சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்


சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்
x
தினத்தந்தி 6 Feb 2018 10:18 AM GMT (Updated: 6 Feb 2018 10:18 AM GMT)

சமூகத்தில் தாக்கங்களை ஏற்படுத்த முடியும். ஊருக்கு உபதேசம் செய்யும் உத்தமர்களால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.

‘‘சொன்னதைச் செய்- அதை நீயே முதலில் செய். மாற்றம் உன்னில் இருந்தே தொடங்கப்படும்’’ - இக்கோட்பாட்டைப் பின்பற்றுபவர்கள் மட்டுமே வாழ்வில் வெற்றி பெற முடியும்; சமூகத்தில் தாக்கங்களை ஏற்படுத்த முடியும். ஊருக்கு உபதேசம் செய்யும் உத்தமர்களால் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 23 ஆண்டுகளில் அரேபிய மக்களின் வாழ்க்கையைப் புரட்டிப் போட்டார்கள். அரேபிய சமூகத்தில் முழுமையான மாற்றங்களைக் கொண்டு வந்தார்கள். அதற்கான காரணங்களில் ஒன்று, தாம் சொல்லியதைச் செய்வார். எல்லோருக்கும் முன்னதாக அவரே செய்வார். சமயக் கடமைகள், நற்பண்புகள், சமூக சேவை, அநீதிகளுக்கு எதிரான போராட்டம் என எல்லாவற்றிலும் அவரே முதல் ஆளாக நிற்பார். இதற்குச் சான்றாக அவரது வாழ்வில் இருந்து சில நிகழ்வுகளைக் காணலாம்.

மதீனாவாசிகள் ஒருநாள் இரவு ஒரு பலத்த ஓசையைக் கேட்டு அச்சமுற்றனர். ஓசை வந்த திசையை நோக்கி மக்கள் விரைந்து சென்றனர். ஆனால் நபிகள் நாயகம் அதற்கு முன்பே ஓசை வந்த இடத்திற்குச் சென்று, அதன் விவரத்தை அறிந்து திரும்பிக் கொண்டிருந்தார்கள். குதிரையில் எந்தவித சேணமும், கடிவாளமும் இன்றி சென்று வந்தார்கள். மக்களைப் பார்த்து, ‘‘நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை’’ என்று கூறினார்கள். (நூல்: புகாரி, முஸ்லிம்)

ஒரு பயணத்தின்போது, சமையல் செய்வதற்காக தோழர்கள் விறகுகளைப் பொறுக்கப் புறப்பட்டனர். நபிகள் நாயகம் அவர்களோடு இணைந்து கொண்டார்கள். தோழர்கள், நபிகளாரை வர வேண்டாம் என்று தடுத்தும் அதனை அவர்கள் பொருட் படுத்தவில்லை. ‘‘நான் உங்களில் ஒருவன்; என்னை நீங்கள் தனிமைப்படுத்தி விடாதீர்கள்’’ என்றார்கள்.

அன்றொரு நாள் ஒரு கிராமவாசி பள்ளிவாசலில் சிறுநீர் கழித்து விட்டார். தோழர்கள், அம்மனிதரை அடிக்க முற்பட்டபோது, நபிகளார் அவர்களைத் தடை செய்து, ஒரு வாளியில் தண்ணீர் கொண்டு வரச் செய்து, தமது கரங்களாலேயே துப்புரவு செய்தார்கள். இப்பணியைச் செய்யும்படி தோழர்களை நபிகளார் ஏவியிருந்தால் அவர்கள் முண்டியடித்துச் செய்வதற்குத் தயாராக இருந்தனர்.

பள்ளிவாசல் கட்டும் பணியிலும் அவர் பங்கேற்றார். மக்காவில் இருந்து புலம் பெயர்ந்து நபிகளார் மதீனா சென்ற பின் செய்த முதற்பணி பள்ளிவாசல் கட்டியதே. இரண்டு அநாதைகளுக்குச் சொந்தமான இடத்தை விலை கொடுத்து வாங்கி பள்ளிவாசல் கட்டும் பணி தொடங்கியது. தோழர்களோடு தோழராக தாமும் பள்ளிவாசல் கட்டுவதற்கு மண் சுமந்தார்.

சில வேளைகளில் நபிகளார், போர்க்களங்களைச் சந்திக்கும் கட்டாயத்திற்கு உள்ளானார். போரிடுவது என்று முடிவு எடுக்கப்பட்டால், முதலாவதாக போர்க் கவசம் தரிப்பது அவராகத்தான் இருக்கும்.

ஒரு போரில் எதிரிகளின் முன்னேற்றத்தைத் தடுக்க அகழ் தோண்டுவது என்று முடிவு எடுக்கப்பட்டது. அகழ் தோண்டும் பணியில் தோழர்களோடு தம்மையும் இணைத்துக் கொண்டார், நபிகளார்.

