ஆன்மிகம்

இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்! + "||" + Give thanks to the Lord!

இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்!

இறைவனுக்கு நன்றி செலுத்துங்கள்!
மனிதர்கள் ஒருவருக்கொருவர் நன்றி என்னும் வார்த்தையை அடிக்கடி பரிமாற்றம் செய்து கொள்வதை நாம் பார்க்கிறோம். நன்றி செலுத்தும் வழக்கம் மனிதர்களுக்கு இயல்பிலேயே இருக்கும் உணர்ச்சியாகும்.
ஒரு மனிதருக்கு சக மனிதரிடம் இருந்து பயன் கிடைக்கும் பொழுது அகமும், முகமும் மலர தன் நன்றியைத் தெரிவிக் கிறார். உதவி கிடைத்தவுடன் நன்றி செலுத்தும் மனிதன், தனக்கு உதவி செய்த ஒரு மனிதர் துன்பத்தில் இருக்கும் பொழுது அல்லது அவருக்கு உதவி தேவைப்படும் பொழுது கண்டுகொள்ளாமல் உதாசீனம் செய்யும் போது ‘நன்றி கெட்ட மனிதன்’ என்ற அவப்பெயரை சம்பாதித்துக் கொள்கிறான்.


ஐந்தறிவு படைத்த விலங்கினங்களே தம்மைப் பராமரிப்பவருக்கோ அல்லது ஒரு வேளை உணவு தருபவருக்கோ நன்றி விசுவாசத்துடன் இருக்கும் பொழுது, இந்தப்பண்பு நம்மிடம் இல்லை என்றால் நாம் ஆறறிவு படைத்தவர்கள் என்று சொல்லத் தகுதியற்றவர்கள். இன்னும் நாம் மனிதர்களே அல்லர் என்று கூட சொல்லலாம்.

‘யார் மனிதர்களுக்கு நன்றி செலுத்தவில்லையோ, அவர் இறைவனுக்கு நன்றி செலுத்தியவராக மாட்டார். ஒரு மனிதருக்குப் பிற மனிதர்கள் மீதுள்ள கடமைகளில் முக்கியமானது, தமக்கு நன்மை செய்தவருக்கு நன்றி தெரிவிப்பதாகும்’.

இதில் இன்னும் ஒன்றையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். உதவி செய்தவர்களை நினைவில் வைத்து தங்களால் முடிந்த பிரதி உபகாரம் செய்ய முடியவில்லை என்றாலும், அவர்களுக்காக பிரார்த்தனை செய்வது ஒரு ஒழுங்கு. அதுபோலவே பிறருக்கு உதவி செய்பவர்கள் தங்களால் பயன் அடைந்த மக்கள், தங்களுக்கும் ஏதாவது ஒரு உதவி செய்தே ஆக வேண்டும் என்றோ, தங்கள் காலடியில் கிடக்க வேண்டு மென்றோ அல்லது தங்கள் சொல் கேட்டு நடக்க வேண்டும் என்றோ நினைப்பது தவறு.

ஒரு மனிதருக்கு மற்றொரு மனிதர் மூலம் உதவி கிடைக்கும் பொழுது, அந்த உதவி அல்லாஹ்வின் நாட்டப்படியே கிடைத்த தென்றும், இறைவன் நாடியிருக்காவிட்டால், இன்ன மனிதரிடம் இருந்து இந்த உதவி எனக்குக் கிடைத்திருக்காது என்றும் உறுதியாக நம்பவேண்டும்.

உதவி செய்த மனிதருக்கு நன்றி செலுத்தும் அதே வேளையில் இறைவனுக்கு நன்றி செலுத்த மறந்து விடக்கூடாது. உதவி தேவைப்படும் நேரங்களில் எந்த மனிதரையும் நாடிச் செல்லாமல் இறைவனிடமே அழுது புலம்ப வேண்டும். உன்னைத் தவிர எனக்கு வேறு கதி இல்லையென்று மன்றாடிக் கேட்க வேண்டும். எந்தக் காரணத்தினாலும் மனிதர்கள் முன் அழுது கையேந்தக் கூடாது.

