ஆன்மிகம்

நாரதர் வழிபட்ட பட்டீசுவரர் + "||" + Narada worshiped Patteswarar

நாரதர் வழிபட்ட பட்டீசுவரர்

நாரதர் வழிபட்ட பட்டீசுவரர்
‘ஓம் நமோ நாராயணா' என்று அணுநேரமும் திருமாலின் திருமந்திரத்தை உச்சரிக்கும் நாரதர், சிவபெருமானை வழிபட்ட தலம் இது.
ரு முறை திருமாலின் கையில் இருந்த திருச்சக்கரம் செயலிழந்து விட்டது. ஆதலால் ஜலந்தாரன் என்ற அசுரனை வதம் செய்ய சக்கரம் வேண்டி ஈசனை வழிபட்டார் திருமால். தினமும் ஆயிரம் தாமரை மலர்களைக் கொண்டு வழிபட்ட திருமாலுக்கு, ஒருநாள் ஆயிரம் மலர்களில் ஒன்று குறைந்தது. எனவே தனது வலது கண்ணை, தாமரையாக பாவித்து ஈசனுக்கு அர்ச்சித்தார். இதையடுத்து அவருக்கு சிவபெருமான் சுதர்சன சக்கரத்தை வழங்கினார்.

அந்த திருமாலின் திருமந்திரம் முழங்கும் நாரதர், முருகப்பெருமான் வாயிலாக சிவனின் தென் கயிலாயத்தை பற்றி அறிந்ததும், அதை தரிசிக்கும் ஆவல் கொண்டார்.

அதற்காக அவர் பூலோகம் வந்தார். பூலோகத்தில் தென்கயிலாயம் என்று சிவன் அருளிய, பூண்டி வெள்ளியங்கிரி மலைக்கு வந்த அவர், வெள்ளியங்கிரி மலையாக நின்ற ஈசனை மெய்மறந்து வணங்கினார். இந்த மலை கோவை பேரூரில் இருந்து 22 கிலோமீட்டர் தொலைவில் மேற்கு திசையில் அமைந்துள்ளது.

திருவெள்ளியங்கிரி மலை மீது ஏறி உமாதேவி சமேதராக காட்சியளித்த சிவனையும், விநாயகர், முருகப்பெருமானையும் தரிசித்தார். அது மட்டுமின்றி அதற்கு மேற்கு திசையில் எழுந்தருளிய சிவலிங்கத்திற்கும் பூஜை செய்து வழிபட்டார். பின்னர் பேரூர் திருத்தலம் வந்தார். உத்தர வாகினியாக ஓடிய காஞ்சிமாநதியில் புனித நீராடி, அரச மரங்கள் சூழ எழுந்தருளியிருந்த ஆதிலிங்க மூர்த்தியை கண்டு உணர்ந்து மலர்கள் தூவி தரிசித்தார்.

பிறகு காஞ்சிமா நதிக்கரையோரம் ஒரு சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபடத் தொடங்கினார். தினமும் காஞ்சிமாநதியில் புனித நீராடி, தான் உருவாக்கிய தீர்த்தத்தில் இருந்து தீர்த்தம் எடுத்து சிவலிங்கத்துக்கு அபிஷேகம் செய்வார். இந்த வழிபாட்டின் பலனாக ஈசனின் பரிபூரண அருளை நாரதர் பெற்றார்.

நாரதர் வழிபட்ட லிங்கம் ‘நாரதேஸ்வரர்’ என்றும், தீர்த்தம் ‘நாரத தீர்த்தம்’ என்று அழைக்கப்படுகிறது. கால வெள்ளத்தில் நாரதர் வழிபட்ட நாரதேஸ்வரரும், தீர்த்தமும் அழிந்து விட்டது. ஆனால் அவர் வழிபட்ட ஆதிலிங்க மூர்த்தி, பட்டீசுவரராக எழுந்தருளி உள்ளார். அவரை தரிசிக்க நாம் பேறு பெற்று உள்ளோம்.

பிரம்மனின் புத்திரர் காஸ்யப முனிவர். இவரது மகன் காலவ முனிவர். இவர் சிவபக்தியில் சிறந்து விளங்கினார். நன்மை, தீமை, ஆணவம், கன்மம், மாயை ஆகியவற்றைக் கடந்து பேரின்பத்தை அடைய வேண்டும் என்ற ஆவல் அவருக்கு உண்டாயிற்று.

சிவபெருமானின் மற்ற மூர்த்தங்களை விட, அனைத்திற்கும் மூலமாக, அருவுருவ திருமேனியாக விளங்கும் சிவலிங்க மூர்த்தியை வணங்கினால் வீடுபேறு என்னும் முக்தி கிடைக்கும் என்பதை அறிந்து, சிவலிங்கத்தை வழிபட முடிவு செய்தார் காலவ முனிவர்.