23 ஆண்டு கால பணிக்குப் பின்னர், அவரது மறைவுக்கு மூன்று மாதத்திற்கு முன்னர், மக்காவில் உள்ள அரபா பெரு வெளியில் திரண்டிருந்த ஒரு லட்சத்திற்கும் அதிகமான தோழர்களிடையே இறுதி உரை ஆற்றினார்.

‘‘அறிந்து கொள்ளுங்கள்! (இஸ்லாத்திற்கு முந்தைய) அறியாமைக் காலத்து அநாகரிக பழக்க வழக்கங்கள் அனைத்தும் இப்போது எனது காலடியின் கீழ் மிதிக்கப்படுகின்றன. அறியாமைக் காலத்தில் நடந்த கொலைகளுக்கு நீங்கள் பழி வாங்குவதை விட்டு விட வேண்டும். முதலாவதாக எங்கள் குடும்பத்தில் கொலை செய்யப்பட்ட ரபிஆ - இப்னு - ஹாரிசின் மகனுக்காக பழி வாங்குவதை நான் விட்டு விடுகிறேன்.

வட்டி இன்றோடு தடை செய்யப்படுகிறது. முதலை மட்டும் நீங்கள் வசூலித்துக் கொள்ளலாம். முதலில் என் குடும்பத்தைச் சேர்ந்த அப்பாஸ்- இப்னு- அப்துல் முத்தலிபிற்கு வர வேண்டிய வட்டி பாக்கியை தள்ளுபடி செய்கிறேன்’’

இவ்வாறு எல்லா விஷயங்களிலும் தாம் சொன்னதைச் செய்ததோடு, அதைத் தானே முதலில் செய்பவராகவும் இருந்தார்.

இதனைத் தாண்டியும் அவரிடத்தில் இன்னொரு சிறப்பம்சம் இருந்தது. அது மக்களுக்கு அவர் ஏவியதை விட அதிகமாகவே செய்வார்.

ஒரு நாளைக்கு ஐந்து முறை தொழுமாறு மக்களுக்கு கட்டளையிட்டார். ஆனால் அவரோ எட்டு முறை தொழுதார். இரவில் மூன்றில் ஒரு பகுதி விழித்து வணங்கினார். நபிகளாரின் மனைவி ஆயிஷா ஒருமுறை, ‘‘இறைவன் உங்களுடைய எல்லாப் பாவங்களையும் மன்னித்து விட்ட பிறகு உங்களை ஏன் நீங்கள் சிரமத்திற்குள்ளாக்குகிறீர்கள்?’’ என்று வினவியபோது நபிகளார், ‘‘நான் ஒரு நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டு மல்லவா?’’ என்று பதில் அளித்தார்.

ஆண்டில் ஒருமுறை 30 நாட்கள் நோன்பு நோற்பது கடமை என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அவர் வாரத்தில் இரண்டு நாட்கள் உபரியாக நோன்பு நோற்றார். இடைவெளியின்றி தொடர்ந்து நோன்பு நோற்க வேண்டாமென மக்களுக்கு அறிவுரை பகர்ந்தார். ஆனால் அவரோ இரவில் கூட உணவு அருந்தாமல் தொடர்ந்து நோன்புகள் நோற்றார்.

வருமானத்தில் ஒரு சிறிய பகுதியை தானமாகக் கொடுக்க வேண்டுமென மக்களைப் பணித்தார். ஆனால் அவரோ, தனக்கென எதுவும் வைத்துக் கொள்ளாமல் அனைத்தையும் தானமாக வழங்கினார். ‘‘உஹது மலையே தங்கமாக மாற்றி என்னிடம் கொடுக்கப்பட்டாலும், மூன்று நாட்களுக்குள் அதனை நான் தானமாக வழங்கி விடுவேன். அதில் இருந்து ஒரு தினார் கூட என்னிடத்தில் இருப்பதை நான் விரும்ப மாட்டேன்’’ என்று கூறினார்.

இவ்வாறு நபிகள் நாயகம், சொன்னதைச் செய்தார்; அதையும் முதலிலேயே அவர்தான் செய்வார்; மக்களுக்குக் கட்டளையிட்டதை விட அதிகமாகச் செய்வார்.

இப்பண்புகளை கொண்டிருந்த மாத்திரத்தினாலேயே, அவரால் சிறந்த தலைவராகவும், வழிகாட்டியாகவும் திகழ முடிந்தது.

நபிகளாரின் இந்த முன்மாதிரியைப் பின்பற்றி வாழ்ந்தால், நம்மையும் உயர்த்தலாம்; நாட்டையும் உயர்த்தலாம்.

-டாக்டர் கே.வி.எஸ்.ஹபீப் முகம்மத்

Next Story