திருமுறைக்குப் பண் அமைத்த தேவாரத் தலம்


திருமுறைக்குப் பண் அமைத்த தேவாரத் தலம்
x
தினத்தந்தி 7 Feb 2018 7:15 AM GMT (Updated: 7 Feb 2018 7:15 AM GMT)

திருஞானசம்பந்தர் காலத்தில் பாடல் பெற்றதால் இத்தலம் அவரின் காலமான ஏழாம் நூற்றாண்டில் சிறப்புடன் விளங்கியதை அறிய முடிகிறது.

சிவபெருமானின் சாபத்தால் ருத்திரசன்மர் என்ற ஊமைக் குழந்தையாக அவதரித்த முருகப்பெருமான், வழிபட்டுப் பேசும்பேறு பெற்ற தலம், புலிக்கால் முனிவர் வழிபட்ட கோவில் என பல்வேறு பெருமைகள் கொண்ட தலமாக விளங்குவது, கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ள, ‘ராஜேந்திரபட்டினம் திருத்தலம்’.

புராண வரலாறு

சிவபெருமானின் சாபத்தால் ருத்திரசன்மர் என்ற ஊமைக் குழந்தையாக அவதரித்த முருகப்பெருமான், இத்தலத்து இறைவனை வழிபட்டுப் பேசும்பேறு கிடைத்ததாகத் தலபுராணம் கூறுகின்றது. இதன் காரணமாக, இத்தலத்தின் இறைவனுக்குக் ‘குமாரசுவாமி’ என்ற பெயரும் வழங்கப்படுகிறது. இதேபோல, இத்தலம் வியாக்ரபாதர் எனும் புலிக்கால் முனிவர் பூஜித்து வழிபட்ட தலமாக அமைந்துள்ளது. தென்புலியூர் எனும் சிதம்பரம் அருகே பெரும்பற்றப்புலியூர், கடலூர் அருகே வடபுலியூர் எனும் திருப்பாதிரிப்புலியூர், ஓமாப்புலியூர், காட்டுமன்னார்குடிக்கு அருகில் உள்ள பெரும்புலியூர் ஆகிய தலங்களும் புலிக்கால் முனிவர் வழிபட்ட தலங்களாகும்.

இத்தலம் திருஞானசம்பந்தர் காலத்தில் பாடல் பெற்றதால், அவரின் காலமான ஏழாம் நூற்றாண்டில் இது சிறப்புடன் விளங்கியதை அறிய முடிகிறது. பெருமைமிக்க, இத்தலத்தின் இறைவன் மீது கொண்ட விருப்பத்தால், தேவர்களும், முனிவர்களும் பறவைகளாக வழிபட்டு வந்தபோது, வேடர்களின் வேட்டையில் தங்களைக் காத்துக்கொள்ள, வெள்ளெருக்கஞ்செடிகளாகி, இறைவனை வணங்கியதாகவும் தலபுராணம் கூறுகிறது. அதனால் இத்தலம் ‘எருக்கத்தம்புலியூர்’ என்றும் அழைக்கப்படுகிறது.

இதேபோல், ராஜராஜசோழனுக்கு மகப்பேறு வரம் பெற்றதால் பிறந்த ராஜேந்திர சோழன் பெயரால் இத்தலம் ‘ராஜேந்திரப்பட்டினம்’ என வழங்கப்படுகிறது. மேலும் பல்லவர், சோழர், பாண்டியர் காலத் திருப்பணி செய்யப்பட்டதைக் கல்வெட்டுகள் உணர்த்துகின்றன.

தொன்மைச் சிறப்பு

கி.பி. 1940-41-ம் ஆண்டு வரை இந்திய தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ள ஐந்து கல்வெட்டுகள் இத்தலத்தின் தொன்மை சிறப்பை எடுத்துக் காட்டுகின்றன. இந்த ஆலயத்தின் மண்டபத்தில் அமைந்துள்ள தமிழ், சமஸ்கிருத மொழிக் கல்வெட்டு பல்லவர் காலத்தைக் குறிப்பிடுகிறது.

இதேபோல, குமரேசுவரர் சன்னிதியில் கிடைத்த கல்வெட்டு, ஜடாவர்ம முதலாம் சுந்தரபாண்டியனின் (கி.பி. 1265) கல்வெட்டு மூலம் கோதண்டராமர் சன்னிதி உருவாக்கப்பட்டு ஆவணிப் பூசத்தன்று விழா எடுத்ததையும் குறிப்பிடுகிறது. மற்றொரு கல்வெட்டு ஆரூர் திருவாகீஸ்வரமுடையாருக்கு 130 பொன் காசுகளை நெம்மேலி உடையான் என்பவர் கொடையளித்த விவரத்தைக் குறிப்பிடுகிறது. இதன்மூலம் பல்லவர், சோழர், பாண்டியர் காலத்தில் இவ்வாலயம் போற்றப்பட்டதை அறிய முடிகிறது.

