முன்னேற்றம் தரும் மூலை அனுமன்


முன்னேற்றம் தரும் மூலை அனுமன்
x
தினத்தந்தி 30 Jan 2018 6:40 AM GMT (Updated: 30 Jan 2018 6:40 AM GMT)

தஞ்சாவூரில் மேலவீதியும், வடக்கு வீதியும் இணையும் வாயு மூலையில் மூலை அனுமன் கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் உள்ள 18 தூண்களிலும் நவக்கிரகங்கள் உள்ளிட்ட 18 தெய்வங்கள் வாசம் செய்வதாக ஐதீகம்.

எனவே 18 அகல் விளக்குகள் (மஞ்சள் துணியை திரியாக்கி) அல்லது 18 எலுமிச்சைப் பழங்களில் தீபம் ஏற்றி வழிபட வேண்டும். இதனால் பில்லி, சூனியம், செய்வினை பாதிப்பு ஏற்படாது. மேலும் இத்தல ஆஞ்சநேயருக்கு 18 என்ற எண்ணிக்கையில் வெற்றிலை மாலை சாத்தி, 18 முறை வலம் வந்து, உண்டியலில் 18 ரூபாய் செலுத்தி வழிபட்டால் சகல தோஷங்களும் விலகும். அதே போல் தொடர்ந்து 18 அமாவாசை தினங்களில் ஆஞ்சநேயரை வழிபட்டால் நினைத்த காரியம் நிறைவேறும். நீண்ட ஆயுள் கிடைக்கும்.

நவக்கிரக திசை

நவக்கிரகங்களை பிரதிஷ்டை செய்ய திசைகள் இருக்கின்றன. அந்தந்த திசையில் தான் அவற்றை பிரதிஷ்டை செய்து வழிபட வேண்டும். நவக்கிரக மண்டல அமைப்பு படி அந்த பிரதிஷ்டை அமைய வேண்டும்.

சூரியன் - கிழக்கு

சந்திரன் - மேற்கு
செவ்வாய் - தெற்கு
புதன் - வடக்கு
குரு - வடக்கு
சுக்ரன் - கிழக்கு
சனி - மேற்கு
ராகு - தெற்கு
கேது - தெற்கு

குழந்தை வடிவில் சயன பெருமாள்

பெருமாளுக்கு 108 திவ்ய தேசங்கள் இருக்கின்றன. இவற்றில் இரண்டு தலங்கள் மட்டுமே தெற்கு நோக்கி அமைந்தவை. அவை ஸ்ரீரங்கம், திருச்சிறுபுலியூர். இரண்டுமே பள்ளிக்கொண்ட பெருமாள் தலங்களில் இதில் ஸ்ரீரங்கத்தில் பெரிய வடிவிலும், திருச்சிறுபுலியூரில் பாலகனாகவும் பெருமாள் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். திவ்ய தேசங்களில் 11-வது தலமாக இருக்கும் திருச்சிறு புலியூரில் மட்டும் தான் இறைவன், பள்ளிகொண்ட கோலங்களிலேயே குழந்தை வடிவத்தில் அருள்கிறார். இரண்டாயிரம் வருடம் பழமைவாய்ந்த இந்த ஆலயத்தின் மூலஸ்தானத்தில், பதஞ்சலி முனிவரும், வியாக்ரபாதரும் இருக்கின்றனர். குழந்தை வரம் வேண்டுபவர்கள், மனநல பாதிப்பு உள்ளவர்கள், தீராத நோய் இருப்பவர்கள் இந்த ஆலய இறைவனை வழிபாடு செய்யலாம். மயிலாடுதுறையில் இருந்து பேரளம் செல்லும் சாலையில் கொல்லுமாங்குடி நிறுத்தத்தில் இறங்கி, அங்கிருந்து 3 கிலோமீட்டர் தூரம் சென்றால் திருச்சிறு புலியூரை அடையலாம்.

வாழ்வை வளமாக்கும் இரட்டை நந்தி


குழந்தை பாக்கியத்திலேயே, இரட்டை குழந்தை பிறப்பு என்பது மிகவும் அரிதான ஒன்றுதான். அப்படி பிறக்கும் இரட்டைக் குழந்தைகளின் வாழ்க்கை வளம்பெற, இரட்டைப் பிள்ளையார் அல்லது இரட்டை நந்தீஸ்வரர் அருள்பாலிக்கும் தலங்களுக்குச் சென்று வழிபாடு செய்து வருவது சிறப்பான பலனைத் தரும். பல சிவன் கோவில்களில் இரட்டைப் பிள்ளையார் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் இரட்டை நந்தீஸ்வரர், தேவகோட்டைக்கு அருகில் உள்ள நயினார் கோவிலில் அருள்பாலிக்கிறார். இவரை, இரட்டை பிள்ளை களையும் அழைத்துச் சென்று அர்ச்சனை செய்து வழிபட்டால் வாழ்வு வளம்பெறும்.

நவபாஷாணப் பெருமாள்

விருதுநகர் மாவட்டத்தில் இருக்கிறது காரிசேரி என்ற கிராமம். இங்கு லட்சுமி நாராயணப் பெருமாள் கோவில் உள்ளது. இங்குள்ள பெருமாள் விக்கிரகம், சதுரகிரி மலை சித்தர்கள் சிலரால், நவபாஷாணம் கொண்டு உருவாக்கப்பட்டது என்று கூறப்படுகிறது. இந்த நாராயணப் பெருமாளை மார்கழி மாதத்தில் 28 நாட்கள் விரதம் இருந்து வழிபட்டால் தீராத நோய்கள் தீரும் என்கிறார்கள்.

Next Story