உள்ளத்தில் நாம் மறைத்து வைத்திருக்கும் அனைத்தையும் அறியும் வல்லமை படைத்த அந்த இறைவனிடத்தில் இருந்து நமக்கு எப்படியும் உதவி கிடைக்கும் என்ற உறுதி நம் உள்ளத்தில் எப்பொழுதும் நிலைத்திருக்க வேண்டும்.

கடினமான நேரங்களில் இரு கரம் ஏந்தி இறைவனிடம் உதவி கேட்கும் பெரும்பாலான மனிதர்கள், உதவி கிடைத்தவுடனோ அல்லது மகிழ்ச்சியான தருணங்களிலோ இறைவனை மறந்து விடுவதுடன் அவனைத் துதி செய்வதுமில்லை.

இறைவன் தன் திருமறையில் கூறுகிறான்: ‘(மனிதர்களே) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம்; அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித் தந்தோம். எனினும் நீங்கள் நன்றி செலுத்துவதோ மிகவும் சொற்பமேயாகும்’ (7:10).

சிறு, சிறு உதவிகள் கிடைக்கும் பொழுது உதவி செய்யும் மனிதர்கள் மீது பரிவும், பாசமும் காட்டும் நாம், நம்மை இந்த உலகத்தில் பிறக்கச் செய்து, நமக்கு உறவுகளுடன், உணவு, உடை, இருப்பிடம், செல்வம், நோயற்ற நாட்கள் என எவ்வளவோ அருட்கொடைகளை அள்ளி, அள்ளி வழங்கியுள்ள இறைவனுக்கு எவ்வளவு விசுவாசமாக இருக்க வேண்டும் என்பதையும், அவன் மீதே அளவற்ற

அன்பையும், நன்றியறிதலையும் கொண்டிருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இறைவன் நமக்குத் தந்த அருட்கொடைகளுக்காக, நம் வாழ்வையே அர்ப்பணிக்கச் சொல்லி கட்டளை இடவில்லை. நமது கடமைகளான குடும்பத்தை நிர்வகித்தல், சம்பாத்தியம், உண்ணுதல், உறங்குதல். பொழுதுபோக்குகள், இயற்கை கடன்கள் கழித்தல் போன்ற தேவையான வி‌ஷயங் களுக்கு நம்முடைய நேரத்தை செலவிடுதல் தவறல்ல.

அதே நேரத்தில் இவ்வுலக வி‌ஷயங்களிலேயே மூழ்கி விடாமல், ஐவேளைத் தொழுகைகளை உரிய நேரத்தில் தொழுவதுடன், நேரம் கிடைக்கும் போது உபரியான தொழுகைகளையும் நிறைவேற்றி நம்முடைய இறைவனுக்கு நம் நன்றியைத் தெரிவிக்க வேண்டும். இன்னும் ஏழைகள், அநாதைகள், தேவையுடைய உறவினர்கள், உறவினர் அல்லாத மக்கள் ஆகியோருக்கு உதவிகள் செய்தல் போன்ற நற்செயல்களை செய்வது, இறைவனின் அருட் கொடைகளுக்காக நாம் நன்றி செலுத்துதல் போல் ஆகும்.

‘நபி (ஸல்) அவர்கள் தங்கள் கால்கள் வீங்கும் அளவுக்கு நின்று தொழுவார்கள். இது பற்றி அவர்களிடம் கேட்கப்பட்டபோது, நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா? என்று பதில் அளித்தார்கள்’ (புகாரி).

பாவங்களுக்கு அப்பாற்பட்ட நபி (ஸல்) அவர்களே தங்களை வருத்திக்கொண்டு தொழுது, தங்களின் நன்றியை இறைவனுக்கு செலுத்தக் கூடியவர்களாக இருந்திருக்கிறார்கள் என்றால், மிகச்சாதாரண மனிதர்களான நாம் எவ்வளவு நன்றி உடையவர்களாக இருக்க வேண்டும் என்பதை சிந்திக்க வேண்டும். அத்துடன் நம்மைப் படைத்த இறைவனை நினைவில் இருத்தி, ‘அல்ஹம்துலில்லாஹ்’ (எல்லாப்புகழும் அல்லாஹ் ஒருவனுக்கே) என்று நெஞ்சார, வாயார அவனைப் புகழ்ந்து நன்றி செலுத்தக் கூடிய மக்களாக நாம் இருக்க வேண்டும்.

ம. அஹமது நவ்ரோஸ் பேகம், சென்னை–84.