ஆன்மிகம்

கிறிஸ்தவம் : கர்த்தர் புதிய கிருபையை அருள்வார் + "||" + Christianity: The Lord blesses the new grace

கிறிஸ்தவம் : கர்த்தர் புதிய கிருபையை அருள்வார்

கிறிஸ்தவம் : கர்த்தர் புதிய கிருபையை அருள்வார்
பிரியமானவர்களே! ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் என் அன்பின் வாழ்த்துக்கள்.‘இதோ, நான் புதிய காரியத்தைச் செய்கிறேன். இப்பொழுது அது தோன்றும். நீங்கள் அதை அறிவீர்களா? நான் வனாந்தரத்திலே வழியையும், அவாந்தர வெளியிலே ஆறுகளையும் உண்டாக்குவேன்.’ ஏசாயா 43:19
ஆம்! நம்முடைய கர்த்தர் சகலவற்றையும் புதிதாக்குகிறவர். நம்முடைய ஆண்டவர் செய்கிற ஒவ்வொரு காரியமும் எப்போதும் புதிதாகவும், ஆச்சரியமானதாகவும் இருக்கும். ஆகவே தான் அவர் சொல்லுகிறார் நான் வனாந்தரத்தில் வழியையும் அவாந்தரவெளியில் ஆறுகளையும் உண்டாக்குவேன்.


பொதுவாக வானந்தரத்தினுடைய மிகக் கொடுமையான காரியம், வழியை ஓரிடத்திலும் நாம் காண முடியாது. எங்கு பார்த்தாலும் காடுகளாகவே இருக்கும். நீங்கள் வனாந்தரத்திற்குள்ளே நுழைந்து விட்டீர்கள் என்றால் எவ்வழியில் வந்தோம், எந்த பக்கமாக செல்ல வேண்டும் என்று நீங்கள் பிரயாசப்பட்டாலும், உங்களால் அறியவே முடியாது. அதுதான் வனாந்தரத்தின் பரிதாபமான நிலைமை. அதைப்போல கடந்த ஆண்டு உங்கள் வாழ்க்கை ஒரு வனாந்தரமாக இருந்திருக்கலாம். இந்த நாளிலே அதே வனாந்தரத்தில் கர்த்தர் உங்களுக்காக ஒரு வழியை உருவாக்குவார். கர்த்தருடைய வாக்குத்தத்தத்தை மனப்பூர்வமாய் விசுவாசியுங்கள்.

அவ்வண்ணமாக கர்த்தர் உங்களுக்கு கூறுகிற மற்றொரு வார்த்தை அவாந்திர வெளியிலே ஆறுகளை உண்டாக்குவேன். அவாந்தரவெளி என்றால் பாலைவனம். நீங்கள் அனைவரும் அறிந்தபடி பாலைவனம் என்றாலே தண்ணீரற்ற வறண்ட பகுதி. ஆனால் கர்த்தர் உங்களுக்குச் சொல்லு கிறார் அந்த வனாந்தரத்திலும் அவரால் உங்களுக்காக ஆறுகளை உண்டாக்க முடியும். அன்றைக்கு ஏதோம் வனாந்தரத்தில் வாய்க்கால்களை வெட்ட வைத்து (2 ராஜாக்கள் 3:8,17) ராஜாக்கள் முதல் மிருக ஜீவன்கள் வரைக்குத் தண்ணீர் பருக வைத்த நம்முடைய கர்த்தர், இன்றைக்கும் ஜீவிக்கிறார். அவரே உங்கள் வனாந்தரத்தை தண்ணீர் தடாகமாக மாற்றுவார். மேலும், இந்த நாளிலும் அவர் உங்களுக்கு செய்யப் போகும் புதிய ஆசீர்வாதங்களை ஜெபத்தோடு வாசியுங்கள்.

புதிய வாழ்வு

‘அவர்கள் கட்டளைகளின்படி நடந்து, என் நியாயங்களைக் கைக்கொண்டு, அவைகளின்படி செய்ய நான் அவர்களுக்கு ஏக இருதயத்தைத் தந்து, அவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக் கொடுத்து, கல்லான இருதயத்தை அவர்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப்போட்டு, சதையான இருதயத்தை அவர் களுக்கு அருளுவேன்.’ எசேக்கியேல் 11:19

ஆம்.. இந்த நாளில் கர்த்தர் உங்களுக்குச் செய்யப்போகிற புதிய காரியம் என்ன தெரியுமா? ஒரு புதிய வாழ்க்கையை உங்களுக்கும், உங்களைச் சார்ந்தவர்களுக்கும் கர்த்தர் கொடுப்பார்.

