தோல் வியாதியை குணப்படுத்தும் இறைவன்


தோல் வியாதியை குணப்படுத்தும் இறைவன்
x
தினத்தந்தி 30 Jan 2018 5:45 AM GMT (Updated: 30 Jan 2018 5:45 AM GMT)

செவ்வாய் தலமான வைத்தீஸ்வரன் கோவில் என்ற தலம் பற்றியும், அது ஒரு செவ்வாய் தோஷ நிவர்த்தி தலம் என்றும் அனைவருக்கும் தெரியும்.

ஆதி வைத்தீஸ்வரன் கோவில் பற்றி கேள்விப்பட்டதுண்டா?

ஆம்! ராதா நல்லூர் என்ற தலத்தை, அப்படித்தான் அழைக்கின்றனர்.

இங்குள்ளது வைத்தினாத சுவாமி ஆலயம். இந்தக் கோவில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. மிகவும் பழமையான இந்த ஆலயம், ராஜேந்திரச் சோழனால் கட்டப்பட்டிருக்கலாம் என ஊர் பெரியவர்கள் கூறுகின்றனர்.

ஆலயத்தின் உள்ளே நுழைந்ததும் சிறப்பு மண்டபம் உள்ளது. எதிரே நந்தி மற்றும் பலி பீடம். அடுத்துள்ள மகா மண்டபத்தில் இடது புறம் இறைவி அருள்மிகு தையல் நாயகியின் சன்னிதி உள்ளது. அடுத்துள்ள அர்த்த மண்டபத்தை கடந்ததும் இறைவனின் கருவறை உள்ளது. இறைவன் வைத்தினாத சுவாமி லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார்.

அர்த்த மண்டபத்தின் நுழைவு வாசலில் இடது புறம் விநாயகரின் திருமேனி உள்ளது. மகா மண்டபத்தின் வடகிழக்கு மூலையில் பைரவர் மற்றும் தென்கிழக்கு மூலையில் சூரிய பகவானின் திருமேனிகள் உள்ளன.

இறைவனின் தேவக் கோட்டத்தில் தெற்கே தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். மேற்கு பிரகாரத்தில் முத்துக் குமார சுவாமி, வள்ளித் தெய்வானையுடன் தனி மண்டபத்தில் அருள்பாலிக்கிறார். அடுத்து மகாலட்சுமியின் சன்னிதி உள்ளது. இந்தச் சிலை மண் மேட்டில் புதைந்திருந்ததாகவும், மேட்டை சமன் செய்யும் போது கிடைத்தது எனவும், பின்னரே இந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டது எனவும் சொல்கின்றனர் ஊர் மக்கள்.

வடக்கு பிரகாரத்தில் சண்டீஸ்வரரின் சன்னிதி உள்ளது. மகா மண்டபத்தின் தென் கிழக்கு மூலையில் சனி பகவான் அருள்பாலிக்கிறார். பிரகாரத்தில் தென்கிழக்கு மூலையில் மூல கணபதியின் சன்னிதி இருக்கிறது.

இந்த ஆலயத்தில் இறைவன், இறைவி, முத்துக்குமாரசுவாமி உள்ளிட்ட அனைத்து சன்னிதிகளும் வைத்தீஸ்வரர் கோவிலில் உள்ளது போலவே அமைந்திருப்பதுடன், ஆலய அமைப்பும் கூட அந்த ஆலயத்தை ஒத்தே அமைந்திருப்பது வியக்க வைக்கிறது. இறைவன், இறைவி பெயர்களும் அப்படியே உள்ளன.

இறைவனும் இறைவியும் நீராட தண்ணீர் வேண்டும் எனக் கேட்டபோது, அவர்களது புதல்வன் முருகன் தன் கையிலிருந்த வேலை தூக்கி எரிய, அந்த வேல் விழுந்த இடத்தில் ஒரு நதி உருவானது. சுப்பிரமணிய நதி என அழைக்கப்பட்ட அந்த நதியை, தற்போது மண்ணியாறு என்று அழைக்கின்றனர். ஆலயத்தின் தென்புறம் இந்த வற்றாத நதி ஓடிக் கொண்டிருக்கிறது.

மாதக் கார்த்திகை, திருவாதிரை, பிரதோஷம், சித்திரைப் பிறப்பு, தீபாவளி, பொங்கல், கார்த்திகையில் வரும் தீபத் திருநாள் ஆகிய நாட்களில் இறைவனுக்கும், இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

ஆலயத்தின் தீர்த்தமான திருக்குளம் ஆலயத்தின் தென்புறம் உள்ளது.

ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் மிகவும் சிறப்பாக நடைபெறுகிறது. தை மாதம் ஏழு நாட்கள் சூரியன் தன் பொற்கதிர்களால் கருவறை இறைவனை குளிப்பாட்டுவது வழக்கம். அப்போது நடைபெறும் சூரிய பூஜையில் ஏரளமான பேர் கலந்து கொள்கின்றனர்.

ஆலயம் தினமும் காலை 9 மணி முதல் 11 மணி வரையிலும் மாலை 5 மணி முதல் இரவு 7 மணி வரையிலும் திறந்திருக்கும். இந்த ஆலயத்தில் தினசரி இரண்டு கால பூஜை மட்டுமே நடைபெறுகிறது.

தங்களது உடம்பில் கட்டியோ தேமலோ அல்லது ஏதாவது தோல் வியாதியோ ஏற்பட்டால் பக்தர்கள் இறைவன், இறைவியிடம் வேண்டிக் கொள்கின்றனர். வந்த வியாதி கரைந்து, மறைந்து போகிறது.

அந்த பக்தர்கள் வெல்லக் கட்டிகளைக் கொண்டு வந்து திருக்குளத்தில் கரைத்து தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றி மகிழ்கின்றனர்.

நாகை மாவட்டம் மணல்மேடு- பந்தநல்லூர் பேருந்து தடத்தில் உள்ள மணல்மேட்டில் இருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளது ராதாநல்லூர் என்ற திருத்தலம்.

-சி.செல்வி, திருச்சி

Next Story