்கள் சுருக்கமாக சைவ ஆகமம், வைகானஸ ஆகமம், பாஞ்சராத்ர ஆகமம் என்று மூன்றாக வகுக்கப்பட்டுள்ளன. சைவ ஆகமம் சிவ வழிபாட்டையும், வைகானஸ, பாஞ்சராத்ர ஆகமங்கள் திருமால் வழிபாட்டையும் விரிவாக சொல்கின்றன.

ஆன்மிக பேறுகள்

இறைவனை வழிபடுபவர்கள் சாலோகம், சாமீப்யம், சாரூப்யம், சாயுஜ்யம் ஆகிய நான்கு பேறுகளையும் அறம், பொருள், இன்பம், வீடு என்ற நான்கு புருஷார்த்தங்களையும், நயனம், ஸ்பரிசம், வாசகம், பாவனை, சாஸ்திரம், யோகம், அவுத்ரீ என்னும் ஏழு விதமான தீட்சைகளையும் அடைய ஆகமங்கள் என்ற வழிமுறை சிவபெருமானால் அருளப்பட்டது.

சிவ ஆகமங்கள்

சிவபெருமானின் சதாசிவ அம்சத்திலிருந்து வெளிப்பட்ட ஆகமங்கள் 28 வகைகளாக உள்ளன. இவற்றுள் சிவபேத ஆகமங்கள், ருத்ரபேத ஆகமங்கள் என்ற இரண்டு வகைகள் உள்ளன. அந்த 28 ஆகமங்களுக்கு 207 உப ஆகமங்களும் உள்ளன. சிவபிரான் அருளிய 28 ஆகமங்களையும், 66 சிவனருட் செல்வர்கள் கேட்டு மங்கள வாழ்வு பெற்றதாக ஐதீகம்.

வைணவ ஆகமங்கள்

வைகானஸ ஆகமம் மகாவிஷ்ணுவால் சொல்லப்பட்டது என்பது ஐதீகம். வைகானஸ ஆகமத்தின் மூலமந்திரங்கள், ரகசிய விவரங்கள் ஆகியவற்றை விஷ்ணு உபதேசிக்க, விகனச முனிவர் எழுதி வைத்தார். வைகானஸ ஆகமத்துக்கு ‘பகவத் சாஸ்திரம்’ என்ற பெயரும் உண்டு. பாஞ்சராத்ர ஆகமமும் விஷ்ணு வழிபாட்டின் சிறப்புகளையும் முறைகளையும் விவரிக்கிறது.

உட்பிரிவுகள்

சைவ ஆகமங்களுள் காமிகம், காரணம் என்ற இரண்டும் முக்கியமானவை ஆகும். ஆலயம் அமைப்பதற்கு கச்சிதமான இடத்தை தேர்ந்தெடுத்தல், கட்டிடம் நிர்மாணிக்கும் முறை, சிற்பிகள் மற்றும் அர்ச்சகர் ஆகியோரது தகுதி நிலைகள், கோவில் கட்டி முடித்து கும்பாபிஷேகம் செய்வது போன்ற தகவல்களை இவை விரிவாக தருகின்றன.

ஆலய நிர்மாணம்

சைவ ஆகமங்களும், வைணவ ஆகமங்களும் ஆலயத்தை நிர்மாணிக்கும் பொறுப்பு நான்கு முக்கியமான நபர்களைச் சேர்ந்தது என்று குறிப்பிடுகின்றன. அவர்கள் ஸ்தபதி (தலைமை சிற்பி), சூத்ரதாரன் (நூலினால் அளவை செய்பவர்), தட்சகன் (கற்களை வெட்டி செதுக்குபவர்), வர்த்தகி (வண்ண பூச்சு கொடுப்பவர்) ஆகியோர் ஆவர். 

Next Story