இலக்கியங்கள்

திருஞானசம்பந்தர் இயற்றிய ‘தேவாரம்’, அருணகிரிநாதர் இயற்றிய ‘திருப்புகழ்’, வடலூர் ராமலிங்கம் சுவாமிகள் இயற்றிய ‘திரு வருட்பா’ ஆகியவை பாடல் பெற்ற தலமாக இது விளங்குகின்றது. இத்தலத்து இறைவனை வழிபடுவோருக்கு வினைகள் அணுகாது என்பது திருஞான சம்பந்தரின் உறுதிமொழியாக உள்ளது.

ஆலய அமைப்பு

மூன்று நிலை ராஜகோபுரம் ஐந்து முகமாய் ஐந்து கலசங்களைத் தாங்கி நம்மை வரவேற்கிறது. அருகே பிரமாண்ட வடிவில் திருக் குளம் அமைந்துள்ளது. ராஜகோபுரத்தின் வலதுபுறத்தில் எளிய வடிவிலான விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது. கொடிமரத்திற்கு அருகே பலிபீடமும், நந்தி மண்டபமும் அமைந்துள்ளன.

வெளிச்சுற்றில் இடதுபுறம் நவக்கிரக சன்னிதி, நால்வர் சன்னிதி, திருநீலகண்ட யாழ்ப்பாணர், மனைவி சூளாமணி ஆகியோர் சன்னிதிகள் அமைந்துள்ளன. மகாகணபதி, விசுவநாதர், விசாலாட்சி, முருகப்பெருமான், லட்சுமி ஆகிய சன்னிதிகளை அடுத்து கோட்ட மூர்த்தங்களாக, விநாயகர், தட்சிணாமூர்த்தி, அவருக்கு மேற்புறம், சிறிய கோவில் அமைப்பு காணப்படுகிறது. அதில் சட்டைநாதர் காட்சி தருகின்றார். அவரைத் தரிசிக்க படிக்கட்டு வசதியும் உள்ளது. துர்க்கை அதன் அருகே சண்டேசுவரர் வடிவம் அமைந்துள்ளது.

துவாரபாலகர்களைக் கடந்த பின் நடுநாயகமான இறைவன் நீலகண்டேசுவரர் லிங்க வடிவில் கிழக்கு முகமாய் அருள்காட்சி வழங்குகிறார். இவர் சுவேதார்க்கவனேசுவரர், குமாரசுவாமி என்றும் வழங்கப் படுகிறார். இவரே இத்தலத்தின் திருவிளையாடல்கள் அனைத்திற்கும் காரணமானவராக விளங்குகிறார். சுவாமியின் சற்று வலதுபுறம் அன்னை நீலமலர்க்கண்ணி சன்னிதி முகமாய் அமைந்துள்ளது. அபயவரத முத்திரையுடன் அன்னை தரிசனம் தருகிறார். அன்னை அபீத குஜாம்பாள், நீலோற்பலாம்பாள் என்றும் வழங்கப்படுகிறார்.

பரிகாரத்தலம்

மகப்பேறு வரம் மற்றும் வாய் பேச இயலாத குழந்தைகளுக்கு பரிகாரத் தலமாக இது போற்றப்படுகிறது. அதேபோல், வெண்குட்டம் நோய் பாதித்தவர்களுக்கும் நோய் நீக்கும் தலமாக விளங்குகின்றது.

தலமரம், தீர்த்தம்

வெள்ளெருக்கைத் தலமரமாகக் கொண்ட திருக்கோவில் இது. இத்தலத்தின் தீர்த்தம், நீலோற்பல தீர்த்தம் ஆகும். இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் வருகிற 11-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ளது.

அமைவிடம்

கடலூர் மாவட்டத்தில் விருத்தாசலம்-ஜெயங்கொண்டம் சாலையில், விருத்தாச்சலத்திலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ள ராஜேந்திரபட்டினத்தில் இத்தலம் அமைந்துள்ளது. மேலும் ஸ்ரீமுஷ்ணம் என்ற திவ்யதேசம் அருகே, தெற்கே சுமார் 10 கி.மீ. தொலைவில் அமைந்திருக்கிறது. 

-பனையபுரம் அதியமான்

Next Story