உங்கள் குடும்ப வாழ்க்கையில் அநேக நாட்கள் சரியான மனம் திரும்புதல் இல்லாத ஆட்களோடு நீங்கள் வாழ்க்கை நடத்திக் கொண்டிருக்கலாம். இதனால் நீங்கள் மன உளைச்சலடைந்து வாழ்க்கையே வெறுத்து விடுகிற சூழ்நிலையில் நீங்கள் தாக்கப்பட்டிருக்கக் கூடும். சரிவர மனம் திரும்புதல் இல்லாத மனிதர்களோடு வாழ்வது எவ்வளவு கடினம் என்பதை அறிந்திருக்கிறேன். என்றாலும், வாக்குத்தத்தம் பண்ணினவர் உங்களுக்கு கூறும் வார்த்தையை விசுவாசத்தோடு பிடித்துக் கொள்ளுங்கள். அப்படிப்பட்டவர்கள் உள்ளத்தில் புதிய ஆவியைக் கொடுத்துக் கல்லான இருதயத்தை அவர்கள் மாம்சத்திலிருந்து எடுத்துப் போட்டு சதையான இரு தயத்தை அவர்களுக்கு அருளுவார். நிச்சயமாய் ஒரு புது வாழ்க்கையை நீங்கள் காண்பீர்கள். ஆகவே தொடர்ந்து உங்கள் குடும்பத்தின் இரட்சிப்புக்காக ஜெபித்துக் கொண்டே இருங்கள். உங்கள் ஜெபத்திற்கு நிச்சயம் பதில் கிடைக்கும். புதிய வாழ்க்கையை காண்பீர்கள்.

புதிய கிருபை

‘நாம் நிர்மூலமாகாதிருக்கிறது கர்த்தருடைய கிருபையே, அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. அவைகள் காலைதோறும் புதியவைகள்.’ புலம்பல் 3:22,23

கர்த்தருடைய கிருபை என்பது ஆச்சரியமான ஒன்றாகும். ஒன்றுமில்லாத நிலையில் நம்மைத் தேடி வருகிற ஆசீர்வாதங்களுக்கு பெயர்தான் கிருபை. காரணம் நம் எல்லாருக்காக இயேசு சிலுவையில் விலையேறப்பெற்ற ரத்தத்தை சிந்தி நம்மை மீட்டுக் கொண்டபடியால் அக்கிருபை நம்மைத் தேடி வருகிறது.

இந்நாளில் புதிய கிருபைகளை எதிர்பாருங்கள். இதைப்பெற்றுக் கொள்வதற்கு காலை நேரத்தில் கர்த்தரை சந்திக்க தீர்மானியுங்கள். ஏனெனில் நேற்றுப் பெற்ற கிருபையை இன்றைக்கு சார்ந்துக் கொள்வதைவிட அந்தந்த நாளுக்குரிய கிருபையை பெற்றுக் கொள்ள காலையில் அவருடைய முகத்தைப் பாருங்கள். பரிசுத்த வாழ்க்கைக்கு, ஜெப வாழ்க்கைக்கு, வெற்றியுள்ள வாழ்க்கைக்கு தேவ கிருபை தான் அவசியம் தேவை. உங்கள் சுயபெலத்தை, உலக ஞானத்தை, நீங்கள் பெற்ற அனுபவத்தை சார்ந்து கொள்ளாமல் ஒவ்வொரு நிமிடமும் அவருடைய புதிய கிருபையை எதிர்பார்ப்பீர்கள் என்றால் நிச்சயம் கர்த்தர் தம்முடைய புதிய கிருபையினால் நிரப்புவார். இந்நாளில் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ்வீர்கள்.

ஆகவே இந்த நாளில் உங்களுக்கு புதிய வாழ்க்கையையும், புதிய கிருபைகளையும் கர்த்தர் கொடுத்து உங்களை வழி நடத்தப் போவது நிச்சயம். கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பார்.

-சகோதரர் ராபின்சன்

அதிகம் வாசிக்கப்பட்டவை