ஈசன், சிவலிங்க திருமேனியாய் எழுந்தருளிய திருத்தலங்களில் எது சிறந்தது? என்பதை அறிய, சிவன் எழுந்தருளியிருக்கும் இடமெல்லாம் சென்று வழிபடத் தொடங்கினார். காஞ்சிமா நதி ஓடும் ஆதிமாபுரம் என்று அழைக்கப்படும் திருப்பேரூரை அடைந்ததும், காலவ முனிவரின் வலது கண்ணும், வலது தோளும் தானாகத் துடித்தன. துன்பங்கள் நீங்கச் செய்யும் இந்த இடமே நாம் வழிபடுவதற்கு ஏற்றது என்று மகிழ்ந்தார்.

காஞ்சிமா நதியில் புனித நீராடி ஆதிலிங்க மூர்த்தியான பட்டீசுவரரை தரிசித்தார். வேத, மந்திரங்கள் உச்சரித்து வணங்கினார். அன்று முழுவதும் சிவசிந்தனையில் ஆழ்ந்தார்.

மறுநாள் காலையில் எழுந்து காஞ்சிமாநதி கரையோரம் ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து, ஒரு தீர்த்தத்தையும் உண்டாக்கினார். அந்த தீர்த்தத்தில் இருந்து தினமும் சிவலிங்க திருமேனிக்கு அபிஷேகம் செய்து, 16 ஆயிரம் முறை பஞ்சாட்சர மந்திரத்தை உச்சரித்து வந்தார். இப்படியே 16 ஆயிரம் ஆண்டுகள் கடும் தவம் செய்தார். காலவ முனிவரின் தவத்தை மெச்சிய சிவபெருமான், அவர் கண்முன் தோன்றினார்.

‘காலவ முனிவரே! யாம் உமது தவத்தை மெச்சினோம். யாது வரம் வேண்டும். கேளீர்' என்றார்.

இதைக் கேட்ட காலவ முனிவர், ‘எம்பெருமானே! இந்த பூத உடலில் உள்ள மலங்களை நீக்கி, உன் திருவடியை நாடும் பாக்கியம் பெற்ற விடுபேறை வழங்கி அருள்புரிவாயாக' என்றார்.

‘யாம் அந்த வரத்தை தந்தோம். இந்த வெள்ளியங்கிரியில் வெள்ளியம்பலம் ஒன்று உள்ளது. அதை வழிபடுகிற அன்பர்களின் வினைகள் தீரும் பொருட்டு நாள்தோறும் அனபரத ஆனந்த தாண்டவம் செய்கிறோம். நீங்கள்! இங்கு எழுந்தருளிய அரசம்பலவாணரை வழிபட்டு காத்திருங்கள். பிரம்மன், விஷ்ணு, யாம் இங்கு நடனம் ஆடும் திருக்காட்சியை தரிசிக்க உள்ளனர். நீங்களும் அந்த நடன காட்சியை தரிசித்து இப்பூத உடல் அழிந்து விடுபேற்றை பெறுவீர்கள்’ என்று அருள்பாலித்தார்.

அதன்படியே அங்கேயே கடும் தவம் இருந்து, பின்னாளில் சிவபெருமானின் அந்த திருக்கூத்தை கண்டுகளித்து வீடு பேற்றை அவர் பெற்றார்.

காலவ முனிவர் ஸ்தாபித்த கோவிலுக்கு காலவேஸ்வரம் என்றும், அவர் ஏற்படுத்திய தீர்த்தத்திற்கு காலவ தீர்த்தம் என்றும் பெயர். இன்றும் அவர் ஸ்தாபித்த லிங்கத்திருமேனியை தரிசிக்கும் பாக்கியம் நமக்கும் கிடைத்திருக்கிறது.

இந்த திருத்தலம் தற்போது உள்ள பேரூர் பட்டீசுவரர் கோவிலில் இருந்து வடகிழக்கில் உள்ளது. அது அரசம்பலவாணர் கோவில் என்று அழைக்கப்படுகிறது. காலவ முனிவர் ஏற்படுத்திய தீர்த்தத்தையும் அங்கு பார்க்கலாம். அந்த தீர்த்தத்தில் இருந்து தான் இன்றும் அந்த கோவிலில் அரசம்பலவாணருக்கு நித்ய பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இதை பேரூர் கோவிலின் ‘சின்னக்கோவில்’ என்று அழைக்கின்றனர்.