வேதபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்


வேதபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம்
x
தினத்தந்தி 29 Jan 2018 4:50 AM IST (Updated: 29 Jan 2018 4:50 AM IST)
t-max-icont-min-icon

புதுவை காந்தி வீதியில் உள்ள வேதபுரீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

புதுச்சேரி,

புதுவை காந்தி வீதியில் திரிபுர சுந்தரி சமேத வேதபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு அதற்கான திருப்பணிகள் நடந்து வந்தன. இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில் கும்பாபிஷேக ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கடந்த 22-ந்தேதி கணபதி ஹோமத்துடன் யாகசாலை பூஜைகள் தொடங்கின. தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் கோபூஜை, அஷ்டலட்சுமி ஹோமம், வாஸ்து சாந்தி மற்றும் யாக சாலை பூஜைகள் நடந்தன.

இதில் வேதவிற்பன்னர்கள் கலந்து கொண்டு மந்திரங்கள் முழங்க யாகம் நடத்தினார்கள். கடந்த 26-ந் தேதி காலையில் 4-ம் கால யாக பூஜையும், மாலையில் 5-ம் கால யாக பூஜையும், நேற்று முன்தினம் காலை 6-ம் கால யாக பூஜையும், மாலையில் 7-ம் கால யாக பூஜையும் நடைபெற்றது.

கும்பாபிஷேகத்தையொட்டி நேற்று காலை 7.30 மணிக்கு கடம் புறப்பாடு நடைபெற்றது. அதைத்தொடர்ந்து 8.15 மணிக்கு சுவாமி விமானம், அம்பாள் விமானம் மற்றும் ராஜகோபுரத்திற்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. அப்போது கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டது.

அதையடுத்து காலை 8.30 மணிக்கு திரிபுர சுந்தரி சமேத வேதபுரீஸ்வரர் சாமிக்கு மகா கும்பாபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேகத்தை காண வந்து இருந்த ஏராளமான பக்தர்கள் பக்தி கோஷம் முழங்க தரிசித்தனர்.

இதை கோவிலுக்கு வெளியே கூடி இருந்த பக்தர்களும் பார்ப்பதற்கு வசதியாக திரையில் காண்பிக்கப்பட்டது. புதுவை மற்றும் சுற்றுப்பகுதியில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கும்பாபிஷேகத்தை கண்டு தரிசித்த னர். பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.

விழாவில் முதல்-அமைச்சர் நாராயணசாமி, துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர் நமச்சிவாயம், எம்.எல்.ஏ.க்கள் லட்சுமி நாராயணன், அனந்தராமன், தீப்பாய்ந்தான், சிவா மற்றும் இந்து அறநிலையத்துறை செயலாளர் சுந்தரவடிவேலு, ஆணையர் தில்லைவேல் உள்பட அரசு அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கும்பாபிஷேகத்தையொட்டி கோவிலை சுற்றி போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து நேற்று மாலை 3 மணிக்கு மகா அபிஷேகமும், மாலை 6 மணிக்கு சாமி-அம்பாள் திருக்கல்யாண வைபவமும் நடைபெற்றது. இரவு 7.30 மணிக்கு பஞ்சமூர்த்தி வீதி உலாவும் நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமியையும், அம்பாளையும் தரிசித்தனர்.

Next Story